அமுதமொழி – விகாரி – தை – 10 (2020)


பாடல்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியா நின்ற வுமையே.
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்.
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடனுன்னதம்மா.
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன்மணியு நீ.
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – அன்னையில் சிறப்புகளை உரைத்து தான் அன்னையின் மைந்தன் என்பதால் தன்னை காக்கும் பொறுப்பு அன்னைக்கு இருக்கிறது என்பதையும் கூறும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! ஈசனுக்கும் உமைக்கும் உரித்தான சிவசிவ எனும் ஒலி வடிவமாகவும், மகேஸ்வரனிடத்தில் நிலைபெறும் மகேஸ்வரியாகவும், பரமனிடத்தில் நிலை பெறும் பரமேஸ்வரியாகவும், சிரசில் அமையப் பெற்றதும், புருவ மத்தியில் ஒளிரக் கூடியதுமான சிரோன்மணியாவும், பார்வதி ஆகிய மனோன்மணி ஆகியவளும் நீயே ஆகி, வனப்புடன் கூடிய  அழகிய வடிவம் கொண்டும், என்றும் அழிவில்லாவதலாகவும், அண்டங்கள் அனைத்தும் அதன் வழியில் நடைபெற பொறுப்பினை ஏற்றுக் கொண்டும், தோல்கருவியால் இசைக்கப்படும் ஒலியானவளாகவும், அந்த ஒலிக்கு காரணாமாகவும், நிரந்தரமானவளாகவும், பரம்பரையின் ஆதியாகவும், அனாத ரட்சகியாகவும் நீயே இருக்கிறாய்; இந்த ஜகம் எல்லாம் உன்னுடைய மாயத்தோற்றம் என்பதாலும் யான் சிறியவன் என்பதாலும் புகழ என்னால் முடியாது; (ஆனாலும்) உனக்குச் சொந்தமான உன்னுடைய மைந்தன் ஆனதால் என்னை இரட்சிக்க உனக்கு கடன் உள்ளதம்மா; வெள்ளிக்கிழமை உன்னை தரிசித்தவர்களின் துன்பங்களை நீக்கி விடுவாய்; மனத்தினால்  உன்னுடைய பாதம் எனப்படுவதான திருவடிகளைத் தொழுபவர்களின் துயரத்தினை மாற்றி விடுவாய்.

விளக்க உரை

 • சௌந்தரியம் – அழகு, எழில், கவர்ச்சி, ஈர்ப்பு, வனப்பு
 • துரந்தரி – பொறுப்பு ஏற்போள்
 • மாய்கை – பொய்த்தோற்றம்
 • துன்பத்தை நீக்கி விடுவாய், துயரத்தை மாற்றி விடுவாய் – இயலாமையால் வருவது துன்பம்; (இக லோகம் , குறுகிய கால அளவு), இல்லாமையால் வருவது துயரம்(பர லோகம், நீண்ட கால அளவு)
 • சிவசிவ — ஈசனுக்கும் உமைக்கும் உரித்தானது ஆகையால் சிவசக்தி ரூபமாக (பஞ்சாட்சரத்தின் வேறுவகையாக) ஜெபித்தல்
 • நிரந்தரி துரந்தரி என்றும் துரந்தரி நிரந்தரி என்றும் இருமுறை இப்பாடலில் இடம் பெறுகின்றன.
 1. தன்னிலை மறந்த யோகத்தில் இருப்பதால் இவ்வரிகள் என்றும்,
 2. இகம், பரம் என்பதற்காக இருமுறை என்றும்,
 3. சிவசக்தி வடிவமாக உரைத்தலில் பொருட்டு இருமுறை எனவும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • ஜெகமெலா முன்மாய்கை
 1. (புற) உலகம் பொய்வடிவானது, மெய்யானவள் நீ எனவும்,
 2. நீயே மாயையின் வடிவமாகவும் இருப்பதால் (மஹாமாயா – லலிதா சகஸ்ரநாமம்) உன்னைப் புகழ சிறியவனான என்னால் ஆகாது எனவும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *