அமுதமொழி – விகாரி – தை – 28 (2020)


பாடல்

மூலம்

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே

பதப்பிரிப்பு

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் அருள் தானாகவே வெளிப்பட்டு அருளும் திறத்தைக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னிச்சையாக செல்லும் மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடை செய்யுங்கள்; கோபத்தையும், வெறுப்பையும் அறவே விட்டு விடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்;  புறத்தில் அசைவற்று இருப்பது போலே அகத்தில் அசைவற்று இருங்கள்; இவ்வாறு செய்தால் மிகக் கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடைய தம்பியாகிய தாருகன் கிரௌஞ்ச மலையையும் பிளந்து அது துகளாகி பட்டு அழியும் படி கூர்மையான வேலினை விடுத்து ஏழு உலகங்களும் பிழைக்குமாறு அருளிய தனிப் பெருந்தலைவனாகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும்.

விளக்க உரை

  • வெகுளி – கோபம், வெறுப்பு, கள்ளங்கபடம்/விகல்பம் அற்றவர்; அப்பாவி
  • எழு பாரும் உய்ய – ஏழ் உலகும் உய்ய
  • கொடும் கோபச் சூருடன் – கோபம் கொண்ட சூரனையும்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply