அமுதமொழி – விகாரி – தை – 7 (2020)


பாடல்

மூலம்

பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே?

பதப்பிரிப்பு

பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து – முருகப் பெருமானின் வடிவ அழகினையும், அவனின் ஆயுதங்களையும் பற்றி பேசாமல் பெண்ணாசையில் வீழ்ந்து இருப்பின் முக்தி அடைய இயலாது என்பதை கூறும் பாடல்.

பதவுரை

ஏ மனமே! திருச்செந்தூர் திருமுருகப் பெருமானின் திருக்கையில் விளங்குவதும் எப்பொழுதும் வெற்றியைத் தருவதுமான வேலாயும்  என்று சொல்லாமலும்; வெற்றியைத் தருவதாகிய மயில் என்று சொல்லாமலும்; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்று சொல்லாமலும் அவைகளைப் பற்றி புகழாமலும் பெண்களில் சொற்கள் பால் போன்று இருக்கிறது என்றும், அவர்கள் பாதங்கள் பஞ்சைப் போன்று மென்மையாக இருக்கிறது என்றும், அவர்களின் கண்கள் மீனைப் போன்று இருக்கின்றன எனவும் சொல்லித் திரிகின்றாய்; ஆதலால் நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனம்?

விளக்க உரை

  • கொற்றம் – வெற்றி

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply