பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரக்ஷிக்கவும் பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த பாலருக்கு அருள் புரியவும் சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும் சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னை ஏகாம்பரி நீயே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – தனது விருப்பங்களை அன்னை காமாட்சியிடம் விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
இந்த உலகத்தில் இருக்கும் காலத்தில் நல்வினை பற்றி நல்ல முறையில் பொருள் ஈட்டி செல்வம் பெற்றிடவும், அதை சிறந்த முறையில் பாதுகாத்திடவும், உன்னிடத்தில் மெய்யான பக்தி கொண்டு உன்னுடைய திருவடிகளை நித்தமும் காணும் பாக்கியன் உடைய பாலகனாகிய எனக்கு அருள் புரியவும், பெருமை பொருந்திய இந்த தேகத்தில் சிறு நோய்கள் வராமலும், செம்மை உடையவனாகிய கலிபுருஷன் வந்து அணுகா வண்ணமும், உன்னுடைய சேய் ஆகிய எனக்கு பாக்கியங்களைத் தந்து, விதிக்கப்பட்ட நெறி முறைகளில் வாழ்ந்து வெற்றி பெற்று வாழ்ந்து வரவும், உயிர்களிடத்தில் அன்பு,தயவு போன்றவை இல்லாமல் காலம் முடிந்த உடன் அதை நிறைவேற்ற வரும் காலன் என்னைத் தொடர்ந்து வர ஒட்டாமல் என்னை அன்புடன் காத்திடுவாய்; அதுமட்டுமின்றி உன்னிடத்தில் அன்பு மிக பூண்டு உன்னைப் பற்ரி சிறியவன் ஆகிய நான் சொன்ன கவியில் இருக்கும் பிழைகளைப் பொறுத்து காக்க வேண்டும்.
கருத்து – ஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும்பாடல்.
பதவுரை
தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.
விளக்கஉரை
தலம்- தென்குரங்காடுதுறை
விண்டார் – பகைவர்
விமலன் – மலமில்லாதவன்.
இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
கொண்டான் – கொண்ட சிவபிரான்.
திருமுறையில்குறிப்பிடப்பட்டுள்ளமலர்கள் – இண்டு
புகைப்படம் : தினகரன்
தோற்றமும் தன்மையும்
வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.
மருத்துவ குணங்கள்
இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்
அதிகை வீரட்டத்தை தலத்தில் எழுந்து அருளும் தூயோனும், சகல உயிர்கள் இடத்திலும் அவைகள் காத்து ரட்சிக்கப்படுவதன் பொருட்டு பந்தம் கொண்டு அருளுதலை செய்ய மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன் ஆனவனும், பெரியதான பவள மலை போன்றவனும், சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்ந்து இருப்பவனாகிய எம் பெருமானுடைய திருவடிகள் அன்றைய தினத்தில் மலர்ந்த தாமரைப் மலர்கள் போன்றவை; தன் வலிமையை ஆணவமாகக் கொண்டு இமயமலையை பெயர்த்து எடுத்த இராவணனுடைய ஆற்றலையும் போக்கியவை; ஏனைய பொருள்களும், உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே இருப்பவை; ஒலியினை எழுப்பி எரியக்கூடிய கழலை உடைய எம்முடைய மூர்த்தி நீண்ட வளர்ந்த வடிவினை கொண்டவை.
விளக்கஉரை
போது அலர்ந்த, அரக்கனையும் (உம்மை உயர்வு சிறப்பு) – முறையே மென்மையும் வன்மையும் அருளிய திறம் கூறல்
முந்தாகி – முதற்காலமாய் நின்று(சிவதத்துவ நிலை)
நான்காவது தொடர் (முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தி) – அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற சதாசிவ தத்துவ நிலை
ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் ஈசுவரத் தத்துவ நிலை
வெந்தாரது நீறு – இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும், அனைத்தும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் உணர்த்தியது
முந்தாகி – உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல்
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி – பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகன் என்ற விளக்கம் சில இடங்களில் காணப்படுகிறது; இது பொருந்தாமையால் இந்த விளக்கம் விலக்கப்படுகிறது.
கருத்து – சிவபூஜை முறைகளைக் கூறி, அதை செய்வதால் அவர்கள் முன்னோர்கள் நரக ஜன்மத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
இவ்வாறு உரைத்த படி திறமையாக சிவ பூஜை செய்வதன் பலன்களைக் கேட்பாயாக; கோடி ஜன்மங்களாக நரக ஜன்மத்தில் அழுந்தி இருக்கும் அவனுடைய முன்னோர்கள் இந்த சிவ பூஜை செய்வதால் விலக்கப்படுவார்கள்; இதை பொய்யாக உரைக்கவில்லை; இதை பயிற்சி செய்து பார்ப்பாயாக; புலத்தியனை உந்தனுக்கு இவ்வாறான சிவபூஜை செய்வதன் கருவைச் சொன்னேன்; இந்த பூஜை முறையில் என்னை வைத்து சிவனைவைத்து மௌனமாக அந்த சிவத்தை நோக்குவாயாக.
கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.
பதவுரை
உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால் யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.
இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங் கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும் அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய் முத்தியிலே நிற்கும் முறை
சிவஞானபோதம்
கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.
விளக்கஉரை
இந்தனம் – விறகு
அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.
கருத்து – இருமைகளை விலக்கி, தியான நிலையில் சித்ததன்மையுடன் வாழ்பவர்களைப் பற்றி கூறும் பாடல்.
பதவுரை
சொல்லக் கூடிய சொல்லாகவும், அதன் பொருளாகவும் இன்றி சூழ்ந்திருக்கும் உருவமாகவும் இன்றி, உலக வாழ்வின் அல்லல் ஏதுவுமின்றி, ஒளியினால் ஏற்படுவதாகிய பகல் ஏதுவும் இன்றி அகண்ட பூரணமாகி , நல் இன்பத்தினை தருவதாகிய சிவமாகி அதை நாடி இரு வினைகளை ஆகிய நல் வினை, தீவினை ஆகியவற்றை அழித்து நிற்பவர்களது சிந்தை எப்பொழுதும் நல்வழியில் சென்று சித்தராய் வாழ்வார்கள்.
விளக்கஉரை
உருவமன்றி, அல்லன்றி , பகலன்றி – அருவமன்றி, இன்பமன்றி, இரவின்றி எனும் இருமைகள் மறை பொருள்கள். இருமைகள் விலகி சித்த தன்மையுடன் வாழ்வர் என்பது மறை பொருள்.
தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன்பிறவியுறவு கோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியையாண்டுமென்ன சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்துமென்ன சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ! இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உந்தனிருபாதம் பிடித்தேன் யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக் கண்பார்வையது போதுமே ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
சிறுமணவை முனிசாமி
கருத்து – உறவுகள் எதுவும் நிலையானது அல்ல என்று கூறி ஈசனிடத்தில் வேண்டி அவரின் திருப்பாதங்களைப் பிடித்ததைக் கூறும் பாடல்.
பதவுரை
ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே, ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே! யாரிடத்தில் உன்னுடைய மனம் இருந்தாலும் என் மீது விடும் கடைக்கண் பார்வை போதும்; தாயாருடன் இருந்தாலும் ,தந்தையாருடன் இருந்தாலும், தன் பிறவியுடன் கூடிய உறவு இருந்தாலும், மலை போல் குவிந்திருக்கும் கோடிக் கணக்கான செல்வங்களும் இருந்தாலும், மிகப் பெரிதான பெயர் எடுத்து இருந்தாலும், தரணி எனும் இப்புவியினை ஆளும் அரசன் என்று பெயர் கொண்டு இருந்தாலும், மக்களைப் பெற்று இருந்தாலும், வழிகாட்டுதலுக்கு உரிய குருவாக இருந்தாலும், தன் வழியினை தொடரும் சீடர்கள் இருந்தாலும், பலவிதமான சித்துகள் கற்று இருந்தாலும், தினம் தினம் விரதங்கள் செய்து இருந்தாலும், புண்ணிய நதிகளில் நித்தமும் நீராடி மூழ்கி இருந்தாலும் அவைகள் எல்லாம் பயன் தராது; இவை எல்லாம் மக்கள் கூடிப் பிரியும் சந்தை போன்ற உறவு தான் என்பதை உணர்ந்து கொண்டு உன்னுடைய இரு திருப்பாதங்களைப் பிடித்தேன்.
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை எடுத்த தோள்க ளிறநெரித் தானையார் கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார் கடுக்கை யானைகண் டீர்கட வூரரே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – தன்னைச் சினந்தவர்களின் செருக்கினை அடக்கி அவர்களுக்கு அருள் புரிந்த திறத்தினைக் கூறும் பாடல்.
பதவுரை
சினம் கொண்டு கயிலை மலையை பெயர்த்து எடுப்பேன் என்று வந்த இலங்கை வேந்தன் ஆகிய இராவணனின் இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனை போன்ற பலம் உடையவர்; சினந்த காலனை வருத்தம் கொள்ளுமாறு செய்து அவனை அழித்த ஆனை போன்ற பலம் உடையவர்; கடவூர்த் திருத்தலத்து இறைவர்; கொன்றை பூக்களை அணிந்த ஆனை போன்ற பலம் உடையவர் என்பதைக் காண்பீர்களாக.
நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம் கூடு வோர்கள் இன்றுநின்று கூட்டு வோர்கள் இன்மையின் ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல் வீடு மாகணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே
திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பரபக்கம் – நிகண்டவாதி மதம்
கருத்து – வினைகளை அனுபவிக்கசெய்ய ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டு கூறும் பாடல்.
பதவுரை
ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களை அறிந்து நின்று அவற்றின் பலாபலன்களை செலுத்துவிக்க ஒரு கர்த்தா இல்லையென்று நீ சொன்னால், மிக்க பாவங்களால் ஆன நரகங்களையும் மிக்க புண்ணியங்களால் ஆன சுவர்க்கங்களில் பொருந்திநின்று அதனைஅநுபவிப்பாரில்லை; விரைந்த செலுதப்பட்ட பெரிய அம்பு இலக்கில் படுதல் போல செய்யப்பட்ட புண்ணியபாவங்கள் செய்தவனிடத்தே விரையத் தாமே சென்று பற்றுமென்று நீ சொன்னால், அவ்வாறு விடப்பட்ட பெரியகணைக்கு இலக்கை சென்று அடையும்படி செய்வதற்கு ஒரு வில்லாளன் வேண்டும் எனக் கொண்டால் அந்த ஆன்மாக்கள் செய்த கன்மங்களை அநுபவிக்கும்படி கூட்டுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்.
இப்பொழுது அவருடைய மூலத்தை கேட்பாயாக. தங்கத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம் எவ்வாறு இருக்குமே அது போல சிறு குழந்தை போலத் தோன்றுவார். இரு புருவங்களுக்கு இடையில் இருக்கும் நெற்றிக் கண்ணில் சுகமாக அவருடைய சொருப நிலையை அறியலாம். அவருடைய திருவடியை அகவழிபாட்டின்படி மானச தியானம் செய்தால் சகல வரங்களும் கைவல்யமாகும். இவ்வாறு தங்க தாமரை போன்ற பாதங்களை உடைய வைரவனை தியானம் செய்வாயாக.
துக்கடா வல்லெழுத்து மிகா இடங்கள் அவை, எவை, இவை, யாவை என்னும் சொற்களின் பின் அவை பெரியன யாவை போயின
கருத்து – சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவர் ஆகின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் பாடல்.
பதவுரை
கூவுகின்ற பறவைகள் இருக்கக்கூடியாதான நாவல் மரத்தினில் இருந்து தோன்றி உணவாய் அமைகின்ற உண்ணும் நிலையில் இருக்கும் நாவல் கனிகளில் சில பயன்படாத இடத்தில் உதிர்ந்தும், சில மரத்திற்கு அடியில் உதிர்ந்தும், சில புதர் முதலியவற்றில் விழுந்தும் பிறருக்கு பயன்படாதவாறும் போய்விடுகின்றன; அந்த நாவல் மரத்தை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குடிலில் ஐவர் வாழ்கின்றனர்; வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்து ஒழிவதாய் உள்ளது.
விளக்கஉரை
நாவல் மரம் – சுவாச கோசம். நாவல் கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும்; அந்த மரங்களில் இருந்து உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி, `சுவாசமும் இயற்கையாய் அமைந்தும் அருமை அறியப்படாததாய் உள்ளது` எனும் பொருள் பற்றியது
அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி – உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி – வெளிச்செல்லும் காற்று (ரேசகம்)
புகுகின்ற கனி – உள்ளே வரும் காற்று(பூரகம்)
வித்து – வெளிப் புகுகின்ற காற்றை வெளியே விடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றியது
பொய் – அகமும் புறமும் செல்லும் காற்று வீணாவதைக் குறிக்கும்
பறவைகள் – சுவாச கோசத்தில் உள்ள நரம்பு
ஆகின்ற – வளர்கின்ற
பைங்கூழ் – பயிர்; முற்பிறவியில் ஆக்கிய வினை,பிராரத்த விளைவு என்பதை முன்வைத்து ‘போகின்ற பொய்’ – புகுகின்ற வித்தாவது ஆகாமியம்
கருத்து – மூலாதாரத்தில் இருந்து சுழிமுனை வழியே அண்ணாக்கு மேல் நின்று தியானம் செய்யும் முறையை கூறும் பாடல்.
பதவுரை
ஆசாரியர்களுக்கு எல்லாம் ஆசாரியனாகிய பரமகுருவின் பாதத்தினை தியானம் செய்யும் முறை ஆகிய குருத் தியானம் என்பதனை கேட்டுச் செய்வாயாக; ஊசித்துளை அளவுள்ள மூலாதாரத்தில் இருந்து முக்தியினை தரும் அக்னி சுவாலைப் போன்றதாகிய சுவாலையினை வாசியினால் பெரிதாக்கி சுழுமுனை வழியாக விருப்பமுடன் மேலேற்றி கேசரி எனப்படும் புருவ மத்தியாகிய ஆக்கினைக்கு மேலாகியதும் மேன்மை உடையதும் ஆகிய சகஸ்ராரத்தின் வாயிலில் நிறுத்தி வசிவசி தியானம் செய்வாயாக.
விளக்கஉரை
கண் – விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு, விழி, நயனம், ஊசித் துளை, அறிவு, புண்ணின் (வாய்) துளை, இடம், கணு, மரக்கணு
கேசரி – விண்ணில் உலவுபவன்
கேசரிமுத்திரையில் அமுததாரணை வழியே அமுதம் பெற்று உண்பவர் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார் என்பது உபதேசம் செய்யப்படுகிறது. யோக முறை என்பதால் குருமூலமாக அறிக.
இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே கரந்தது ஒர் உருவே களித்தனன் உன்னைக் கண் உறக் கண்டுகொண்டு இன்றே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – அளவிட முடியா சிவனின் அரும் பெரும் செயல்களைக் கூறி, அவனை மனதில் கொண்டு இரந்ததால் சிவன் கண்ணில் தோன்றினான் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
பல காலம் உன்னை நினைத்து அன்பு கொண்டு அதனால் உன்னை எண்ணி எண்ணி உருக, என் மனத்தில் எழுகின்ற சோதியே, இமையாதவர்களாகிய தேவர்களின் தலையில் பொலிவு உடைய தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, பிரளத்திலும் அழிவே இல்லாத ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களாகவும், அவை அல்லாத மற்றவையாகவும், உருவமில்லாத அருவமாகவும் தோன்றுகிறவனே, சிவபெருமானே! இன்று உன்னைக் கண்ணால் கண்டு களிக்கின்றேன்.
விளக்கஉரை
கரத்தல் – மறைத்தல்.
இரந்து இரந்து – உடலாலும் உள்ளத்தாலும் இரந்து எனும் பொருளும், நல்வினைகள் தீவினைகள் அழியுமாறு இரந்தும் என்பதற்காக இருமுறைகள் எனும் பொருளும் பெறப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
யோக முறையில் திருப்பெரும்துறை என்பது உடலில் இருக்கும் ஒர் இடம் என்றும் சிவனை அகக் கண்ணால் கண்டதையும் குறிப்பிடுகிறார் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.
கருத்து – முருகப்பெருமான் சிறப்புகளைக் கூறி அவர் ஆட்கொள்வோம் என்று உரைத்ததை கூறி உய்வதற்கு இதுவன்றி வேறு உபாயம் இல்லை என்பதை கூறும் பாடல்.
பதவுரை
திந்தோதிமி தீதத என்று பெரிய ஒலி எழுப்பும் உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் ஒலி எழுப்பும் செம்மையான பூரிகையும், ஆரவாரித்து ஒலி எழுப்பவும் பேரிகையும் வேத முழக்கங்கள் ஒலிக்கவும், சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களை கொன்று அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, அதில் இருந்து வழியும் ரத்தத்தினால் அந்த இடத்தை சிவந்த காடனெச் செய்து பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என்னுடைய தந்தையும் சதாசிவன் வழியில் வந்தவரும் எம் தலைவருமாகிய சிவபெருமான் பெற்று அருளிய புதல்வனே, மனத்தால் அளவிட முடியாத திருவருளை உடைய மான் போன்ற நோக்குடைய வள்ளியை நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, சிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே! தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்டு, இன்பமும் துன்பமும் நிறைந்த இயந்திரம் போன்ற இந்த உடம்பானது அழியத்துவங்குவதை கண்டப்பின் இந்த உடலானது விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. ஆகவே மனமே, நிலை இல்லாத நம் உடலை நிலைத்திருக்கும் என நம்பி மோசம் போகாதே; கிரெளஞ்ச மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம்; இதுதான் இன்ப நெறி என்பதை உணர்ந்து இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம்; இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்; ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்; இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு; நாம் வந்து விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்; முருகப் பெருமான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்; உய்வதற்கு உபாயமான சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலி எழுப்பி துதிப்பதை மறவாதே. இதைத்தவிர நாம் மேற்கொள்ள வேறு என்ன வழிபாட்டு முறைகள் உள்ளன?
ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல் அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு) ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை நீங்காத போதுதா னே
பதப்பிரிப்பு
ஒருமையுடன் ஈசன் அருள் ஒங்கி என்றும் தூங்கல் அருமை அருமை அருமை – பெருமை இடும்பு ஆங்காரம் கோபம் அபிமானம் ஆசைவினை நீங்காத போது தானே
சிவபோகசாரம் – தருமை ஆதீன குரு முதல்வர்
கருத்து – புறச்செயல்கள் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று உணர்வதை குறிக்கும் பாடல்.
பதவுரை
உயர்ந்த நிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்காத போது மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று இருப்பது அருமையாகும்.
உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர் உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள் உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில் உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்து – அசுரர்களை அழித்து தேவர்களை காத்தது பற்றியும், பார்வதியின் புத்திரன் என்பது பற்றியும் விளித்து அடைக்கலம் புகுந்தேன் என்று குறிப்பிடும் பாடல்.
பதவுரை
கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்றதும், பசு இனங்கள் வாழ்கின்ற இடமானதும், முல்லை நிலத்திற்கு தலைவனாகிய திருமாலின் நிறம் போல் கறுத்தும், வலிமையும் உவர்ப்புமுடைய கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கி அழித்த தெய்வமே, ஆட்டு வாகனத்தில் ஏறும் உஷ்ணத்தை உடைய அக்கினியின் சொரூபமாகவும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் அழகியதும் அஞ்சனம் தீட்டி செவிகளை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு ஆன விழிகளின் கிருபைக்கும் ஒப்புவமை இல்லாத உண்ணாமுலை என்கிற பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.
கோயில் மலையடிவாரத்தில் சங்கு வடிவில் அமையப் பெற்ற திருத்தலம்
திருமால் வடிவில் இருந்த மூல மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியராக மாற்றி வழிபட்டத் தலம் (கந்தபுராணம் திருக்குற்றாலப் படலம்)
அகத்தியரின் ஐந்து கைவிரல்கள் பதிந்த அடையாளங்களுடன் மிகச்சிறிய மூலவர் திருமேனி; கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியரால் திருமால் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாகவும் , ஸ்ரீதேவி திருவடிவை குழல்வாய் மொழியம்மையாகவும் , பூதேவியை பராசக்தியாகவும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், அம்பாளுக்கான சக்திபீடங்களில் ஒன்றானதும் ஆன இத்தலம் பராசக்தி பீடம். (அம்பாள் திருவடிவம் ஏதும் இல்லாமல் மகாமேரு வடிவம் மட்டும்)
ஒன்பது சக்திகளின் அம்சமாக உள்ளதும், பூமாதேவியை அம்பிகையாக மாற்றியதால் தரணிபீடம் என்றும் போற்றப்படும் பராசக்தி பீடம்; இந்த அம்மை உக்கிரமாக இருப்பதால் இவருக்கு எதிரே காமகோடீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பு
அகத்தியர் சிவபார்வதி திருமணக் காட்சி கண்ட திருத்தலம்
மலை உச்சியில் செண்பக அருவி , செண்பகதேவி கோயில் ஆகியன அமையப் பெற்றது
அருகில் தேனருவி, புலியருவி, பழைய அருவி, ஐந்தருவி முதலான பல அருவிகள் அமையப் பெற்றத் திருத்தலம்
நுழைவுவாயிலின் ஒரு புறத்தில் அம்பல விநாயகர்
உட்பிரகாரத்தில் அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, அருட்சத்தியர்கள், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள்
முருகர் கையில் வில்லேந்திய கோலத்தில் திருக்காட்சி; அருகிலுள்ள வள்ளி தெய்வயானை இருவரும் ஒருவரை பார்த்தபடியான காட்சி அமைப்பு
பழைய ஆதி குறும்பலா மரத்தின் கட்டைகள்(தலமரம்) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருத்தலம்
தொலைந்த பொருள்கள் கிடைக்க தனிச்சன்னதியில் அர்ஜுனன் பூஜித்த சிவலிங்கத்திருமேனி. இந்த சந்நிதிக்கு அருகிலிருந்து இந்த சிவலிங்கத்திருமேனி , விநாயகர் , குற்றாலநாதர் விமானம், திரிகூடமலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் ஒருங்கே தரிசிக்கும் படியான அமைப்பு
பிரகாரத்தில் சிவனார் அம்மையை மணந்து கொண்ட கோலத்தில் திருக்காட்சி. (மணக்கோலநாதர் சந்நிதி )
குற்றால அருவி விழும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள பல சிவலிங்க வடிவங்கள் கொண்ட அமைப்பு
அகத்தியர் சந்நிதி எதிரில் அவரது சீடரான சிவாலய முனிவருக்கு தனி சந்நிதி
சித்திரசபா மண்டபத்தில் குறவஞ்சி சிலைகள் கொண்ட அமைப்பு
சபாமண்டபம் கீழே கல்பீடமாகவும், மேலே முன்மண்டபம் மரத்தாலும் அமைக்கப்பட்டு, விமானம் செப்புத்தகடுகளால் வேயப்பட்டும் ஆன அமைப்பு
முன்மண்டபத்தின் உட்புற கூரையில் தனிச்சிறப்பானதும், அழகானதும் ஆன கொடுங்கைகள்
சித்திரசபையின் உள்ளே சிவகாமியம்மையுடனான நடராஜர் திருஉருவம் சுற்றிலும் தேவர்கள் தொழுதவாறு இருக்கும் வண்ணம் அற்புத ஓவியம்; உட்சுவற்றில் துர்கையம்மனின் பல்வேறு வடிவங்கள், வீரபத்ரர், கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், குற்றாலநாதர் அகத்தியருக்கு திருக்காட்சி, அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு வடிவங்கள், சனைச்சரன் முதலானோரின் வண்ண ஓவியங்கள்
பங்குனியில் பிரம்மோற்சவத்தின் போது முதல்நாள் பிரம்மாவாகவும், இரண்டாம்நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் ருத்ரமூர்த்தியாகவும், நான்காம்நாள் ஈஸ்வரராகவும், ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும், ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலம் கொண்டு பவனி வருவது சிறப்பான நிகழ்வு
தாண்டவ வடிவத்தில் காட்டப்படும் தீபாராதனை(மார்கழி திருவாதிரை)
லிங்க வடிவில் இருக்கும் பலாச்சுளைகள் (தலமரம்)
நான்கு வேதங்கள் நான்கு வாயிலாகவும் மற்றும் சிவனாரின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஒரு வாயிலாகவும் என ஐந்து வாயில்கள் கொண்டு விளங்கும் தலம்
தினமும் அர்த்தஜாம பூஜையின்போது சிவனாருக்கு சுக்கு, மிளகு, கடுக்காய் முதலானவை சேர்த்து தயாரித்து படைக்கப்படும் குடுனி நைவேத்தியம் எனப்படும் கஷாய நைவத்தியம்
ஆகமம் – மகுடாகம முறைப்படிப் பூஜைகள்
குறு ஆல் எனப்படும் ஒருவகை ஆலமரமரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் (பலாமரத்தில் ஒருவகையான மரம் குறும்பலா மரம்)
தலம்
திருக்குற்றாலம்
பிற பெயர்கள்
திரிகூடாசலம் , திரிகூடமலை, பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், பவர்க்க மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேத சக்தி பீட புரம், சிவ முகுந்த பிரம புரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம், வம்பார்குன்றம்
தைமகம் – தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள், பங்குனியில் பிரம்மோற்சவம் (எட்டாம் நாள் நடராஜர் கோயிலில் இருந்து இச்சபைக்கு பச்சை சார்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பான நிகழ்வு), ஆடி அமாவாசையில் லட்சதீப உற்சவம் (பத்ரதீப திருவிழா), நவராத்திரி, ஐப்பசி பூரம் – திருக்கல்யாண உற்சவம்
மாவட்டம்
திருநெல்வேலி
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதுமாகியதும், வில்லின் நாண் அசைய அதில் இருந்து தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினையால் தோன்றிய குற்றங்கள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ளதும் ஆன திருத்தலம் நன்னகர் எனும் குற்றாலம் ஆகும்.
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 4 பதிக எண் 009 திருமுறை எண் 3
பாடல்
உற்றா ராருளரோ – உயிர் கொண்டு போம் போழுது குற்றாலத்துறை கூத்தனல் லானமக் குற்றா ராருளரோ
பொருள்
கூற்றுவன் எனும் எமன் நம் உயிரைக் பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)