
பாடல்
வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – துன்பம் கொண்டு பேசியும், ஊனை பாதுகாத்தும், வினைகளைப் பெருக்குதலும் சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கி திருவாரூர் தலைவனின் திருவடித்துணை ஓங்க இருத்தல் பற்றிய பாடல்.
பதவுரை
வேம்பு போன்றதும், துன்பம் தரத் தக்கதுமான கசப்பான சொற்களையே எப்பொழுதும் பேசியும், தசையும், மாமிசமும் நிறைந்ததான இந்த உடலை பாதுகாத்தும், தீவினை செய்வதால் வினைகளை மிகுதியாகத் தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள் என்றிருக்கும் தொண்டர்களே! ஆம்பல் பூக்களால் நிறையப் பெற்ற பொய்கைகளை உடைய திருவாருர் எனும் ஆரூரை உகந்து அருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளின் கீழே இருக்கப் பெற்றதான சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து கடைத்தேறுங்கள்.
விளக்க உரை
- நூல் இயற்றியவர் – தருமபுர ஆதின ஸ்தாபகர்
- தலம் – திருவாரூர்
- விடக்கு – ஊன்
- ஓம்புதல் – ஊண்புதல் என்பதன் மரூஉ. ஊணால் ஊனைப் பெருக்கல் ஊண்புதல்.
- வினை – தொல்வினை, பழவினை (சஞ்சித கர்மம்) உள் வினை, நிகழ்வினை (பிராரப்த கர்மம்) மேல்வினை, வருவினை (ஆகாமிய கர்மம்) என்பவற்றுள், நிகழ்வினை நுகர்ச்சியினால் எய்திப் பெருகும் வருவினையைக் குறித்தது.
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – ஆம்பல்
புகைப்படம் / தகவல் – இணையம்
- வேறு பெயர் – அல்லி
- நீரில் வளரும் கொடியில் பூக்கும் மலர்
- இரவில் மலர்ந்து காலையில் குவியும் அல்லி மலர் இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன
- நீர்அளவே ஆகுமாம் நீராம்பல் எனும் ஔவையாரின் பாடல் வரிகளைக் கொண்டு இதன் பழமையை அறியலாம்.
- மருத்துவ குணங்கள் – நீரிழிவை நீக்கும்;புண்களை ஆற்றும்; வெப்பத்தினால் ஏற்படும் கண் நோய்களைத் தீர்க்கும்.