
பாடல்
கண்டத்தில் நின்றசித் தறிவைப்பாரு
கண்புருவத் திடைவெளி னொளியைப்பாரு
தண்டுத்த நாசி நுனி வழியேயேறி
சண்முகமா முத்திரையைத் தாக்கிப்பாரு
அண்டத்தி லொளி தோற்றும் நடுவே நின்று
அங்குமிங்கு மெங்கி நின்ற அடவைப் பாரு
கண்டத்தின் முனைப்பார்குண் டலியைப்பாரு
கருவான மூலவா தாரம் பாரே
அகத்தியர் மெய்ஞானம்
கருத்து – ஆக்கினையில் காட்சி காணும் அனுபவங்களை விளக்கும் பாடல்.
பதவுரை
எல்லாவற்றுக்கும் ஆதாரமான மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை பதினாறு இதழ்கள் பொருந்திய தாமரை வடிவம் கொண்டதும், புகையின் நிறம் கொண்டதும், மகேசுவரருக்கு இருப்பிடமானதும் ஆன விசுக்தி எனும் கண்டத்தில் நினைவினை நிறுத்தி உற்று கவனிப்பாயா; பின்னர் சூரியன் எனப்படுவதான வலது கண்ணும், சந்திரன் எனப்படுவதான இடது கண்ணும் சந்திக்கும் இடமாகிய ஆக்கினை எனும் புருவ மத்தியில் ஒளியினைக் காண்பாயாக; அவ்வாறு செய்யும் போது அண்டத்தில் ஒளி தோன்றும் அதன் நடுவில் நின்று அங்கும் இங்கும் எங்கும் என நீக்கமற நிறைந்திருக்கும் அழகினைக் காண்பாயாக.
விளக்க உரை
- அடவு – வடிவமைப்பு
- யோக மரபில் விசுக்தி எனப்படும் கண்டம் முக்கியமானது, பிறப்பினை அறிவிப்பதும், அதை நீங்குவதும் கண்டத்தில் இருந்து தொடங்கும். மாயை கண்டத்திற்கு கீழே செயல்படும் என்பதாலே உமையம்மை ஈசனின் கண்டத்தோடு விஷத்தை நிறுத்தினாள் என்பது இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.