
பாடல்
நிணம்படு முடலை நிலைமையென் றோரேன்
நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும்
கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – திருப்பாச்சிலாச் சிராம இறைவரின் திருமேனி அழகைக் கூறி அவரி அன்றி அடியேனைப் காப்பவர் வேறொருவர் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
படம் எடுத்து ஆடக் கூடியதான பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளி இருக்கின்ற எம்முடைய கடவுளாராகிய இவரது தன்மை என்னவெனில் பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதே ஆகும்; இரவும் பகலும் அவரது அடியவர்கள் கூட்டத்தில் சென்று அவர்களின் கருத்தினை ஒத்து அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன்; கொழுப்பு பொருந்தியதாகிய இவ்வுடம்பை (அழியும் தன்மை உடையது) நிலைத்த தன்மை உடையதென்று நினைக்காமல், நெஞ்சம் இறைவருக்கு உரியது என்று தஞ்சம் அடையத் துணிந்தேன்; அடியேனைப் காப்பவர் இவரன்றி வேறொருவர் இல்லை.
விளக்க உரை
- நிணம் – கொழுப்பு