
பாடல்
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்க ளிறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – தன்னைச் சினந்தவர்களின் செருக்கினை அடக்கி அவர்களுக்கு அருள் புரிந்த திறத்தினைக் கூறும் பாடல்.
பதவுரை
சினம் கொண்டு கயிலை மலையை பெயர்த்து எடுப்பேன் என்று வந்த இலங்கை வேந்தன் ஆகிய இராவணனின் இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனை போன்ற பலம் உடையவர்; சினந்த காலனை வருத்தம் கொள்ளுமாறு செய்து அவனை அழித்த ஆனை போன்ற பலம் உடையவர்; கடவூர்த் திருத்தலத்து இறைவர்; கொன்றை பூக்களை அணிந்த ஆனை போன்ற பலம் உடையவர் என்பதைக் காண்பீர்களாக.
விளக்க உரை
- காய்தல் – உணங்குதல், உலர்தல், சுடுதல், மெலிதல், வருந்தல், விடாய்த்தல், எரித்தல், அழித்தல், விலக்குதல், வெறுத்தல், வெகுளுதல், கடிந்துகூறுதல், வெட்டுதல்
- அடுத்துவந்த – கயிலையை நெருங்கிவந்த
- கடுத்த – சினந்துவந்த
- கடுக்கை – கொன்றை