அமுதமொழி – சார்வரி – ஆனி – 17 (2020)


பாடல்

தனையனை வேண்டுவர் பற்பலர் நாளும்; தகு நலம் சார்,
மனையனை ஆதிய வாழ்வினை வேண்டுவர்; வண்புகழும்,
பனையனை செல்வமும் வேண்டுவர்; அந்தோ! பவப்பிணியாம்,
வினை யனைத் தும்கெட மாயூர வள்ளலை வேண்டலரே

மாயூர நாதர் அந்தாதி – வே. முத்துஸாமி ஐயர்

கருத்து – வினை அற மயூர நாதனை வேண்டாமல் புறத்தில் நிலையற்றவற்றை வேண்டி நிற்றலை பழிக்கும்  பாடல்.

பதவுரை

தன்னுடைய தேவைகளுக்காக தன்னுடை குமாரனிடம் பலப்பல நாளும் வேண்டி நிற்பார்கள்; அதற்கு தகுதியான நலத்தினை பெற மாட்டார்கள்; மனைவி, குடும்பம், பெருமை தக்கதான புகழ், முதன்மையான வாழ்வு ஆகியவற்றையும் வேண்டி நிற்பார்கள்; வேண்டியவற்றை ஈந்தளிக்கும் பாரியிடம் செல்வமும் வேண்டுவார்கள்; ஆனால் பிறவிக்காரணமான பிணி தீரவும், வினை அனைத்தும் கெடவும் மாயூர வள்ளல் எனப்படும் மயூர நாதரை வேண்ட மாட்டார்கள்

விளக்க உரை

  • தனையன் – குமாரன்
  • பவம் – பிறப்பு, உலக வாழ்க்கை, உலகம், கரணம் பதினொன்றனுள் ஒன்று
  • பனையன் – பாரி (பாரிக்கு நிகராக வழங்குபவர்கள்) எனவும் கொள்ளலாம்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருச்சுழியல்

தலவரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருச்சுழியல்

  • அகழி அமைப்புடன் கூடிய கருவறையில் சதுர ஆவுடையாரில் அழகிய சிவலிங்கத் திருமேனி
  • துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டி நின்றதால் அவன் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவன் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்த தலம்; சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் ‘சுழி’, ‘திரு’ எனும் அடைமொழி சேர்ந்து ‘திருச்சுழியல்’
  • ஐந்து விநாயகர் திருவடிவங்கள் உள்ள திருத்தலம் – தாவர விநாயகர், போதி விநாயகர், அரசு விநாயகர், வேலடி விநாயகர், தருமதாவரப் பிள்ளையார்
  • சித்திரை வேலைப்பாடுகளுடன் கூடிய உட்பிரகாரத்தின் மேற்புறம்
  • திரிபங்கி லட்சண அமைப்பில் அம்பாள் – இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம். அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம்
  • அஷ்டலிங்கங்கள் – வேல்லியம்பலனாதர், சோமசேகரர், கௌண்டின்ய லிங்கம், காலவ லிங்கம், கண்ணுவ லிங்கம், காமீஸ்வர லிங்கம், கிருதாந்தகேஸ்வர லிங்கம், தினகரேஸ்வர லிங்கம் அமையப் பெற்றத் திருத்தலம்
  • ஸ்ரீ ரமண மகரிஷி அவதாரத் தலம்
  • தனிக்கோயிலில் பிரளவிடங்கர்
  • மலைநாட்டு மன்னன் ஏமரதன் மகளான மாலினி சிவனாரை வழிபட்டு வேதாள சங்கை நோய் நீங்கப்பெற்ற தலம்
  • மாளவதேசத்து மன்னன் சோமசீதளன் சிவனாரை வழிபட்டு வெண்குஷ்ட ரோகம் நீங்கப்பெற்ற தலம்
  • திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே மாதிரியான கட்டமைப்பு
  • அம்பாள் சந்நிதி முன்பு கிணறு – அர்ஜூனன், சித்திராங்கதையுடன் இத்தலத்தை தரிசிக்க வந்தபோது காண்டீபத்தின் முனையால் உண்டாக்கிய கோடி தீர்த்தம்
  • எல்லை தீர்த்தங்கள் – கிழக்கில் கண்ணுவ தீர்த்தம், மேற்கே பன்னக சைலம், வடக்கே காலவ தீர்த்தம், தெற்கே கோபிதார்வன தீர்த்தம்

துணைமாலையம்மை உடனாகிய திருமேனிநாதர்

புகைப்படங்கள் : இணையம்

தலம்

திருச்சுழியல்

பிற பெயர்கள்

திருச்சுழி, பரிதிகுடி நாடு, வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி

இறைவன்

திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மனக்கோலநாதர், கல்யாண சுந்தரர், புவனேஸ்வரர், பூமிநாதர்

இறைவி

துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை

தல விருட்சம்

அரசமரம், புன்னைமரம் 

தீர்த்தம்

பாகவரிநதி, கௌண்டின்ய ஆறு என்கின்ற குண்டாறு, கவ்வைக்கடல்          ( ஒலிப்புணரி ), பூமி தீர்த்த , சூல தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞானவாவி, கோடி தீர்த்தம் 

விழாக்கள்

சித்திரை விஷூ, சித்ராபௌர்ணமி, ஆடித்தபசு, ஆவணிமூலம், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம்

மாவட்டம்

விருதுநகர் 

முகவரி  / திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில்
திருச்சுழி அஞ்சல், திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம்
PIN – 626129. Ph. 04566 – 282 644

காலை5.00 மணிமுதல்12.00மணிவரை,
மாலை4.00 மணிமுதல்இரவு 8.00 மணிவரை

வழிபட்டவர்கள்

திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, கண்வமுனிவர், அர்ஜுனன், சித்திராங்கதை, காலவமுனிவர், சதானந்தர்,  மன்மதன், கந்தர்வர்களான சித்ரத்வசன் மற்றும் சித்ரரூபன், கிருதாந்தகன் என்ற அசுரன், சேரமான் பெருமாள் நாயனார், பராக்கிரம வழுதி, இந்திரத்யும்ன பாண்டியன், சுந்தரசேன பாண்டியன்

பாடியவர்கள்

சுந்தரர் 1 பதிகம் (7ம் திருமுறை – 82 வது பதிகம்)

நிர்வாகம்

இந்துஅறநிலையத்துறை

இருப்பிடம்

மதுரையில் இருந்து 48 கிமீ தொலைவு, அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு

இதரகுறிப்புகள்

தேவாரத்தலங்களில் 202 வதுதலம்

பாண்டிய நாட்டுத் தலங்களில் இத்தலம் 12 வதுதலம்

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்            82
திருமுறைஎண் 2

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை
வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றான்அவன்
உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர்
நல்லார்துயர் இலரே

பொருள்

தண்டு போல் இருக்கும் மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்கள் காக்கப்படுதல் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களைக் காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி செய்வதற்காக வில்லை வளைத்துத் வலிமை உடைய செய்வதற்காக தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலமாகிய திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள்  இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர்

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்            82
திருமுறைஎண் 7

பாடல்

சைவத்தசெவ் வுருவன்திரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்திருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லெளி தன்றே

பொருள்

சிவாகமங்களில் கூறப்பட்டவாறு வேடத்தையுடைய செம்மையான சிவந்த திருமேனியை உடையவனாய் திருநீற்றை அணிபவனும், இடிபோலும் குரலையுடைய இடபத்தை உடையவனும், கையினில் ஒரு வில்லைக் கொண்டபோது கண்களாலேயே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், தெய்வத் தன்மையையுடைய தவத்தோரும் அதற்கு நிகரானவர்களும் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவன் உறையும் திருத்தலமாகிய திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து, அவனது திருவடியை நினைப்பவர்களது வினைகள் நீங்குதல் எளிது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 16 (2020)


பாடல்

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த்
   திரிதலே வலம்புரி தலுமாய்ச்
சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு
   தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து
   துள்ளுவெள் விடையின்மேல் ஏறித்
தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத்
   தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்!
வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை
   மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து
வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை
   வாய்ஒடுங் காமலே விளங்கும்
கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக்
   காட்டிய கன்னலும் பொதிந்த
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
   காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்து – எம தூதர்கள் வரும் நேரத்தில் வந்து அருள்புரிய வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

வயல் வரப்புகளை உடைய உழவின் மேல் மாறாத எண்ணம் உடையவர்களும், சூரியன் போல் பிரகாசிக்கும் மாறுபாடு அற்ற முகத்தினை  ஆன உழவர்களால் நிரம்பப் பெற்றதும், அதிசயம் மிகும்படியாக பகலிலும், இரவிலும் குவளை மலர்களின் இதழ்கள் மூடாமல் விளங்கக்கூடியதும், கெண்டை மீன்கள் விளையாடும் நீண்ட நீர்ப்பரப்புகளை உடையதும், திரட்சியான கமுகம் எனப்படும் நெல்களையும், அதனை விட அதிகமாக பெரியதாக விளங்கும் கன்னல் எனப்படும் கரும்பினை  உடைய வயல்களை உடையதும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! என்னுடைய செயல்கள் எல்லாம் உனக்கு பணிசெய்வதாகவும், உன்னுடைய திருநாமத்தினைக் குறிக்கும் ஐந்தெழுத்தினை எப்பொழுதும் உரைத்து வலப்பக்கமாக சுழன்று திரிவதாகவும், சிந்தனையின் உன்னுடைய நினைவு நீக்காமல் இருத்தலால் அதுவே தியானம் போலக் கருதும் நிலைகொண்டு, புறத்தே பேசும் பேச்சுகள் எல்லாம் ஐந்தெழுத்தின் தன்மை கொண்டு உமிழப்பட்டு படைத்தலுக்கு உரிய நிவேதனப் பொருளாக கொண்டு, பேருரறக்கம் வரும் காலத்தில், மகிழ்வுடம் திருவுள்ளம் பற்றி துள்ளிக் குதித்து ஓடும் வெண்மை நிறம் கொண்ட விடையில் மேல் ஏறி யம தூதர்கள் தொண்டர்களுடன் வந்து கயிற்றினை சுண்டி இழுக்கும் போது தேவர்களும் காணும்படியாக  திசைகளே ஆடையாக  அணிந்து எனக்கு வந்து அருளுவாய்.

விளக்க உரை

  • கடைசியர் – உழவர், உழத்தியர், கடையர், ஊரன், மகிழன், களமர்
  • கமுகம் – கூட்டம், திரட்சி
  • தெவிட்டல் – உமிழப்பட்டது
  • வலம்புரிதல் – இயற்கையோடு ஒத்து நடத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 10 (2020)


பாடல்

இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துநிலையாமையை உரைத்து காட்டுப்பள்ளி ஈசனை கண்டு உய்யச் சொல்லும் பாடல்.

பதவுரை

பேச்சுத் திறம் அழிந்த ஊமையர்களே! இன்று உயிருடன் இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள் எனும் பொருளை ஆராயமலும் உணராமலும் அறியாது ஒழிதலைக் கொண்டு இருப்பவர்களே! முன்னொரு காலத்தில் தேவர்களின் பொருட்டு அவர்களின் நலனுக்காக விடத்தினை உண்ட கண்டத்தினை உடையவனாகிய ஈசன் உறையும் காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.

விளக்க உரை

  • ஓர்தல் – ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல்
  • இன்றுளார் – இன்றைக்கு இருப்பவர்
  • நாளை இல்லை – மறுநாள் இல்லாதவராவர்
  • உழி தரும் – திரியும்
  • பேசாத நாளெல்லாம் பிறவா நாளே‘ என்ற வாக்கிற்கு இணங்க பேசாதவர்களை ஊமை என்று அழைத்தார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 9 (2020)


பாடல்

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துமண்டல பரத்தின் பெருமையும், அஃது ஈசனின் இருப்பிடன் எனவும், அங்கு உறையும் ஈசன் உயிர்கட்கு அருள் புரியும் தன்மையையும் கூறும் பாடல்.

பதவுரை

உச்சிக்குமேல்பன்னிரண்டுஅங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய துவாதசாந்தத்தில் நிற்பதனால் ஏனைய கடவுளர்கள் எல்லோருக்கும் மேலான கடவுளாகவும்,  தனது மேம்பட்ட சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குபவனாக இருப்பவனாகவும், நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாகவும் இருக்கும் நந்திப்பெருமான் எனும் பரம்பொருள் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்து ஆட்கொண்டு அருளிய பின் குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.

விளக்க உரை

  • மாபரம் ஆயது – ஏனைய தெய்வங்கள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நிலைபெற்று விளங்குபவர்கள்; ஈசன் `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்குபவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 2 (2020)


பாடல்

உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவமென் றிராதே – மருளைப்
பிறிந்தறிவிற் கண்டதனைப் பின்னமற எங்குஞ்
செறிந்தபொருள் தானே சிவம்

ஸ்ரீ ல ஸ்ரீ தருமை ஆதீன குரு முதல்வர்

கருத்து –  சகளம், நிகளத் திரிமேனிகளாக் சிவன் இருப்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

சகளத் திருமேனி எனப்படும் உருவமாகவும், நிட்களத் திருமேனி  எனப்படும் அருவமாகவும் ஒளியாகவும், ஆகாசமாகவும் இருள் எனும் மாயையாகவும் இருப்பது மட்டுமே சிவம் என்று இருக்காதே; மயக்கத்தினை விலக்கி மெய்யறிவில் கண்டால்  உயிர்ப் பொருள்கள், உயிர் இல்லா பொருள்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளே சிவம் என்பதை அறியலாம்.

விளக்க உரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி, வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 23 (2020)


பாடல்

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவனுக்கு வரும் பயன்களை விவரித்துக் கூறும்  பாடல்.

பதவுரை

சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் தான் பெற்ற தவத்தின் காரணமாக உலக முழுவதாலும் போற்றப்படும் பெருமையுடையவானகவும், மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுபவனாகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவருக்கும் பக்கத்தில் இருக்கும் நெருங்கிய உறவினன் போல்  உரியவனாய் விளங்குவான்.

விளக்க உரை

  • அமர்தல் – அமைதல். அமர்ந்திருத்தல்
  • அண்ணியன் – பக்கத்தில் இருப்பவன், நெருங்கிய உறவினன்
  • பெருமை, தவத்தினாலும், இனிமை அருளால் தோன்றும் பெறப்படும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 20 (2020)


பாடல்

வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஇந்திரனுக்கும், அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்த பாடல்.

பதவுரை

சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகள் வாழும் இடமானதும், செல்வத்தை உடையதும்  ஆன அழகிய திருநின்றியூரில் வீற்றிருந்து அருளும் இறைவனே, இந்திரன் ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னை வழிபட, அதற்காக மகிழ்ந்து அவனுக்கு  ‘நீ  விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய  அருளிய தன்மையும், காலங்கள் இணைவதான ‘காலை, நண்பகல், மாலை’ என்னும் மூன்று சந்திகளிலும், உருவத்திருமேனி ஆன இலிங்க உருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளாய்ச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதிகை மலையில் வீற்றிருக்க அவருக்கு அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன்  உனது திருவடியை அடைந்தேன்;  என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • தாபரம் – மலை, உடம்பு, நிலைத்திணைப் பொருள், மரப்பொது, இடம், ஆதாரம், பற்றுக்கோடு, பூமி, கோயில், இலிங்கம், உறுதி
  • சேர்வு – அடைதல், வாழிடம், திரட்சி, ஒன்று சேர்கை, ஊர், கூட்டம்
  • இந்திரன் எண்ணிக்கை எண்ணற்றது என்பதால் ஓர் இந்திரன்
  • சகளி செய்திறைஞ் சகத்தியன் – இலிங்கத் திருமேனியில் பாவனையால் அமைத்து வழிபாட்டில் கொள்ளப்படும் மந்திரங்களில் ‘பஞ்சப்பிரம மந்திரங்கள்‘ எனப்படும் ஐந்தும் , சடங்க மந்திரங்கள் எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும். சிவ வழிபாட்டினை ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்து சுருக்கமாகவும், வேத மந்திரங்களை முப்பத்தெட்டுக் கூறுகளாகச் செய்து வழிபாடு செய்யும் முறைகள் என சிவ நெறியில் விளக்கப்பட்டுள்ளன. ஆகையால் சிறந்த வழிபாடாக செய்த அகத்தியர் என்பதை முன்வைத்து இவ்வாறு அருளினார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 15 (2020)


பாடல்

பிரமனும் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப்
   பேதையர் கண்(டு)அசங் கதிக்கப்
பிணிகளும் பகைக்க மூப்புவந்(து) அலைக்கப்
   பிந்தொடர்ந்(து) ஆசைசென்(று) இழுக்கத்
தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத்
   தாரணி சுமந்துநொந்(து) இளைக்கச்
சக(டு)எனச் சுழலும் கறங்(கு)எனக் கொடிய
   சடலமே எடுக்கநான் இலக்கோ?
+குருமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில்
   கோட்டிள(ம்) ++மோட்டுமோ மேதிக்
குலங்கள்போய்ப் படிந்து நலம்கிளர் செழும்தேன்
   குவளைமென்(று) உழக்கிய தோற்றம்
கரியமா கடலில் புகுந்துநீர் அருந்தும்
   காளமே கங்களோ எனலாய்க்
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
  காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்துதிருக்கடவூர் தலத்தின் பெருமைகளைக் கூறி, அதில் உறையும் இறைவனைப்பற்றி பெருமையாக உரைத்தும் அவனிடத்தில் பிறவி நீக்கம் செய்யுமாறு வேண்டும் பாடல்.

பதவுரை

முத்துக்கள் போன்று ஒளிர்விடுவதும், புதிய மலர்களைக் கொண்டுள்ளதும், வானம் வரை நீண்ட நெற்கதிர்கள் கொண்ட  இடமானதும், கற்றவர்கள் நிறைந்த இடமானதும், குவளை மலர்களில் செழுமையான தேனை கொண்டதும், கரிய நிறம் உடையதும் ஆன கடலில் நீர் புகுந்து செல்லும்படியாகவும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! கூத்துக்கள் நிகழ்த்துபவனே! என்னுடைய வினைகளை முன்வைத்து படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனும் சலிப்புறவும், ஒவ்வொரு பிறவியிலும் என்னை படைத்ததால் எனது தாயாரும் சலிப்புறவும், மகளிர் கண்டு விலகும்படியாகவும் பகைகொள்ளுமாறும் பிணிகளும், மூப்பும் அலைகழிக்க, அதனைப் பின் தொடர்ந்து ஆசை சென்று இழுக்க தருமத்தின் வழியில் நிற்பவனாகிய எமனும் பல முறை உயிரினை எடுத்து அதன் காரணமாக வெறுக்கவும், அதன் காரணமாக நரகத்தில் துன்புறுமாறு அழித்தியும், சுழற்சியினைத் தரும் உடல் எனும் கொடிய சடலம் எடுத்தல் தான் எனக்கு விதிக்கப்பட்டதுவோ?

விளக்க உரை

  • குறு – நிறம்
  • மணி – முத்து
  • இமைக்கும் – ஒளிவிடும்
  • மோடு – வயிறு
  • சகடு – உடல்
  • கறங்கு – காற்றாடி, கறங்கோலை, சுழற்சி, சத்தம்
  • மாதா உடல் சலித்தாள் எனும் பட்டினத்தாரின் பாடல் இங்கு ஒப்புமை கொண்டு சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 12 (2020)


பாடல்

திருவார் பெருந்துறை
   மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின்
   யா  வரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்
  ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம்
  தெள்ளேணங் கொட்டாமோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துஈசன் தன் பிறவியை வேறறுத்தப்பின் அவனையே முழுமையாக கண்டதை உரைக்கும் பாடல்.

பதவுரை

நீர் நிலைகள் நிறைந்துள்ள இடங்களை உடையதான திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவனும், சிறப்புகள் உடையவனுமான சிவ பெருமான் என் பிறவியை வேரறுத்தபின்,  யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை; அருவ வடிவமாகவும், உருவ வடிவமாகவும்  நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகையான தெள்ளேணத்தினை நாம் கொட்டுவோம்.

விளக்க உரை

  • வார் – நீர், ஒழுகு, வரிசை, கடைகயிறு
  • தெள்ளேணம் – கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு வகை
  • பிறவிக்கு காரணமான பாசத்தினை வேரோடு அறுத்தான் என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிறவிக்கு காரணமான வினைகளை(சஞ்சீதம், பிரார்த்தம், ஆகாமியம் ஆகிய வினைகளை) அறுத்தான் என்பது பொருத்தமாக இருக்கும்; யாவரையுங் கண்டதில்லை என்பதை முன்வைத்து வினைகளை நீக்க வல்ல முதல்வன் என்பதை உணர்ந்து கண்டு கொண்டேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • திருப்பெருந்துறை, திருவாரூர் ஆகியவற்றை யோக முறையில் உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளாக உருவகம் செய்வது யோகம் தொடர்வோரும் உண்டு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 7 (2020)


பாடல்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே

பத்தாம் திருமுறை – திருமூலர் – திருமந்திரம்

கருத்து –   இறையின் இயல்புகளை உணர்த்தும் பாடல்.

பதவுரை

போற்றப்படுவதாகிய உயிரை இடமாகக் கொண்டு நிலைபெற்று இருக்கும் புனிதத்துவம் மிக்கவனை, நான்கு திசைகளுக்கும், உமா தேவிக்கும் தலைவனாக் இருப்பவனை, மேலான திசை இரண்டிற்குள் ஒன்றான தெற்கு திசைக்குத் மன்னனாகிய கூற்றுவனை உதைத்தவனை அடியேன் புகழ்கின்றேன்.

விளக்க உரை

  • இதயத் தாமரையில் உறைபவன்; உலகங்களுக்குத் தலைவன்; கால காலன்; உமையுடம் சேர்ந்து சிவசக்தி ரூபமாக இருப்பவன் எனும் இறை இயல்புகளை உணர்த்தும்
  • போற்றுதல் – துதித்தல்
  • புனிதன் – இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்
  • நல்ல மாதுக்கு நாதன் – ஆன்மாக்களுக்கு அருள் ஞானம் ஊட்டும் தாய் போன்றவன்
  • கூற்றுதைத்தான் – காலத்தை வென்றவன்
  • என் மனதிள் உள்ள தியானப் பொருளாகிய பரம் பொருளை நான் போற்றுவது போல் நீங்களும் போற்றுங்கள் எனும் கருணைக் குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 28 (2020)


பாடல்

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் – சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு

திருநெறி 1 – சிவஞான போதம் – மெய்கண்ட தேவர்

கருத்து சார்ந்தாரைக் காத்தலையும், சாராதவர்களை வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை காத்தல் என்பது தலைவன் ஆகிய ஈசனின் கடமை; ஆனால தன்னைக் சாராமல் அடைக்கலம் புகாதவர்களை காக்காமல் வஞ்சம் செய்பவன் அல்ல; தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை பிராப்த வினைகளை நீக்கி அவர்களைக் காப்பான்; தன்னைச் சாராதவர்களை  பிராப்த வினைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வினைகளைக் கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்து அவர்களைக் காப்பான்.

விளக்க உரை

  • இயல்பாகவே பாசங்களின் நீங்கி இருப்பவன் என்பதை முன்வைத்து பேரருள் உடைமை ஆகியவன் என்பதால் சார்ந்தாரைக் காத்தலையும், முடிவில் ஆற்றல் உடைமை என்பதை முன்வைத்து வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணரலாம். இவைகள் ஈசனின் எண்குணங்களின் தன்மைகள் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 27 (2020)


பாடல்

வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்

பன்னிரெண்டாம் திருமுறை – பெரியபுராணம் – சேக்கிழார்

கருத்துஈசன், காரைக்கால் அம்மையாரை நோக்கி இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள் என்று உரைத்து அம்மையே என்று அழைப்பதை விளிக்கும் பாடல்.

பதவுரை

வரும் இவர் யார் என்று கேட்ட உமையம்மைக்கு, “எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள்; அதுமட்டும் அல்லாது பெருமை பொருந்திய வடிவமாகிய இப்பேய் வடிவத்தினை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறினார்; காரைக்கால் அம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.

விளக்க உரை

  • பரவெளி
  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்
  • செம்மையொரு மொழி – செம்பொருளை அடைதற்குரிய ஒப்பற்றதொரு மொழி
  • ஆங்குநின் தாள்கள் போற்றும்
    பேய்வடி வடியே னுக்குப்
    பாங்குற வேண்டும் என்று
    பரமர்தாள் பரவி நின்றார்

என்று எவராலும் விரும்பத் தக்காத பேய் வடிவினை விரும்பிக் கேட்டதால் இப் பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள்` என்று சேக்கிழார் உரைக்கின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 23 (2020)


பாடல்

பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
   பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
   வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான்
   குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும் என்றனைநீ
   முனிவதென் முனிவு தீர்ந்தருளே

ஆறாம் திருமுறை –  திருஅருட்பா – வள்ளலார்

கருத்துவள்ளல் என்று உரைத்திருப்பதாலும், என்னை ஈன்றவன் என்பதாலும் என் குற்றங்களைப் பொறுத்து அருள வேண்டும் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

என்னை பெற்ற வள்ளலே, உலகினுக்கு வாயிலாக விளங்கும் தில்லை திருச்சபையில் நடனமிட்டு நடிப்பவனே, உலகிற்கு அரசனே, எண் குணங்கள் உடையவனே, தாம் பெற்ற குழந்தையின் நல்ல குணங்களையும், தீய குணங்களையும் பெற்றவர்கள் மட்டுமே அறிவார்கள் ; அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் கொண்டுள்ள குணங்களால் கொடியவனாக இருக்கிறேன்; என்னுடைய இந்த குணங்கள் அனைத்தையும் நீ முற்றும்  நன்கறிவாய்; அவ்வாறு அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பினை நீக்கி  ஆண்டருள்க.

விளக்க உரை

  • மன்றில் – வாயில்முற்றம்
  • கொற்றவன் – அரசன், வெற்றியாளன்
  • முனிவு – கோபம், வெறுப்பு
  • எண் குணங்கள் – தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை (வட மொழி மூலம் – சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,நிரன்மயான்மா,சர்வஞ்த்வம்,அநாதிபேதம், அநுபத சக்தி,அநந்த சக்தி,திருப்தி)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 22 (2020)


பாடல்

நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்

திருநெறி – சிவஞானசித்தியார்

கருத்துஉமையம்மை சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் ஏற்பட்டவைகளே போக, வேக, யோக வடிவங்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

புவனங்களுக்கு நாயகனின் திருக்கண்களை நாயகி மூடியபோது சகலம், கேவலம், சுத்தம் ஆகிய தத்துவங்கள் ஒன்றான தன்மையான சங்காரம் ஒத்து எங்கும் இருள் சூழ்ந்த போது,  தனது நெற்றிக் கண்ணை திறந்தார். அந்த முதல்வன் கொண்ட திருமேனிகள் போகம் கொள்வதன் பொருட்டு  சில திருமேனி போகவடிவமும், வினையினை விடுதலை முன்வைத்து சில திருமேனி கோரவடிவமும், யோகமுத்தி தருவதன் பொருட்டு யோக வடிவமும் வெளிப்பட்டன; இவைகள் ஆன்மாக்கள் உய்வுறுவதன் பொருட்டு அருள்புரிக்கூடிவை என்பதால் இந்த அருளுதல் தொழில் செய்வதற்காக  திருக்கண் புதைத்த திருவிளையாட்டின் வழி நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதற்கு இது சான்று.

விளக்க உரை

  • நயப்பு – அன்பு. விருப்பம், இன்பம், தலைவி எழிலைப் புகழ்கை, மலிவு, இலாபம், மேம்பாடு, நன்மை, மகிழ்ச்சி
  • பாய்தல் – பரத்தல்
  • தேயம் – உலகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 16 (2020)


பாடல்

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.

விளக்க உரை

  • தலம்- தென்குரங்காடுதுறை
  • விண்டார் – பகைவர்
  • விமலன் – மலமில்லாதவன்.
  • இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
  • கொண்டான் – கொண்ட சிவபிரான்.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – இண்டு

புகைப்படம் : தினகரன்

தோற்றமும் தன்மையும்

  • வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
  • சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
  • செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
  • காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
  • வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.

மருத்துவ குணங்கள்

  • இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 14 (2020)


பாடல்

அந்தா மரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்ற லழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலன்னடி

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருவடி சிறப்புகளைக் கூறும் பாடல்.

பதவுரை

அதிகை வீரட்டத்தை தலத்தில் எழுந்து அருளும் தூயோனும், சகல உயிர்கள் இடத்திலும் அவைகள் காத்து ரட்சிக்கப்படுவதன் பொருட்டு பந்தம் கொண்டு அருளுதலை செய்ய மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன் ஆனவனும், பெரியதான பவள மலை போன்றவனும், சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்ந்து  இருப்பவனாகிய எம் பெருமானுடைய திருவடிகள் அன்றைய தினத்தில் மலர்ந்த தாமரைப் மலர்கள் போன்றவை; தன் வலிமையை ஆணவமாகக் கொண்டு இமயமலையை பெயர்த்து எடுத்த இராவணனுடைய ஆற்றலையும் போக்கியவை; ஏனைய பொருள்களும், உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே இருப்பவை; ஒலியினை எழுப்பி எரியக்கூடிய கழலை உடைய எம்முடைய மூர்த்தி நீண்ட வளர்ந்த வடிவினை கொண்டவை.

விளக்க உரை

  • போது அலர்ந்த, அரக்கனையும் (உம்மை உயர்வு சிறப்பு) – முறையே மென்மையும் வன்மையும் அருளிய திறம் கூறல்
  • முந்தாகி – முதற்காலமாய் நின்று(சிவதத்துவ நிலை)
  • நான்காவது தொடர் (முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தி) – அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற சதாசிவ தத்துவ நிலை
  • ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் ஈசுவரத் தத்துவ நிலை
  • வெந்தாரது நீறு – இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும், அனைத்தும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் உணர்த்தியது
  • முந்தாகி – உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல்
  • பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி – பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகன் என்ற விளக்கம் சில இடங்களில் காணப்படுகிறது; இது பொருந்தாமையால் இந்த விளக்கம் விலக்கப்படுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-2 (2020)


பாடல்

பாறு தாங்கிய காட ரோபடு
   தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
   காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
   பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
   கடிக ளாகிய அடிகளே

ஏழாம் திருமுறை – தேவாரம் –  சுந்தரர்

கருத்து – சிவன் சிறப்புகளை சொல்லும் பாடல்.

பதவுரை

நமக்குத் தலைவராய் உள்ளவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் அழிந்த தலையை ஏந்தியவரோ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ? குழைய அணிந்த திருச்செவியினை உடையவரோ? சிறிய இடைவெளி கொண்ட கொம்பினை உடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ? சுடப்பட்ட திருநீற்றை அணிந்தவரோ? விளங்குகின்ற பிறையோடு கூடிய ஆற்றைச்(கங்கை) சுமந்த சடையை உடையவரோ? சொல்லுமின்.

விளக்க உரை

  • பாறு – விலங்குகளின் பிணங்களைத் தின்று வாழும் பறவையினம், பிணந்திண்ணி கழுகு, எலும்புண்ணிப் பாறு
  • ஆணவம் கொண்ட தலையை உடையவரது அழிவு தலையின் மேல் ஏற்றி உரைக்கப்பட்டது
  • குறுங்கோடு – இளைய ஏறாகல் / இளைய காளை
  • தலைவர் – நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-1 (2020)


பாடல்

இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை

சிவஞானபோதம்

கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.

விளக்க உரை

  • இந்தனம் – விறகு
  • அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
  • ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 26 (2020)


பாடல்

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
   தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
   தாரணியையாண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
   சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
   செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை
   ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்
   உந்தனிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்
   கண்பார்வையது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே
   எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

சிறுமணவை முனிசாமி

கருத்து – உறவுகள் எதுவும் நிலையானது அல்ல என்று கூறி ஈசனிடத்தில் வேண்டி அவரின் திருப்பாதங்களைப் பிடித்ததைக் கூறும் பாடல்.

பதவுரை

ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே, ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே! யாரிடத்தில் உன்னுடைய மனம் இருந்தாலும் என் மீது விடும் கடைக்கண் பார்வை போதும்; தாயாருடன் இருந்தாலும் ,தந்தையாருடன் இருந்தாலும், தன் பிறவியுடன் கூடிய உறவு இருந்தாலும், மலை போல் குவிந்திருக்கும் கோடிக் கணக்கான செல்வங்களும் இருந்தாலும், மிகப் பெரிதான பெயர் எடுத்து இருந்தாலும், தரணி எனும் இப்புவியினை ஆளும் அரசன் என்று பெயர் கொண்டு இருந்தாலும், மக்களைப் பெற்று இருந்தாலும், வழிகாட்டுதலுக்கு உரிய குருவாக இருந்தாலும், தன் வழியினை தொடரும் சீடர்கள் இருந்தாலும், பலவிதமான சித்துகள் கற்று இருந்தாலும், தினம் தினம் விரதங்கள் செய்து இருந்தாலும், புண்ணிய நதிகளில் நித்தமும் நீராடி மூழ்கி இருந்தாலும் அவைகள் எல்லாம் பயன் தராது; இவை எல்லாம் மக்கள் கூடிப் பிரியும் சந்தை போன்ற உறவு தான் என்பதை உணர்ந்து கொண்டு உன்னுடைய இரு திருப்பாதங்களைப் பிடித்தேன்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!