
பாடல்
இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – நிலையாமையை உரைத்து காட்டுப்பள்ளி ஈசனை கண்டு உய்யச் சொல்லும் பாடல்.
பதவுரை
பேச்சுத் திறம் அழிந்த ஊமையர்களே! இன்று உயிருடன் இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள் எனும் பொருளை ஆராயமலும் உணராமலும் அறியாது ஒழிதலைக் கொண்டு இருப்பவர்களே! முன்னொரு காலத்தில் தேவர்களின் பொருட்டு அவர்களின் நலனுக்காக விடத்தினை உண்ட கண்டத்தினை உடையவனாகிய ஈசன் உறையும் காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.
விளக்க உரை
- ஓர்தல் – ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல்
- இன்றுளார் – இன்றைக்கு இருப்பவர்
- நாளை இல்லை – மறுநாள் இல்லாதவராவர்
- உழி தரும் – திரியும்
- ‘பேசாத நாளெல்லாம் பிறவா நாளே‘ என்ற வாக்கிற்கு இணங்க பேசாதவர்களை ஊமை என்று அழைத்தார்