
பாடல்
தனையனை வேண்டுவர் பற்பலர் நாளும்; தகு நலம் சார்,
மனையனை ஆதிய வாழ்வினை வேண்டுவர்; வண்புகழும்,
பனையனை செல்வமும் வேண்டுவர்; அந்தோ! பவப்பிணியாம்,
வினை யனைத் தும்கெட மாயூர வள்ளலை வேண்டலரே
மாயூர நாதர் அந்தாதி – வே. முத்துஸாமி ஐயர்
கருத்து – வினை அற மயூர நாதனை வேண்டாமல் புறத்தில் நிலையற்றவற்றை வேண்டி நிற்றலை பழிக்கும் பாடல்.
பதவுரை
தன்னுடைய தேவைகளுக்காக தன்னுடை குமாரனிடம் பலப்பல நாளும் வேண்டி நிற்பார்கள்; அதற்கு தகுதியான நலத்தினை பெற மாட்டார்கள்; மனைவி, குடும்பம், பெருமை தக்கதான புகழ், முதன்மையான வாழ்வு ஆகியவற்றையும் வேண்டி நிற்பார்கள்; வேண்டியவற்றை ஈந்தளிக்கும் பாரியிடம் செல்வமும் வேண்டுவார்கள்; ஆனால் பிறவிக்காரணமான பிணி தீரவும், வினை அனைத்தும் கெடவும் மாயூர வள்ளல் எனப்படும் மயூர நாதரை வேண்ட மாட்டார்கள்
விளக்க உரை
- தனையன் – குமாரன்
- பவம் – பிறப்பு, உலக வாழ்க்கை, உலகம், கரணம் பதினொன்றனுள் ஒன்று
- பனையன் – பாரி (பாரிக்கு நிகராக வழங்குபவர்கள்) எனவும் கொள்ளலாம்