
பாடல்
தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியே – அம்மேனி
மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன்
தானே குடைவேந் தனித்து
திருவாரூர் நான்மணி மாலை – குமரகுருபரர்
கருத்து – தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமானும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
காடுடைய வெண்பொடியால் வெண்ணிறமுடையதாக தோன்றும் கங்கையினை ஒத்த திருவாரூர் பெருமானையும் அழகிய திருமேனியை உடைய மானைப் போன்றவளும், நீலநிறம் கொண்டவளும் ஆன யமுனையினை ஒத்த உமாதேவியையும் குளிர்ந்த திருவருளால் செம்மேனி கொண்டு செந்நிறமுடையதால் வாணி எனும் சரஸ்வதி ஒத்து இருக்கும் முருகப் பெருமானையும் ஒருங்கே தியானிப்போம்.
விளக்க உரை
- இல்லறத்தின் மேன்மையை விளக்கும் சோமாஸ்கந்தர் வடிவம் பற்றியது
- வெண்மையும் தண்மையும் கங்கைக்கு உரித்தானவை
- குடைவேம் – ஆடுவேம் – தியானிப்போம்