
பாடல்
செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த்
திரிதலே வலம்புரி தலுமாய்ச்
சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு
தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து
துள்ளுவெள் விடையின்மேல் ஏறித்
தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத்
தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்!
வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை
மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து
வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை
வாய்ஒடுங் காமலே விளங்கும்
கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக்
காட்டிய கன்னலும் பொதிந்த
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே!
திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்
கருத்து – எம தூதர்கள் வரும் நேரத்தில் வந்து அருள்புரிய வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
வயல் வரப்புகளை உடைய உழவின் மேல் மாறாத எண்ணம் உடையவர்களும், சூரியன் போல் பிரகாசிக்கும் மாறுபாடு அற்ற முகத்தினை ஆன உழவர்களால் நிரம்பப் பெற்றதும், அதிசயம் மிகும்படியாக பகலிலும், இரவிலும் குவளை மலர்களின் இதழ்கள் மூடாமல் விளங்கக்கூடியதும், கெண்டை மீன்கள் விளையாடும் நீண்ட நீர்ப்பரப்புகளை உடையதும், திரட்சியான கமுகம் எனப்படும் நெல்களையும், அதனை விட அதிகமாக பெரியதாக விளங்கும் கன்னல் எனப்படும் கரும்பினை உடைய வயல்களை உடையதும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! என்னுடைய செயல்கள் எல்லாம் உனக்கு பணிசெய்வதாகவும், உன்னுடைய திருநாமத்தினைக் குறிக்கும் ஐந்தெழுத்தினை எப்பொழுதும் உரைத்து வலப்பக்கமாக சுழன்று திரிவதாகவும், சிந்தனையின் உன்னுடைய நினைவு நீக்காமல் இருத்தலால் அதுவே தியானம் போலக் கருதும் நிலைகொண்டு, புறத்தே பேசும் பேச்சுகள் எல்லாம் ஐந்தெழுத்தின் தன்மை கொண்டு உமிழப்பட்டு படைத்தலுக்கு உரிய நிவேதனப் பொருளாக கொண்டு, பேருரறக்கம் வரும் காலத்தில், மகிழ்வுடம் திருவுள்ளம் பற்றி துள்ளிக் குதித்து ஓடும் வெண்மை நிறம் கொண்ட விடையில் மேல் ஏறி யம தூதர்கள் தொண்டர்களுடன் வந்து கயிற்றினை சுண்டி இழுக்கும் போது தேவர்களும் காணும்படியாக திசைகளே ஆடையாக அணிந்து எனக்கு வந்து அருளுவாய்.
விளக்க உரை
- கடைசியர் – உழவர், உழத்தியர், கடையர், ஊரன், மகிழன், களமர்
- கமுகம் – கூட்டம், திரட்சி
- தெவிட்டல் – உமிழப்பட்டது
- வலம்புரிதல் – இயற்கையோடு ஒத்து நடத்தல்