ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
வளமை வாய்ந்த தமிழ் மொழியை கொண்டவர்களான தமிழர்கள் தொழும்படியாக தண்டாயுதத்தைக் கொண்டவனே! பொலியும் முகம் கொண்டவனே! அழகிய வடிவம் கொண்டவனே! பச்சை நிறமுடைய ஆடை அணிந்தவனே! சந்திரனை அணிந்த வட்ட வடிவமான சடையை கொண்டவவனே! குன்று போல் கண்களை உடையவவனே* உனது இரு பாதங்களையும் எப்பொழும் மறவேன்.
காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே! நோய்களிடம் இருந்து நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன், செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அந்த வினைகளை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய், அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! எனது மைந்தனே என்று என்னை அழைத்து அமுதளித்த வகையினை நீ மறந்து விட்டாயா! விரும்பியது அனைத்தும் கொடுக்கவல்ல தெய்வமணி ஆகிய சிந்தாமணி மந்திரம் கொண்டு பூசை செய்தால் இந்த செகத்தில் எவர்க்கும் குறைவருமோ? செல்வம், கல்வி, அருள் ஆகியவை விளைந்தன; முதல்வி ஆகிய உன் அருள் உலகில் காலத்தால் அறிவிக்கப் பெறும் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற காலங்கள் இல்லை; அவ்வாறான காலங்களில் கனமாக சூழ்ந்து இருக்கும் வினை இருளும் விலகியது; இவ்வாறு கிடைக்கப் பெற்றவை அனைத்தும் உன் இயல்பான கொடுக்கும் தன்மையினால் கிடைக்கப் பெற்றவை; அவ்வாறான இயல்பாக கொடுக்கும் தன்மை இல்லாத மானிடர்களை ஏற்பதும், அவர்களோடு சேருவதும், சேர்ந்து சொல்லுதலும் ஏதாவது உண்டா? இதை உரைப்பாய்.
விளக்கஉரை
இந்தா எனவே நீகொடுத்த இயல்பே – எதையும் எதிர்பாராமல் இயல்பாக கொடுக்கும் குணம் அன்னைக்கு உரியது என்பதை வலியுறுத்தியே இவ்வரிகள்.
மஞ்சள் நிறமானதும், பத்து இதழ் கொண்டதும் ஆன தாமரை வடிவ மணிபூரக சக்கரத்தில், பிரகாசிக்கும் பூரண சந்திரனைப் போன்ற மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் மனக் கண்ணால் நோக்கி, நுட்பமாக பூரணமாக நின்றால் மூக்கு நுனியின் முடிவில் வாசி நிற்கும்; இந்த நிலையில் உடல் வருத்தம் தரா அளவில் தொடர, மனம் வாக்கு காயம் ஒன்றுபட்டு, தீப தரிசனம் காட்டி நிற்கும்; ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்து விடுவதாகிய தூக்கத்தைக் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்தத்தை தருவதான இடம் அறிந்து ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும்.
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில், ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில், அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில், பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி, தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே தொழிலாகி இறக்கின்றார்.
விளக்கஉரை
இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
அளி அற்றார் – தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்
இனிய ஓலியை தரும் வீணையை உடையவர்களும், யாழினை வாசிப்பவர்களும் ஒரு பக்கத்தில் இருந்து ஒலி எழுப்பவும், மற்றொரு பக்கத்தில் இருந்து மறையாகிய ரிக் முதலிய வேதங்களோடு, நினது புகழை பாடக்கூடியதான தோத்திர பாடல்களை துதித்தும் நெருக்கமாக தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் கொண்டவர்கள் மற்றொரு புறத்திலும், உன்னை ஆராதனை செய்பவர்கள், பேரன்பின் காரணமாக அழுகை கொண்டவர்கள், உள்ளம் அன்பில் நைந்து உருகுவதாலும், திருவருள் இன்பத்தை ஆராமையால் மிக்கத் துய்ப்பதனால் நிகழும் மெய்ப்பாடு ஆகிய துவள்கை கொண்டும் ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்திலும் இருக்கப் பெற்றவனே! இவர்களோடு சேர்த்து என்னையும் ஆண்டு இன்னருள் புரிய பள்ளி எழுந்தருளாயே.
விளக்கஉரை
விதிக்கப்பட்டவாறு உன்னைத் தொழுகிறார்கள்; யாம் வணங்கும் மற்றும் தொழும் வகை அற்று இருக்கிறோம்; அவர்களுக்கு அருளுதலை செய்தல் போலவே எனக்கும் அருளவேண்டும் என்பதை உணர்த்தவே ‘ என்னையும்’ எனும் சொற்றொடர்.
நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்; தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால்
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
தோற்பை போன்றதாகிய இந்த உடம்பினுள் இருந்து பல தொழில்களையும் செய்விப்பவனாகிய கூத்தன், இந்த உடலை விட்டுப் புறப்பட்டுப் போனபின் அந்த உடம்பை நாரினாற் கட்டி இழுத்தால் என்ன, நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால் என்ன, கண்ட இடத்தில் போட்டால் என்ன, அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன; அதனால் வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.
விளக்கஉரை
தோற்பை – இழிவு தோன்றுதலின் பொருட்டு
அசைவோன் அவனே; ஆதலால் இந்த உடம்பில் ஒன்றுமில்லை; ஆதலால் இவ்வுடலை பாதுகாத்தல் பொருட்டு அந்த உயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க எனும் பொருள் பற்றியது.
இறந்தவரது எலும்புகளையும், எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் எதுவெனில், சிறந்தவர்கள் என்று சொல்லப்படுவதும் மேம்பட்டதும், உயர்வானதும் ஆன மனைவி மற்றும் மக்கள்,சுற்றத்தார்கள், செல்வம் ஆகியவற்றை துறந்தவர்களாகிய ஞானியர்கள் சேரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலம் ஆகும்.
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல் காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
விளக்கஉரை
ஒவுதல் – ஒழிதல்
புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! மேகம் போன்ற கூந்தலில் சந்திரனைத் தரித்தவளே! அழகிய மயில் போன்றவளே! இனிய குயில் போன்றவளே! அதிக வினைகொண்டு வாழ்தல் இன்னும் எத்தனை நாள்? காலத்தால் மிகக் குறிகியதாக கருதப்படும் அற்ப வாழ்வு இன்னும் எத்தனை நாள்? நீண்ட காலமாக பகை கொண்டு அதன் காரணமாக அழியும் வகையில் வாழ்ந்திருத்தல் இன்னும் எத்தனை நாள்? விதிக்கப்பட்ட விதியின்படி இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? பிறப்பிற்கு காரணமான இரு வினையில் பட்டு அதனை அனுபவித்து, வினைகளை அழித்து விடுபட இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? மாறாத பற்று, அன்பு, நம்பிக்கை மற்றும் உண்மை கொண்டு பின் அது விலக அதனால் விளையும் பகைமை கொண்டு கொடுமை செய்து கொண்டு இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? பொதிகை மலையில் உறைபவனாகிய அகத்தியர், திருமால், அயன், காமன், அஷ்டதிக் பாலகர்கள் ஆகிய திசைப் பாலர்கள் போன்றவர்கள் போற்றும் உனது இரு சரணக் கமலங்களில் ஒன்றாக இருந்து மகிழ்ந்து இருப்பது எந்த நாளோ?
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம் வைத்த விளக்கும் எரியுதடி அச்சுள்ள விளக்கு வாலையடி அவி யாம லெரியுது வாலைப்பெண்ணே!
கொங்கணர்
பதவுரை
வாலைப்பெண்ணே! உச்சி ஆகிய துரியத்திற்கு நேராக உகாரம் ஆனதும், மனோன்மணித் தாயார் வாசம் செய்யும் அண்ணாக்குக்கு மேலே இருப்பதுமான உண்ணாக்கு மேலே சதாசிவமும், சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமானதும், சப்தம் பிறந்த இடமானதுமான இடத்தில் தினமும் வைத்த விளக்கானது சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும். அந்த வலிமை வாய்ந்த விளக்கானது அணைந்து விடாமல் எப்பொழுதும் சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும்.
விளக்கஉரை
இவரின் பெரும்பாலான பாடல்கள் சாக்தம் சார்ந்த வாலைப் பெண்ணை முன்வைத்து எழுதப்பட்டவை என்பதால் பாடல்களில் வாலைப்பெண்ணே என்பது இடம்பெறும்.
அச்சு – அடையாளம்; உயிரெழுத்து; வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு; வலிமை; அச்சம்; துன்பம்; நெசவாளர் நூல்களை அழுத்தப் பயன்படுத்தும் கருவி.
அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித் தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்கு அளிப்பன் கண்கட்கு இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்
சிவஞான சித்தியார்
பதவுரை
மல மாயைகளுக்கு உட்பட்ட உயிர்கள் அதை விலக்க முதன்மையாக இருப்பது அருள் எனப்படும் இறைவனின் சத்தியாகும். இவ்வாறாக பெறப்படும் சக்தி சிவம் என்பததில் இருந்து தனியே அறியப்படுவது இல்லை, அந்த சக்தி விடுத்து சிவம் என்பதும் தனித்து இல்லை. அத்தகைய சிவமானது, கண்ணில் தோன்றும் இருளை சூரியன் தன் ஒளியால் ஓட்டுதல் போல, உயிர்களின் அறிவை மறைத்து, மயக்கம் தரும் மல மாயையை தனது அருளாலே நீக்கி மண்ணில் தன் அருளை அளித்து, முத்தியைக் கொடுப்பான்.
அம்மையாய், அப்பனாய், உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய். தம்மால் படைக்கப்பட்ட உலகத்தின் தோற்றத் திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய் என்பன அத்திருவுருவத்தின் பெருமைகளைப் பற்றி கூறும்.
பித்தம் கொண்டவன் எச்சுவையும் அறிய மாட்டான். அதை மாற்றி இனிமை சுவை உடைய பொருள்களை காட்டி அருளினாய்; ஞான வடிவில் இருந்து என் ஊன் உருக்கினாய்; எலும்புகளை உருக்குமாறு செய்தாய்; அவ்வாறு பேரருள் செய்த நீ என் வினைபற்றி நிற்கும் ஐம்புலன்களில் இருந்தும் காக்க மாட்டாயா எனும் பொருள் பற்றியது.
ஐம்புலன்களை யானைகளுக்கு உவமையாக கூறியமையால் யானைகள் ஐந்து என்று கொள்க.
மாலை நேர செவ்வந்தி வானம் போன்ற நிறம் உடையவராகவும், பச்சை நிறமான தேவியை தழுவிக் கொண்டவராகவும், அவ்வாறே தேவியாலும் பரஸ்பரம் தழவிக் கொள்ளப்பட்டவராகவும், பாசம், பூமாலை இவற்றை தாங்கிய திருக்கரத்துடன் அபய முத்திரை கொண்டிருப்பவருமான கணபதியை வணங்குகிறேன்.
பிரம்மச்சாரி விரதமே பெரும் தவம் என்பதால் பரமபதம் கிடைக்கும். விஷயங்களை நினைத்தல், பார்த்தல், பேசுதல், தொடுதல் மற்றும் அனுபவித்தல் ஆகிய இவற்றினால் பிரம்மச்சாரிய விரதம் கெடாமல் காக்க வேண்டும். இது பிரம்மச்சாரிகளுக்கு எப்பொழுதும், கிரகஸ்தர்களுக்கு காலத்தை நிர்ணயித்தும் விதிக்கப்படுகிறது. கிரகஸ்தன் தனது ஜன்ம நட்சத்திரத்திலும், புண்ணிய காலங்களிலும், தேவ பூஜை செய்யும் காலங்களிலும், தர்ம காரிய காலங்களிலும் இவ் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தன் மனைவி விடுத்து வேறு மாதரிடம் செல்லாமல் இருப்பவன் பிரம்மச்சாரி விரதத்தின் பலனை அடைவான். இவ்விரதத்தால் பரிசுத்தமும், ஆயுளும் வாய்க்கப் பெறும்.
உமை
தர்மத்தை விரும்புவர்கள் தீர்த்த யாத்திரையை விரதமாகச் சொல்கிறார்கள். உலகில் உள்ள தீர்த்தங்களைப் பற்றி எனக்கு சொல்லக் கடவீர்.
சிவன்
உலகில் உள்ள மகா நதிகள் அனைத்தும் தீர்த்தங்கள் ஆகும். தீர்த்த யாத்திரையை என்பது ஆத்ம சுத்திக்காவும், தேக சுத்திக்காவும் பிரம்மாவால் ஏற்படுத்தப்பட்டது. அவற்றுள் கிழ் திசை நோக்கி செல்லும் தீர்த்தங்கள் சிறந்தவைகள். நதிகள் சங்கமம் ஆகும் இடமும், கடலோடு கலக்கும் இடமும் மிகச் சிறந்தவைகள். கடலோடு கலக்கும் இடங்களில் உள்ள மரங்கள் தேவர்களாலும், ரிஷிகளாலும், மகான்களாலும் அடையப் பெற்று நீராடி இருப்பதால் அவைகளும் சிறந்த தீர்த்தமாகின்றன. மகரிஷிகளால் அடைப் பெற்றதால் அருவிகளும், கிணறு மற்றும் குளங்களும் தீர்த்தங்கள் என்று அறிவாயாக. இனி இதில் ஸ்தானம் செய்யும் முறையை உரைக்கிறேன். பிறந்தது முதல் அதிக நியமங்களுடன் வாழ்ந்து, தீர்தங்களுக்குச் சென்று மூன்று வேளை அல்லது ஒரு வேளை உபவாசம் இருக்க வேண்டும். புண்ணிய மாதத்திலும், விரத காலத்திலும், பௌர்ணமியிலும் வெளியில் ஸ்தானம் செய்து சுத்தனாகிப் பின் பக்தியோடு விதிப்படி தீர்த்தத்தில் மூன்று முறை ஸ்தானம் செய்ய வேண்டும். கரையில் இருக்கும் ப்ராமணர்களுக்கு தட்சணை கொடுத்து, திருக்கோயிலுக்குச் சென்று பூஜை செய்து பின் திரும்பிச் செல்லவேண்டும். இது அனைவருக்கும் விதிக்கப்பட்டது. அருகில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவதைக் காட்டிலும் தொலைவில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவது நல்லது. தீர்த்தஸ்தானமானது தவத்திற்கும், பாவம் போக்குவதற்கும் மன சுத்தத்திற்கும் உரியது என்பதால் ஜன்ம சுத்தனாய் இருப்பவன் புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதன் பலன்களை மனிதன் மறுமையில் அடைவான்.
உமை
உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?