பாடல்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
இனிய ஓலியை தரும் வீணையை உடையவர்களும், யாழினை வாசிப்பவர்களும் ஒரு பக்கத்தில் இருந்து ஒலி எழுப்பவும், மற்றொரு பக்கத்தில் இருந்து மறையாகிய ரிக் முதலிய வேதங்களோடு, நினது புகழை பாடக்கூடியதான தோத்திர பாடல்களை துதித்தும் நெருக்கமாக தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் கொண்டவர்கள் மற்றொரு புறத்திலும், உன்னை ஆராதனை செய்பவர்கள், பேரன்பின் காரணமாக அழுகை கொண்டவர்கள், உள்ளம் அன்பில் நைந்து உருகுவதாலும், திருவருள் இன்பத்தை ஆராமையால் மிக்கத் துய்ப்பதனால் நிகழும் மெய்ப்பாடு ஆகிய துவள்கை கொண்டும் ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்திலும் இருக்கப் பெற்றவனே! இவர்களோடு சேர்த்து என்னையும் ஆண்டு இன்னருள் புரிய பள்ளி எழுந்தருளாயே.
விளக்க உரை
- விதிக்கப்பட்டவாறு உன்னைத் தொழுகிறார்கள்; யாம் வணங்கும் மற்றும் தொழும் வகை அற்று இருக்கிறோம்; அவர்களுக்கு அருளுதலை செய்தல் போலவே எனக்கும் அருளவேண்டும் என்பதை உணர்த்தவே ‘ என்னையும்’ எனும் சொற்றொடர்.