பாடல்
பாகு சேருங் மொழியணங்கே
பணத்தை அணியுஞ் சதுர்த்தோளி
பாதி மதியுங் கதிரணியும்
பரம் ஞான வெளிச்சுடரே
ஆகும் பருவம் அறிந்தென்றன்
ஆவி நாளும் உபயபதம்
அடுத்துக் கவிதைச் சரந்தொடுத்தே
அமைந்து பொழிய வரம்தருவாய்
ஏகு மயக்கத் துட்டருடன்
இனிதா எனைச்சேத் தகற்றாதே
இமவான் அளித்த திருமகளே
எங்கும் நிறைந்த பெருவெளியே
வாகு பொருந்துங் கிருஷ்ணனது
வரிசைத் துணைவி சுகவதனி
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! இனிமை தரும் வெல்லப்பாகு போன்ற மொழியை உடையவளே! நான்கு தோள்களிலும் செல்வத்தால் பெறப்பட்டதும், அலங்கரிக்கப்பட்டதும் ஆன ஆபரணங்களை அணிந்தவளே! அரை வட்டமான சந்திரனையும், அதன் கதிர்களாகிய கிரணங்களையும் அணியும் சிறந்ததும், தெய்வீகமானதும் ஆன ஞானமாகிய சுடரே! இமவான் அளித்த இலட்சுமியே! எங்கும் நிறை பூரணத்துடன் இருக்கும் பெருவெளி ஆனவளே! அழகில் கிருஷ்ணருக்கு ஒப்பானவளே! இன்பம் தரும் திருமுகம் உடையவளே! ‘போ, செல், நட‘ என மயக்கம் கொண்டு எனக்கு கட்டளை இடும் தீயவர்களுடன் என்னைச் சேர்த்து உன்னிடம் இருந்து என்னை அகற்றாதே; எனக்கான பக்குவ நிலையை அறிந்து, உன்னால் வழங்கப்பட்ட இரு தாளினைப்பற்றி, எனது உயிரானது இடைவிடாமலும், சரமாக தொடுப்பது போலும் கவிதையாக பொழியும் வரத்தினை அருள்வாயாக.
விளக்க உரை
- அணங்கு – அழகு; வடிவு; தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர்; வருத்திக் கொல்லும் தெய்வமகள்; தீண்டி வருத்தும் தெய்வப்பெண்; வருத்தம்; நோய்; மையல்நோய்; அச்சம்; வெறியாட்டு; பத்திரகாளி; தேவர்க்காடும் கூத்து; விருப்பம்; மயக்க நோய்; கொலை; கொல்லிப்பாவை; பெண்
- பாகு – பகுதி; பிச்சை; கரை; சத்தி
- பரம – பொருள்; மேலான; சிறந்த; மிகுந்த; மிகவும்; மிக; நிரம்ப; தெய்வீகமான