பாடல்
நோக்குவது பூரணச்சந் திரனைநோக்கு
நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
மூக்குநுனி யந்தமதில் வாசிநின்று
நலங்காமல் தீபமதில் நாடும்பாரு
வாக்குமன தொன்றாகி நின்றுபாரு
மக்களே கன்பசுவு வாழ்வுண்டாகும்
தூக்குமென்ற கொடுமைதனை அகற்றிமைந்தா
சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே
அகத்தியர் சௌமிய சாகரம்
பதவுரை
மஞ்சள் நிறமானதும், பத்து இதழ் கொண்டதும் ஆன தாமரை வடிவ மணிபூரக சக்கரத்தில், பிரகாசிக்கும் பூரண சந்திரனைப் போன்ற மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் மனக் கண்ணால் நோக்கி, நுட்பமாக பூரணமாக நின்றால் மூக்கு நுனியின் முடிவில் வாசி நிற்கும்; இந்த நிலையில் உடல் வருத்தம் தரா அளவில் தொடர, மனம் வாக்கு காயம் ஒன்றுபட்டு, தீப தரிசனம் காட்டி நிற்கும்; ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்து விடுவதாகிய தூக்கத்தைக் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்தத்தை தருவதான இடம் அறிந்து ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும்.
விளக்க உரை
- நலங்குதல் – நொந்துபோதல்; வருந்துதல்; நுடங்குதல்; கசங்குதல்
- மனம், வாக்கு, காயம் ஆகியவை ஒன்றுபட்ட நிலையில் ஆத்ம ஜோதியை நாடுவது எளியதும், சாத்தியமாகவும் ஆகிறது.
( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும், குருவருளால் காட்டப் பெற்றாலும் வினையின் காரணமாக உணர்தலில், எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)