பாடல்
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
விளக்க உரை
- ஒவுதல் – ஒழிதல்
- புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
- நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.