பாடல்
பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே
பணிவிடா விடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் றூய னல்னேன் றூமலர்ப் பாதங் காண்பான்
அணியனா யறிய மாட்டே னதிகைவீ ரட்ட னீரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே! நோய்களிடம் இருந்து நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன், செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அந்த வினைகளை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய், அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
விளக்க உரை
- பெற்றம் – விடை
- பணி – கருமம்
- பாசனம் – சுற்றம்