பாடல்
விதியின் முறைமை எத்தனைநாள்
வினையிற் படுவ தெத்தனைநாள்
விசுவாச் சிக்கக் கொடுமைபல
விளையும் பகையும் எத்தனைநாள்
அதிக வினையும் எத்தனைநாள்
அற்ப வாழ்வும் எத்தனைநாள்
அதிலே குரோதித் திருப்பதெலாம்
அழியும் வகையும் எந்நாளோ
பொதிகை மலையன் அரிஅயனும்
புகழ்சேர் காமன் திசைப்பாலன்
போற்றும் உன்றன் இருசரணம்
பொருந்தி மகிழ்வ நெந்நாளோ
மதியைத் தரித்த முகில்வேணி
மயிலே குயிலே வான்மணியே
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! மேகம் போன்ற கூந்தலில் சந்திரனைத் தரித்தவளே! அழகிய மயில் போன்றவளே! இனிய குயில் போன்றவளே! அதிக வினைகொண்டு வாழ்தல் இன்னும் எத்தனை நாள்? காலத்தால் மிகக் குறிகியதாக கருதப்படும் அற்ப வாழ்வு இன்னும் எத்தனை நாள்? நீண்ட காலமாக பகை கொண்டு அதன் காரணமாக அழியும் வகையில் வாழ்ந்திருத்தல் இன்னும் எத்தனை நாள்? விதிக்கப்பட்ட விதியின்படி இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? பிறப்பிற்கு காரணமான இரு வினையில் பட்டு அதனை அனுபவித்து, வினைகளை அழித்து விடுபட இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? மாறாத பற்று, அன்பு, நம்பிக்கை மற்றும் உண்மை கொண்டு பின் அது விலக அதனால் விளையும் பகைமை கொண்டு கொடுமை செய்து கொண்டு இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? பொதிகை மலையில் உறைபவனாகிய அகத்தியர், திருமால், அயன், காமன், அஷ்டதிக் பாலகர்கள் ஆகிய திசைப் பாலர்கள் போன்றவர்கள் போற்றும் உனது இரு சரணக் கமலங்களில் ஒன்றாக இருந்து மகிழ்ந்து இருப்பது எந்த நாளோ?
விளக்க உரை
- படுதல் – உண்டாதல்,தோன்றுதல், உதித்தல், நிகழ்தல், மனத்தில் தோற்றுதல், பூத்தல், ஒன்றன்மீது ஒன்று உறுதல், மொய்த்தல், அகப்படுதல், புகுதல், பெய்தல், பெரிதாதல், மேன்மையடைதல், அழிதல், சாதல், மறைதல்
- புகழ்சேர் காமன் – எவரும் எதிர்க்கத் துணியாத போது, தான் அழிந்தாலும் உலக நன்மையின் பொருட்டு சர்வேஷ்வரனை எதிர்ததால் ‘புகழ்சேர்’ காமன்