பாடல்
சிந்தா மணியின் பூசைசெய்தால்
செகத்தில் எவர்க்கும் குறைவருமோ
செல்வ முடனே கல்விஅருள்
திரளாய் விளையும் என்பவெல்லாம்
முன்றா னான போதிலையே
முதல்வி உன்றன் அருளுலகில்
மூழ்கிக் கனமாய் வினையிருளும்
முறியப் படர்ந்து மறைந்ததுபோல்
இந்தா எனவே நீகொடுத்த
இயல்பே யல்லால் மானிடரோ(டு)
ஏற்கை சேர்க்கை அவர்உரைத்த(து)
ஏதா கினுமுண் கோஉரையாய்
மைந்தா எனவே அமுதளித்த
வகையும் நீயும் மறந்தாயோ
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! எனது மைந்தனே என்று என்னை அழைத்து அமுதளித்த வகையினை நீ மறந்து விட்டாயா! விரும்பியது அனைத்தும் கொடுக்கவல்ல தெய்வமணி ஆகிய சிந்தாமணி மந்திரம் கொண்டு பூசை செய்தால் இந்த செகத்தில் எவர்க்கும் குறைவருமோ? செல்வம், கல்வி, அருள் ஆகியவை விளைந்தன; முதல்வி ஆகிய உன் அருள் உலகில் காலத்தால் அறிவிக்கப் பெறும் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற காலங்கள் இல்லை; அவ்வாறான காலங்களில் கனமாக சூழ்ந்து இருக்கும் வினை இருளும் விலகியது; இவ்வாறு கிடைக்கப் பெற்றவை அனைத்தும் உன் இயல்பான கொடுக்கும் தன்மையினால் கிடைக்கப் பெற்றவை; அவ்வாறான இயல்பாக கொடுக்கும் தன்மை இல்லாத மானிடர்களை ஏற்பதும், அவர்களோடு சேருவதும், சேர்ந்து சொல்லுதலும் ஏதாவது உண்டா? இதை உரைப்பாய்.
விளக்க உரை
- இந்தா எனவே நீகொடுத்த இயல்பே – எதையும் எதிர்பாராமல் இயல்பாக கொடுக்கும் குணம் அன்னைக்கு உரியது என்பதை வலியுறுத்தியே இவ்வரிகள்.