பாடல்
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!
கொங்கணர்
பதவுரை
வாலைப்பெண்ணே! உச்சி ஆகிய துரியத்திற்கு நேராக உகாரம் ஆனதும், மனோன்மணித் தாயார் வாசம் செய்யும் அண்ணாக்குக்கு மேலே இருப்பதுமான உண்ணாக்கு மேலே சதாசிவமும், சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமானதும், சப்தம் பிறந்த இடமானதுமான இடத்தில் தினமும் வைத்த விளக்கானது சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும். அந்த வலிமை வாய்ந்த விளக்கானது அணைந்து விடாமல் எப்பொழுதும் சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும்.
விளக்க உரை
- இவரின் பெரும்பாலான பாடல்கள் சாக்தம் சார்ந்த வாலைப் பெண்ணை முன்வைத்து எழுதப்பட்டவை என்பதால் பாடல்களில் வாலைப்பெண்ணே என்பது இடம்பெறும்.
- அச்சு – அடையாளம்; உயிரெழுத்து; வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு; வலிமை; அச்சம்; துன்பம்; நெசவாளர் நூல்களை அழுத்தப் பயன்படுத்தும் கருவி.
( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)