உமை
பிரம்மச்சாரி விரதத்தை காப்பது எவ்வாறு?
சிவன்
பிரம்மச்சாரி விரதமே பெரும் தவம் என்பதால் பரமபதம் கிடைக்கும். விஷயங்களை நினைத்தல், பார்த்தல், பேசுதல், தொடுதல் மற்றும் அனுபவித்தல் ஆகிய இவற்றினால் பிரம்மச்சாரிய விரதம் கெடாமல் காக்க வேண்டும். இது பிரம்மச்சாரிகளுக்கு எப்பொழுதும், கிரகஸ்தர்களுக்கு காலத்தை நிர்ணயித்தும் விதிக்கப்படுகிறது. கிரகஸ்தன் தனது ஜன்ம நட்சத்திரத்திலும், புண்ணிய காலங்களிலும், தேவ பூஜை செய்யும் காலங்களிலும், தர்ம காரிய காலங்களிலும் இவ் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தன் மனைவி விடுத்து வேறு மாதரிடம் செல்லாமல் இருப்பவன் பிரம்மச்சாரி விரதத்தின் பலனை அடைவான். இவ்விரதத்தால் பரிசுத்தமும், ஆயுளும் வாய்க்கப் பெறும்.
உமை
தர்மத்தை விரும்புவர்கள் தீர்த்த யாத்திரையை விரதமாகச் சொல்கிறார்கள். உலகில் உள்ள தீர்த்தங்களைப் பற்றி எனக்கு சொல்லக் கடவீர்.
சிவன்
உலகில் உள்ள மகா நதிகள் அனைத்தும் தீர்த்தங்கள் ஆகும். தீர்த்த யாத்திரையை என்பது ஆத்ம சுத்திக்காவும், தேக சுத்திக்காவும் பிரம்மாவால் ஏற்படுத்தப்பட்டது. அவற்றுள் கிழ் திசை நோக்கி செல்லும் தீர்த்தங்கள் சிறந்தவைகள். நதிகள் சங்கமம் ஆகும் இடமும், கடலோடு கலக்கும் இடமும் மிகச் சிறந்தவைகள். கடலோடு கலக்கும் இடங்களில் உள்ள மரங்கள் தேவர்களாலும், ரிஷிகளாலும், மகான்களாலும் அடையப் பெற்று நீராடி இருப்பதால் அவைகளும் சிறந்த தீர்த்தமாகின்றன. மகரிஷிகளால் அடைப் பெற்றதால் அருவிகளும், கிணறு மற்றும் குளங்களும் தீர்த்தங்கள் என்று அறிவாயாக. இனி இதில் ஸ்தானம் செய்யும் முறையை உரைக்கிறேன். பிறந்தது முதல் அதிக நியமங்களுடன் வாழ்ந்து, தீர்தங்களுக்குச் சென்று மூன்று வேளை அல்லது ஒரு வேளை உபவாசம் இருக்க வேண்டும். புண்ணிய மாதத்திலும், விரத காலத்திலும், பௌர்ணமியிலும் வெளியில் ஸ்தானம் செய்து சுத்தனாகிப் பின் பக்தியோடு விதிப்படி தீர்த்தத்தில் மூன்று முறை ஸ்தானம் செய்ய வேண்டும். கரையில் இருக்கும் ப்ராமணர்களுக்கு தட்சணை கொடுத்து, திருக்கோயிலுக்குச் சென்று பூஜை செய்து பின் திரும்பிச் செல்லவேண்டும். இது அனைவருக்கும் விதிக்கப்பட்டது. அருகில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவதைக் காட்டிலும் தொலைவில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவது நல்லது. தீர்த்த ஸ்தானமானது தவத்திற்கும், பாவம் போக்குவதற்கும் மன சுத்தத்திற்கும் உரியது என்பதால் ஜன்ம சுத்தனாய் இருப்பவன் புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதன் பலன்களை மனிதன் மறுமையில் அடைவான்.
உமை
உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?