அமுதமொழி – விளம்பி – மார்கழி – 11 (2018)

பாடல்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! கர்வம் கொண்டு தலை கிள்ளப்பட்ட நான்முகன் மண்டை ஓட்டினைக் கொண்டு பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! அபிடேகத்தீர்த்தத்தையும், பூவையும்,புகையும் (பிறவும்) உனக்கு சமர்ப்பிப்பது நின்னை வழிபடுவதை மறந்தறியேன்; தமிழ் மொழியில் அமைந்த நின்புகழ் பாடும் இசைப் பாடல்களை பாடுதலை மறந்தறியேன்; வினை பற்றி இன்புறும் பொழுதிலும், துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன்; உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவாதவனாய் இருக்கிறேன்; (அடியேன்) உடலின் உள்ளே இருப்பதும், மிக்க வருத்துவதும் ஆன சூலை நோயினால் வருந்துகின்றேன்; அந்த வருத்தம் தரும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய்.

விளக்க உரை

  • சலம், பூ, தூபம், தமிழோடிசை – அர்ச்சனை மற்றும் தோத்திரத்திரம் செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 10 (2018)

பாடல்

மூலம்

கனவு கனவென்று காண்பரிதாங் காணில்
நனவி லவைசிறிதும் நண்ணா – முனைவனரு
டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

பதப் பிரிப்பு

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9  – உமாபதி சிவம்

பதவுரை

மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே! உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் என விரியும். அவ்வாறு உயிரானது கண்டத்தில் இருந்தில் செயல்படும் நிலை ஆகிய கனவினை காணும் போது கனவில் நின்று  ‘இது கனவு’ என்று அறிய இயலாது. அகம் விழிப்புற்ற நிலையாகிய நனவில் அந்த கனவில் கண்ட காட்சிகள் காண இயலாது. முனைவன் அருள் பெறும் போது  காரிய அவத்தைகள் நீங்கப் பெற்று, காரண அவத்தையின்  கேவல அவத்தை, சகல அவத்தை ஆகியவைகளும் நீங்கப் பெற்று,  பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை ஆகிய சுத்த அவத்தையை காணுமாறு செய்வாயாக.

விளக்க உரை

  • ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ எனும் சிவப்பிரகாசரின் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • உயிரானது ‘அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருள்’ எனபதும்,  உயிர் தனித்து இயங்கினாலும், இறைவன் தனிக் கருணையினால் அன்றி அவத்தைகள் விலகி அது நிலை பேறு கிட்டாது என்பதும் விளங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 9 (2018)

பாடல்

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வளமான சோலைகளையுடைய திருப்புங்கூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே,  மிருகண்ட மகரிஷிக்கும்,  அவருடைய மனைவி ஆகிய  மருதவதிக்கும் மகனாக பிறந்த அந்தணர் குலத்தை சேர்ந்த மார்கண்டேய முனிவர் தன் முடிவு அறிந்து உன்னை அடைக் கலமாக அடைய, அவரைக் காத்தல் பொருட்டு,  அவர் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்தவனே, உனக்கு அடியேனாகிய யான், உனது அந்த ஆற்றலை அறிந்து கொண்டு என்னையும் எம தூதர்கள் வந்து துன்புறுத்துவார்கள் எனில், என்தந்தையாகிய நீ,  ‘இவன் என் மற்றொரு அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்’ என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்.

விளக்க உரை

  • மார்க்கண்டேய முனிவருக்கு அருள் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து பாடியது.
  • வவ்வினாய் – வன்மை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 8 (2018)

பாடல்

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

செல்வத்தையே தேடுவதன் பொருட்டு, மனம் செருக்குற்று, நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணம் அற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியை உறைவிடமாக கொண்டவன் திருவடியினை சேர்வீராக.

விளக்க உரை

  • மாடு – செல்வம்
  • நும்முளே – உங்களுக்குள்
  • கூடு – உடல்
  • செல்வம் தேடுதலில் மகிழ்ந்து எனவும், பொய் பேசுவதால் உள்ளுக்குள் மகிழ்வு கொண்டு எனவும் கொள்ளலாம்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 7 (2018)

பாடல்

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அடியார்கள் நாள்தோறும் தங்கள் மனத்தினால், கடைகுழன்று சுருண்ட கூந்தலை உடையவளும், இன்பம் தரத் தக்கவளுமாக திரிபுரையை தியானிக்க, அங்ஙனம் தியானிக்கும் அடியவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, மெய் ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி,  திரோதான சத்தியாக  நின்று, பின் அருள் சத்தியாகவே விளங்குவாள்.

விளக்க உரை

  • திரோதான சத்தி, அருள் சத்தி என வேறு வேறு ஆகாமல்  அருள் சத்தி இயல்பும், திரோதான சத்தி  பயனும் உணர்த்தப் பெறும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 6 (2018)

பாடல்

என்ன மயக்கம் இதுபுதுமை
      இதையா ருடனே யான்உரைப்பேன்
   எடுக்க முடியா வினைச் சுமையை
      ஏழைத் தலைமீ தெடுத்தேற்றி

மன்னிப் பிறக்க இடமும் இன்றி
      வாகாய் நடக்க வழியும் இன்றி
   மயக்கக் கொடுவேல் முனைக்கானில்
      வனவே டர்கள்செந் நாயுடனே

என்னை மறிக்கக் கொடுமையுடன்
      எழுந்தே உழுவை பாய்ந்திடவும்
   இதிலே மயங்கி அலைந்திடவிட்(டு)
      எங்கே ஒளித்தாய் ஈஸ்வரியே

வண்ண மயிலே எனக்குரைத்த
      வசன மதுபொய் யானதென்னோ
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அழகிய மயில் போன்றவளே! புதுமையானது இந்த மயக்கம்; எனக்கு ஏற்பட்ட இந்த மயக்க அனுபவித்தினை யாரிடம் பகிர்வேன்? எடுத்து சுமக்க இயலாததும்,  தாங்கிக் கொள்ள இயலாததும்  ஆன வினைச் சுமையை என் தலை மேல் ஏற்றி, அந்த வினை பற்றி தொடர்வதால் இந்த மண்ணில் பிறக்க இடமும் இன்றி, விதிக்கப்பட்ட நெறி முறைகளுடன் வாகாய் நடக்க வழியும் இன்றி,  புவியாகிய இந்தக் காட்டில்  வன வேடர்கள் மயக்கத்தினைத் தரும் கொடிய வேலினைக் ஏந்தி, செந்நாய்கள் என்னை தடுக்கவும், கொடுமை உடைய புலி என் மீது பாய இருக்கின்ற நிலையில்  மயக்கம் தந்து இதிலே என்னை அலையவிட்டு எங்கே ஒளிந்தாய் ஈஸ்வரியே, இந்த நிலை எனக்கு ஏற்படலாமா?  எனக்கு நீ உரைத்த தேன் போன்ற இனிய சொல் பொய்யாகிவிட்டதா?

விளக்க உரை

  • உழுவை – புலி, கடல்மீன் வகை, நன்னீர் மீன் வகை; தும்பிலி என்ற கடல்மீன், பெருமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 5 (2018)

பாடல்

வைதோரைக் கூடவை யாதே: – இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே

கடுவெளிச் சித்தர்

பதவுரை

உனக்கு தீங்கு செய்வதன் பொருட்டு இகழ்ந்து பேசியவருக்கும் கூட தீங்கு எண்ணாதே; இந்த வையகம் முழூவதும் வஞ்சனைகளால் சுழ்ந்து கெடுதலால் நிரம்பினாலும் அகத்துள் ஒரு பொய்யையும் நுழையவிடாதே; (இம்மைக்கும் மறுமைக்கும் ) உயர்வு தராத வினைகளை செய்யாதே; பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே.

விளக்க உரை

  • கடுவெளிச் சித்தர்  பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தவை. இதனை

பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே

எனும் பல்லவியையும் சேர்த்துத் தெளிக.

  • வைதல் – ஏசல், இகழ்தல், பழிமொழி, பழிச்சொல், ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 4 (2018)

பாடல்

 

எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
     என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
     சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
     தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
     கென்னைஆண் டருளிய நினையே

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

இந்தப் பிறப்பிலேயே பெறுதற்கு உரிய சாகாவரம் எனும் இறவா நிலையாகிய மெய்ப் பயனை எனக்கு அளித்து, என்னை ஆண்டு கொண்டு அருளிய பெருமானாகிய உன்னைத் தளர்ச்சி உற்ற பொழுதில் கிடைத்த செல்வம் என்பேனோ; என்னுயிர்க்கு உரித்தான இன்பம் என்பேனோ;  விரும்பியப் பொருளை நுகரும் பொழுது மனத்தில் தோன்றி நிறைகின்ற மிக்க பெரும் மகிழ்ச்சி என்பேனோ;  ஒளிப் பொருளுக்கெல்லாம் முதன்மை ஒளியாய் நிற்கும் சிவபர ஒளி  என்பேனோ; வினை பற்றி நின்று யாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் பொறுத்து அருளும் அருள் நிதி என்று சொல்வேனோ;  தனிப் பெரும் தலைவன் என்பேனோ; யாது சொல்லி மகிழ்வேன்?

விளக்க உரை

  • எய்ப்பு – தளர்ச்சி.
  • வைப்பு – செல்வம்
  • ‘மெய்ப்பயன்’ – இந்த பிறப்பில் பெறுவன ஆகிய யாவும் நிலையின்றிக் கெடுவதால் இறவாமையாகிய நிலைத்த பயன் மெய்ப்பயன் எனும் பொருள் பெற்றது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 3 (2018)

பாடல்

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒற்றியூரை தலமாக உடைய சக்ரவர்த்தியே! மனம் என்னும் தோணியை, அறிவு எனப்படும் துடுப்பை பயன்படுத்தி, சினம் எனும் சரக்கை அந்தத் தோணியில் ஏற்றி, செறிவுடைய பாசக்கடலாகிய பரப்பில் செலுத்தும்போது, மன்மதன் என்ற பாறையில் தாக்கி, அந்தத் தோணி நிலைமாறி கவிழும்போது உன்னை அறிய இயலாதவனாக வருந்துவேன்;  அந்த நிலையில் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக.

விளக்க உரை

  • மனன் ( மன்மதன் ) பாறை
  • மறியும்போது – கீழ்மேலாகும் பொழுது
  • ஒண்ணாது – ஒன்றாது; பொருந்தாது
  • மனனெனும் பாறை – சில பதிப்புகளில் ‘மதன்’ என்று காணப்படுவதாக தெரிகிறது. ‘மதன்’ என்பது பிழைபட்ட பாடம் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 2 (2018)

பாடல்

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
     காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
     ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
     வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பெரும்பற்றப் புலியூரான் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; கங்கையைத் தாங்குகின்ற நீண்ட சடையை உடையவன்; காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் விரும்பி அருளுபவன்; பொருள் இல்லாதவராகிய வறியவருக்கும், துன்பத்தினால் வருந்தி தன்னை தாங்குவார் எவரும் இலர் என வருந்துபவருக்கும் அருள் செய்பவன்; திருவாரூரிலும் விரும்பி தங்கியிருப்பவன்; தன்னைத் தவிர வேறு எவராலும் தனக்கு ஒப்பிட இயலாதவன்; வானவர்கள் எனப்படும் தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன்; இவ்வாறான அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்க உரை

  • கல்தானை – கல்லாடை; அஃதாவது காவியுடை எனப் பொருள் கொள்வாரும் உளர்.

 

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 25

புகைப்படம் : இணையம்

உமை
தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?

சிவன்

நன்றி உள்ளவர்களுக்கு சிறந்த தர்மம் என்பதாலும் குரு முன்பு உபகாரம் செய்தவர் என்பதாலும் குருவை பூசிக்க வேண்டும். கற்றுத்தரும் குரு, தந்தை மற்றும் தாய் ஆகியோர் குருவிலும் குருவாக கொள்ளவேண்டும். தந்தையின் மூத்த சகோதரரும், இளைய சகோதரரும், தந்தையின் தந்தையும்  தந்தைக்கு சமமானவர்களாகி பூஜிக்க தகுந்தவர்கள்; அது போலவே தாயாரின் மூத்த சகோதரியும், இளைய சகோதரியும், தாயின் தாயும் தாயாக நினைக்கப்பட வேண்டியவர்கள்; கற்றுத் தரும் குருவின் புத்திரனும், குருவின் குருவும் குருவாகிறார்கள்;

மூத்த சகோதரன், அரசன், தாய்மாமன், மனைவியின் தந்தை, பயத்தில் காப்பாற்றியவன்  மற்றும் உணவு இட்டுக் காத்தவன் ஆகியோர் குருவாக சொல்லப்படுகின்றனர்.

தந்தையை திருப்தி செய்பவரை பிரம்ம தேவரும், தாயை திருப்தி செய்பவரை தேவ மாதாக்களும் திருப்தி செய்கின்றனர். எவன் குருவை பூசனை செய்கிறானோ அவன் பிரம்ம தேவரை பூசனை செய்தவனாகவே ஆகிறான். அவர்கள் அதிருப்தியாக இருந்தால் மனிதன் நரகம் அடைவான்.

குருவிடத்தில் நீண்ட பகையையும், விரோதத்தையும் மனதாலும் நினைக்கக் கூடாது; அவர்களுக்கு பிடிக்காத சொல்லைச் சொல்லுதல், பிடிக்காதவற்றை செய்தல், அவர்கள் இருக்கு போது விதண்டாவாதம் செய்தல், குருவுடன் விவாதம் செய்தல், கலகம், பரிகாசம், கேளிக்கைப் பேச்சுகள், குருவிடத்தில் பொறாமை, குருவை தூஷித்தல்  இவற்றை செய்யக் கூடாது;

குருவின் கட்டளையைச் செய்பவனை விட சிறந்த புண்ணியசாலி எதுவுல் இல்லை. குரு பூஜை செய்தல் என்பது யாகம் செய்வதும், பெரும் தவம் செய்வது ஆகியவற்றை விட மேலானது. குருவை வழிபடாவிட்டால் எந்த வித ஆஸ்ரம தர்மமும் இல்லை.

மனம் வாக்கு காயங்களால் குரு, தந்தை, தாய் இவர்களுக்கு தீங்கு செய்யும் பாபம் என்பது சிசுக் கொலையை விட கொடுமையானது. அவர்களை விட பாபம் செய்தவன் உலகினில் இல்லை.

உமை
உபவாசத்தின் முறைகளைப் பற்றி எனக்கு உரைக்கவேண்டும்.

சிவன்

தேகத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கவும், இந்திரியங்களை காயவிடவும், ஒருவேளை புசிப்பதையும் உபவாசம் எனப் பகர்கின்றனர். இவ்வாறு ஆகாரத்தை குறைப்பதால் பெரிய புண்ணியத்தை அடைகின்றனர். உபவாசத்தின் போது தேகத்திற்கு தீங்கு வருமாயின் அதை நீக்குதலின் பொருட்டு பாலையோ அல்லது பழங்களையோ உண்ணலாம்.

உமை
பிரம்மச்சாரி விரதத்தை காப்பது எவ்வாறு?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 1 (2018)

பாடல்

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மின்னலைப் போன்ற பற்களையுடையர்களும், எங்கும் பரவி இருப்பவர்களும் ஆகிய  அசுரர்களின் புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்தவரும், காலங்களால் அளவிட முடியாதவரும், பழமையானவரும் சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில், அன்னத்தின் நடையை ஒத்த உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுகிறார்.

விளக்க உரை

  • திருப்பூந்தராய் எனும் இத் தலத்து பதிகங்களில் முப்புரம் எரித்த நிகழ்வும், உமா தேவியை பாகமாக கொண்டவரும் எனும் அமைப்பில் அமைந்துள்ளன. திருஞான சம்பந்தர் கட்டமைப்பில் இருக்கும் 8வது பாடல் இராவணன் பற்றியது என்பதும், 9வது பாடல் திருமால் மற்றும் பிரம்மாவால் வணங்கப்பட்டவர் என்பதும், 10 வது பாடலில் சமண, பௌத்த மதங்கள் மூலமாக அறிய இயலாதவர் எனும் அமைப்பில் இருந்தும் மாறவில்லை. அப்பாடல்களில் உமை ஒரு பாகனாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
  • சுளிதல் – கோபித்தல்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)

பாடல்

தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான்,  அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி  பிச்சை ஏற்றவர் ஆவார்.

விளக்க உரை

  • துளங்குதல் – அசைதல், நிலைகலங்குதல், தளர்தல், வருந்துதல், ஒலித்தல், ஒளிசெய்தல்,
  • இண்டை – தாமரை, மாலை வகை, , முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி;
  • துளங்கா மணி முடியார் – அஞ்சுவ தொன்றில்லாத முதல்வர்
  • ஈமம் – பிணத்தைச் சுடுங்காடு
  • ‘அண்டத்துக்கு அப்புறத்தார்’ – மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கும் நிலை.
  • ஆதியானார் – எல்லா பொருள்களுக்கும் தாமே முதலாயும், தமக்கொரு முதல்வன் இல்லாதவராயும் உள்ளவர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)

பாடல்

மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக் காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மெய்ப் பொருளாய் இருப்பவனும், திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும், படம் எடுத்து ஆடும்  பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!

விளக்க உரை

  • ‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு  காலன் காலம் அறுத்தான்.
  • ‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே  என்பது உணரப் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)

பாடல்

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒற்றியூர்ப் பெருமானே! உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பானவைகளை நினைவு வைத்துக் வைத்துக் கொண்டு, இந்த உடம்பினைப் பயனற்ற வகையில் பேணி பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகக்கக் கருதியது போல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதவனாய்,  பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, சடுதியில் தான் அழியப் போவதனை நினைவு கொள்ளாது வேறு பல நினைப்புகள் கொண்டது போல  பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை காப்பாற்றி அடியேன் உய்யும் வண்ணம் காத்து அருளவேண்டும்.

விளக்க உரை

  • ஓம்புதல் – காப்பாற்றுதல்; பாதுகாத்தல்; பேணுதல்; வளர்த்தல்; தீங்கு வாராமற் காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்
  • கூடு – உடம்பு
  • வாளா – வீணில்.
  • காம்பு இலா மூழை .- பிடிப்பதற்கு உரிய காம்பு இல்லாத அகப்பை.

Loading

சமூக ஊடகங்கள்

யாசிக்கும் எண்ணம்

புகைப்படம் : திரு.ஐயப்ப மாதவன் - திரைப்பட இயக்குனர்

கொடுத்து சிவந்தவனுக்கு
யாசிக்கும் எண்ணம் தோன்றியது
தன் விருப்பம் அறிவித்தான்
தேவர்களும், ரிஷிகளும்
சித்தர்களும்
தெய்வங்களும் தயக்கம் காட்டினர்.
‘மாற்ற இயலா மாயை புகுதல் என்ன நியாயம்’ என்றனர் தேவர்கள்
‘இருமை இல்லாதவன் யான்’ என்றான்
‘தங்களே இப்படி நாடகம் நடத்தவேண்டுமா’
என்றனர் ரிஷிகள்.
‘யானும் கூத்தன் தானே’ என்று
விடை பகர்ந்து புன்னகை பூத்தான் மாயன்
தங்களை எப்படிப் பிரிவோம்’ என்றனர் சித்தர்கள்
‘வடக்கு நோக்கி வந்து வாழ்த்துவோம் யாம்’
என்றான் விமலன்
கணப் பொழுதினில்
எல்லோராலும் விலக்கத் தக்கவனாகி
விரும்பி யாசகம் துவங்கினான்.
‘என்னம்மா ஆயிற்று அவருக்கு’ என்று கேள்வியுடம்
மறைந்தனர் தாயும் ஒரு குழந்தையும்;
‘யேய், பிச்சைக்காரா, வழிவிடு’
வார்த்தையில் கனல் எழுப்பி புறம்
புகுந்தான் ஒருவன்;
‘கவலை அற்று இரு, கையில் பொருள் விழும்’
என்றான் முடவனொருவன்;
‘நல்லா தான இருக்க,
உழைக்க என்ன கேடு’என்று
உரை பகன்று பிரம்பு வீசினான் ஒருவன்
பின்னொரு பொழுதுகளில்
பிரபஞ்ச உயிர்களில் உறை காலங்களில்
வடு மாறாமல் இருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)

பாடல்

காவே இலங்கும் பொன்னிநதிக்
      கரையே இலங்கும் மயிலைநகர்
   கங்கை முதலாம் புனிதநதி
      கருதிப் பணியும் மூதூரே

பாவே இலங்குங் கவிவாணர்
      பகரும் மறையே தாகமங்கள்
   பயிலும் வீதிக் கமுகிளநீர்
      பாயும் வாழை குருந்தேறும்

ஆவே இலங்கு வயல்சூழும்
      அதிலே நானா விருஷமுடன்
   அமுத ரசமாய்க் கனிபழுக்கும்
      அருகிற் பறவை யினஞ்சூழும்

மாவே இலங்கும் அநுதினமும்
      மருவுங் கயிலை நிகரான
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ வீற்றிருக்கும் இந்த மயிலாபுரி எனும் திருத்தலமானது, சோலைகள் நிறைந்து விளங்குவதும், பொன்னி நதி மற்றும் காவிரி எனப்படுவதும் ஆன நதிக்கரையில் உள்ளதும், கங்கை முதலான புண்ணிய நதிகள் தம் பாவங்களைப் போக்க துலா மாதத்தில் நீராடுவதும், பாக்களை பலவிதமாக இயற்றக் கூடிய கவிகளால் நல்வாழ்வு வாழ்பவனும், சொல்லி உணர்த்தும் படியான வேதங்களும், வேதாகமங்களும் ஓதியும் பயிற்றுவிக்கும் படியான வீதிகளை உடையதும், பாக்கு மரங்கள், இளநீரைத் தரும் தென்னை மரங்கள், நீர் வரத்து மிகையான ஆன  வாழை குருத்துக்களால் நிரம்பியதும், அவற்றுடன் கூடிய வயல் சூழ்ந்ததும், அதில் பலவிதமான மரங்களும், அவற்றில்  அமுதம் போன்ற கனிகளைக் கொண்டதும், அருகினில் பறவை இனங்கள் வாழ்வதும், திருமகளால் நித்தமும் ஒளிர்விடுதலும், கயிலைக்கு நிகரானதுமானதும் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 20 (2018)

பாடல்

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை மையத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே!

இடைக்காடர்

பதவுரை

பிறவிகள் தோறும் தொடர்வதும், தீமை செய்யத் தூண்டுவதும்,  இறையை காணச் செய்யாமல் செய்வதும், நரகத்தில் கொண்டு சேர்ப்பதும், மும்மலம் னப்படுவதுமான ஆணவம், கன்மம், மாயை இவைகளை நீக்கி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று பொறிகளாகிய முப்பொறிக்கு எட்டாததும் காரணப்பாழ், காரியப்பாழ், அறிவுப்பாழ் என்றும் மாயப்பாழ், சீவப்பாழ், அருள் வெளிப்பாழ் என்றும் கூறப்படும் முப்பாழும் கடந்து, உருவம் அற்ற இடத்தில் இருக்கும் முப்பாழும் கடந்ததை புறச் செயல்கள் செய்யும் காலத்திலும்  அக சிந்தையில் வைப்பீர் கோனாரே!

விளக்க உரை

  • செம்மறி யோட்டிய வேலை – புறச் செயல் செய்கையில் அக வழிபாட்டு முறை பற்றியது இப்பாடல்
  • கோனாரே – குலத்தினை குறிப்பிடாமல் பசுக் கூட்டத்தை மேய்ப்பவன் எனும் பொருள் பற்றியது.
  • ஒப்பு நோக்க :

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே

எனும் திருமந்திரப் பாடலுடனும்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற
மும்மலம் அகற்றுவான் அடிசேர, உந்திப்பற

எனும் திருவுந்தியார் பாடலுடனும் ஒப்பு நோக்கி மும்மலம் என்பதை சிந்திக்க.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 19 (2018)

பாடல்

செடி கொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த்
     தேரைவாய்ச்சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று
     கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா
     யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
     டஞ்ச னெஞ்சே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மயக்கம் கொண்டு நெஞ்சமே! பாவம், துன்பம், தீ நாற்றமும் உடைய இந்த உடல் சார்ந்த இன்பங்கள், ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை; தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, வண்டு மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போலானது. இவ்வாறான நிலை இல்லாத உலகமும், அது சார்ந்த இன்பங்களையும் நுகர விரும்புகிறாய். தேவர்கள் தலை தாழ்த்தி பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூரில் வீற்றிருக்கும் முன்று கண்களை உடைய அடிகளைத் தொழுதால் உய்யலாம்.

விளக்க உரை

  • உணவின் பொருட்டும், சுவைத்தலின் பொருட்டும் இன்பம் கொண்டாலும் அவை அனைத்தும் பின்னின்று வரும் துன்பத்தை அறியவிடாமல் செய்கின்றன என்ற பொருள் பற்றியது இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 18 (2018)

பாடல்

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

வாசி யோகத்தின் பெருமைகளையும்,  கண்களை மூடி அதன் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, விரித்துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிர் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும், அதனோடு இணைந்து  செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீங்கள் ஈசன் இருப்பிடத்தை எளிதில் அடையலாம்.

விளக்க உரை

  • மூசுதல் – மூடுதல். மூசி – மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள்.
  • அன்பு இல்லறத்தார்க்கே உயிராவதால் அன்பு நீக்கப்பட வேண்டியது. (ஞானியர்களுக்கு அருளே உரித்தாதல் பற்றியது)

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!