அமுதமொழி – விளம்பி – மார்கழி – 16 (2018)

பாடல்

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே

ஒன்பதாம் திருமுறை – பூந்துருத்திநம்பி காடநம்பி

பதவுரை

தேவர்களேசிவபெருமான்அருள் சத்தியாகவும், மங்கலத் தன்மை கொண்டு சிவமாகவும், உலகங்களை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகவும்உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகவும்  விளங்கித் திருவாரூர் திருத் தலத்தில் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் இருந்துஉச்சரிக்கப் படாமல் பிரணவத்துடன் சேர்ந்து இயங்கும் மந்திரம் ஆனதும், மூச்சுக் காற்றால் நிகழ்வதும், துன்பக் கலப்பில்லா இன்ப அநுபவம் ஆனதும் ஆன  அசபை அசபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார். அவரிடத்தில் பத்தியோடு இருந்து அவரை தியானிப்பவர்கள் அவருடைய உருவத் திருமேனி கண்டு அவருடைய அருளைப்பருக! அவ்வாறு அருளைப் பருகும் போது  அமுதம்போல அவர்களிடத்தில் அந்த அருள் இனிமை வழங்கும்.

விளக்க உரை

  • அம்மையாய், அப்பனாய்,  உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய். தம்மால் படைக்கப்பட்ட உலகத்தின் தோற்றத் திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய் என்பன அத்திருவுருவத்தின் பெருமைகளைப் பற்றி கூறும்.
  • தித்தியா – தித்தித்து.

 

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *