பாடல்
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர்
திறம் ஒரு கால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன்
மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி
அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி, தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே தொழிலாகி இறக்கின்றார்.
விளக்க உரை
- இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
- அளி அற்றார் – தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்