பாடல்
ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
பிறவி பற்றி நின்று பெற்ற வினைகளை உடையவனாகிய என் உள்ளத்தின் கண் தேன் போன்றும், பால் போன்றும், கருப்பஞ் சாறு போன்றும், அமுதம் போன்றும் இனித்து, என் ஊன் ஆகிய உடம்பையும், உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய்கின்ற ஒளியுடையவனான ஞான வடிவம் ஆனவனே! யானைகள் தம்முள் மாறுபட்டுச் செய்யும் கொடிய போர் சண்டையில் அகப்பட்ட சிறு புதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ? (விடாமல் காத்து அருள்வாயாக என்றவாறு)
விளக்க உரை
- பித்தம் கொண்டவன் எச்சுவையும் அறிய மாட்டான். அதை மாற்றி இனிமை சுவை உடைய பொருள்களை காட்டி அருளினாய்; ஞான வடிவில் இருந்து என் ஊன் உருக்கினாய்; எலும்புகளை உருக்குமாறு செய்தாய்; அவ்வாறு பேரருள் செய்த நீ என் வினைபற்றி நிற்கும் ஐம்புலன்களில் இருந்தும் காக்க மாட்டாயா எனும் பொருள் பற்றியது.
- ஐம்புலன்களை யானைகளுக்கு உவமையாக கூறியமையால் யானைகள் ஐந்து என்று கொள்க.
- குறுந்தூறு – சிறுபுல்.
- கன்னல் – கரும்பு.
- ஒண்மையன் – ஞான வடிவினன்.