பாடல்
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
வீடு பேறு ஆகிய முக்தியும், அது கைகூடுதல் ஆகிய சித்தியும் பற்றி நின்று, ஞானத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அவனிடத்தில் பக்தி கொண்டு, அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, ஆன்மாக்கள் போல் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படாதாகிய சகலாவத்தை எனும் சகலத்தில் நின்று, பின் அதன் மா பெரும் சக்தி ஆகிய ஆற்றலால் சிவத்துள் நின்று ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் பெற்று, சத்தாவத்தை ஆனதான சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை, ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்ச ஞானம், சோகநிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் கடந்து நின்ற ஞானியர் ஆவர்.
விளக்க உரை
- நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை அடைந்தவர்கள், அந்நிலையினின்று இறங்கினாலும், சிவயோக நிலையினின்றும் இறங்க மாட்டார்கள் என்பது பற்றியது.
- ஓர்த்தல் – ஆராய்தல்
- தத்துவம் – மெய்ப் பொருள்