அமுதமொழி – விளம்பி – மார்கழி – 25 (2019)

பாடல்

திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர்
     திறம் ஒரு கால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன்
     மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி
     அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
     பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி,  தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே  தொழிலாகி இறக்கின்றார்.

விளக்க உரை

  • இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
  • அளி அற்றார் –  தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 24 (2019)

பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
     தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
     திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
     எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

இனிய ஓலியை தரும் வீணையை உடையவர்களும்,  யாழினை வாசிப்பவர்களும் ஒரு பக்கத்தில் இருந்து ஒலி எழுப்பவும், மற்றொரு பக்கத்தில் இருந்து மறையாகிய ரிக் முதலிய வேதங்களோடு, நினது புகழை பாடக்கூடியதான தோத்திர பாடல்களை துதித்தும் நெருக்கமாக தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் கொண்டவர்கள் மற்றொரு புறத்திலும், உன்னை ஆராதனை செய்பவர்கள், பேரன்பின் காரணமாக அழுகை கொண்டவர்கள், உள்ளம் அன்பில் நைந்து உருகுவதாலும், திருவருள் இன்பத்தை ஆராமையால் மிக்கத் துய்ப்பதனால் நிகழும் மெய்ப்பாடு ஆகிய துவள்கை கொண்டும் ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்திலும் இருக்கப் பெற்றவனே! இவர்களோடு சேர்த்து என்னையும் ஆண்டு இன்னருள் புரிய பள்ளி எழுந்தருளாயே.

விளக்க உரை

  • விதிக்கப்பட்டவாறு உன்னைத் தொழுகிறார்கள்; யாம் வணங்கும் மற்றும் தொழும் வகை அற்று இருக்கிறோம்; அவர்களுக்கு அருளுதலை செய்தல் போலவே  எனக்கும் அருளவேண்டும் என்பதை உணர்த்தவே ‘ என்னையும்’ எனும் சொற்றொடர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 23 (2019)

பாடல்

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

தோற்பை போன்றதாகிய இந்த உடம்பினுள் இருந்து பல தொழில்களையும் செய்விப்பவனாகிய கூத்தன், இந்த உடலை விட்டுப் புறப்பட்டுப் போனபின் அந்த உடம்பை நாரினாற் கட்டி இழுத்தால் என்ன,  நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால் என்ன,  கண்ட இடத்தில் போட்டால் என்ன, அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன; அதனால் வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.

விளக்க உரை

  • தோற்பை – இழிவு தோன்றுதலின் பொருட்டு
  • அசைவோன் அவனே; ஆதலால் இந்த உடம்பில் ஒன்றுமில்லை; ஆதலால் இவ்வுடலை பாதுகாத்தல் பொருட்டு அந்த உயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 22 (2019)

பாடல்

இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

இறந்தவரது எலும்புகளையும், எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் எதுவெனில், சிறந்தவர்கள் என்று சொல்லப்படுவதும் மேம்பட்டதும், உயர்வானதும் ஆன மனைவி மற்றும் மக்கள்,சுற்றத்தார்கள், செல்வம் ஆகியவற்றை துறந்தவர்களாகிய ஞானியர்கள் சேரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலம் ஆகும்.

விளக்க உரை

  • புறங்காடு – சுடுகாடு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 21 (2019)

பாடல்

ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
   போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
   தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
   சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
   சொல்லும்நா நமச்சி வாயவே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில்  எழுந்தருளியிருக்கின்ற  நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி  வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய  ‘நமச்சிவாய’ என்பதனை  இடையறாது சொல்லும்.

விளக்க உரை

  • ஒவுதல் – ஒழிதல்
  • புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
  • நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 20 (2019)

பாடல்

விதியின் முறைமை எத்தனைநாள்
      வினையிற் படுவ தெத்தனைநாள்
   விசுவாச் சிக்கக் கொடுமைபல
      விளையும் பகையும் எத்தனைநாள்

அதிக வினையும் எத்தனைநாள்
      அற்ப வாழ்வும் எத்தனைநாள்
   அதிலே குரோதித் திருப்பதெலாம்
      அழியும் வகையும் எந்நாளோ

பொதிகை மலையன் அரிஅயனும்
      புகழ்சேர் காமன் திசைப்பாலன்
   போற்றும் உன்றன் இருசரணம்
      பொருந்தி மகிழ்வ நெந்நாளோ

மதியைத் தரித்த முகில்வேணி
     மயிலே குயிலே வான்மணியே
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! மேகம் போன்ற கூந்தலில் சந்திரனைத் தரித்தவளே! அழகிய மயில் போன்றவளே! இனிய குயில் போன்றவளே! அதிக வினைகொண்டு வாழ்தல் இன்னும் எத்தனை நாள்? காலத்தால் மிகக் குறிகியதாக கருதப்படும் அற்ப வாழ்வு இன்னும் எத்தனை நாள்? நீண்ட காலமாக பகை கொண்டு அதன் காரணமாக அழியும் வகையில் வாழ்ந்திருத்தல் இன்னும் எத்தனை நாள்?  விதிக்கப்பட்ட விதியின்படி இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? பிறப்பிற்கு காரணமான இரு வினையில் பட்டு அதனை அனுபவித்து, வினைகளை அழித்து விடுபட இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? மாறாத பற்று, அன்பு, நம்பிக்கை மற்றும் உண்மை கொண்டு பின் அது விலக அதனால் விளையும் பகைமை கொண்டு கொடுமை செய்து கொண்டு இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ?  பொதிகை மலையில் உறைபவனாகிய அகத்தியர், திருமால், அயன், காமன், அஷ்டதிக் பாலகர்கள் ஆகிய திசைப் பாலர்கள் போன்றவர்கள் போற்றும் உனது இரு சரணக் கமலங்களில்  ஒன்றாக இருந்து மகிழ்ந்து இருப்பது எந்த நாளோ?

விளக்க உரை

  • படுதல் – உண்டாதல்,தோன்றுதல், உதித்தல், நிகழ்தல், மனத்தில் தோற்றுதல், பூத்தல், ஒன்றன்மீது ஒன்று உறுதல், மொய்த்தல், அகப்படுதல், புகுதல், பெய்தல், பெரிதாதல், மேன்மையடைதல், அழிதல், சாதல், மறைதல்
  • புகழ்சேர் காமன்  – எவரும் எதிர்க்கத் துணியாத போது, தான் அழிந்தாலும் உலக நன்மையின் பொருட்டு சர்வேஷ்வரனை எதிர்ததால் ‘புகழ்சேர்’ காமன்

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 19 (2019)

பாடல்

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!

கொங்கணர்

பதவுரை

வாலைப்பெண்ணே! உச்சி ஆகிய துரியத்திற்கு நேராக உகாரம் ஆனதும், மனோன்மணித் தாயார்  வாசம் செய்யும் அண்ணாக்குக்கு மேலே இருப்பதுமான உண்ணாக்கு மேலே சதாசிவமும்,   சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமானதும், சப்தம் பிறந்த இடமானதுமான இடத்தில் தினமும் வைத்த விளக்கானது சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும். அந்த வலிமை வாய்ந்த விளக்கானது அணைந்து விடாமல் எப்பொழுதும் சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும்.

விளக்க உரை

  • இவரின் பெரும்பாலான பாடல்கள் சாக்தம் சார்ந்த வாலைப் பெண்ணை முன்வைத்து எழுதப்பட்டவை என்பதால் பாடல்களில் வாலைப்பெண்ணே என்பது இடம்பெறும்.
  • அச்சு – அடையாளம்; உயிரெழுத்து; வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு; வலிமை; அச்சம்; துன்பம்; நெசவாளர் நூல்களை அழுத்தப் பயன்படுத்தும் கருவி.

 

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 18 (2019)

பாடல்

அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித்
தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்கு அளிப்பன் கண்கட்கு
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்

சிவஞான சித்தியார்

பதவுரை

மல மாயைகளுக்கு உட்பட்ட உயிர்கள் அதை விலக்க முதன்மையாக இருப்பது அருள் எனப்படும் இறைவனின் சத்தியாகும். இவ்வாறாக பெறப்படும் சக்தி சிவம் என்பததில் இருந்து தனியே அறியப்படுவது இல்லை, அந்த சக்தி விடுத்து சிவம் என்பதும் தனித்து இல்லை. அத்தகைய சிவமானது, கண்ணில் தோன்றும் இருளை சூரியன் தன் ஒளியால் ஓட்டுதல் போல, உயிர்களின் அறிவை மறைத்து, மயக்கம் தரும் மல மாயையை தனது அருளாலே நீக்கி மண்ணில் தன் அருளை அளித்து, முத்தியைக் கொடுப்பான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 17 (2019)

 

பாடல்

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

வீடு பேறு ஆகிய முக்தியும், அது கைகூடுதல் ஆகிய சித்தியும் பற்றி நின்று, ஞானத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அவனிடத்தில் பக்தி கொண்டு, அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, ஆன்மாக்கள் போல் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படாதாகிய சகலாவத்தை எனும் சகலத்தில் நின்று, பின் அதன் மா பெரும் சக்தி ஆகிய ஆற்றலால் சிவத்துள் நின்று ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் பெற்று, சத்தாவத்தை ஆனதான  சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை, ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்ச ஞானம், சோகநிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் கடந்து நின்ற ஞானியர் ஆவர்.

விளக்க உரை

  • நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை அடைந்தவர்கள், அந்நிலையினின்று இறங்கினாலும், சிவயோக நிலையினின்றும் இறங்க மாட்டார்கள் என்பது பற்றியது.
  • ஓர்த்தல் – ஆராய்தல்
  • தத்துவம் – மெய்ப் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 16 (2018)

பாடல்

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே

ஒன்பதாம் திருமுறை – பூந்துருத்திநம்பி காடநம்பி

பதவுரை

தேவர்களேசிவபெருமான்அருள் சத்தியாகவும், மங்கலத் தன்மை கொண்டு சிவமாகவும், உலகங்களை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகவும்உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகவும்  விளங்கித் திருவாரூர் திருத் தலத்தில் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் இருந்துஉச்சரிக்கப் படாமல் பிரணவத்துடன் சேர்ந்து இயங்கும் மந்திரம் ஆனதும், மூச்சுக் காற்றால் நிகழ்வதும், துன்பக் கலப்பில்லா இன்ப அநுபவம் ஆனதும் ஆன  அசபை அசபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார். அவரிடத்தில் பத்தியோடு இருந்து அவரை தியானிப்பவர்கள் அவருடைய உருவத் திருமேனி கண்டு அவருடைய அருளைப்பருக! அவ்வாறு அருளைப் பருகும் போது  அமுதம்போல அவர்களிடத்தில் அந்த அருள் இனிமை வழங்கும்.

விளக்க உரை

  • அம்மையாய், அப்பனாய்,  உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய். தம்மால் படைக்கப்பட்ட உலகத்தின் தோற்றத் திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய் என்பன அத்திருவுருவத்தின் பெருமைகளைப் பற்றி கூறும்.
  • தித்தியா – தித்தித்து.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 15 (2018)

 

பாடல்

ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

பிறவி பற்றி நின்று பெற்ற  வினைகளை உடையவனாகிய என் உள்ளத்தின் கண் தேன் போன்றும், பால் போன்றும், கருப்பஞ் சாறு போன்றும், அமுதம் போன்றும் இனித்து, என் ஊன் ஆகிய உடம்பையும், உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய்கின்ற ஒளியுடையவனான ஞான வடிவம் ஆனவனே! யானைகள் தம்முள் மாறுபட்டுச் செய்யும் கொடிய போர் சண்டையில் அகப்பட்ட சிறு புதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ? (விடாமல் காத்து அருள்வாயாக என்றவாறு)

விளக்க உரை

  • பித்தம் கொண்டவன் எச்சுவையும் அறிய மாட்டான். அதை மாற்றி இனிமை சுவை உடைய பொருள்களை காட்டி அருளினாய்; ஞான வடிவில் இருந்து என் ஊன் உருக்கினாய்; எலும்புகளை உருக்குமாறு செய்தாய்; அவ்வாறு பேரருள் செய்த நீ என் வினைபற்றி நிற்கும் ஐம்புலன்களில் இருந்தும் காக்க மாட்டாயா எனும் பொருள் பற்றியது.
  • ஐம்புலன்களை யானைகளுக்கு உவமையாக கூறியமையால் யானைகள் ஐந்து என்று கொள்க.
  • குறுந்தூறு – சிறுபுல்.
  • கன்னல் – கரும்பு.
  • ஒண்மையன் – ஞான வடிவினன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 14 (2018)

பாடல்

நீலக்கயல்விழி மானார் கலவியின் நேசம் வைத்தே
ஆலைக்கரும்பது போலாய் விடாதுன்னருள்புரிவாய்
வாலைக் கலைமதி வேணியனே வடுகா அடியார்
சாலத் தொழும் ஐயனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

சுத்தமான அழகிய கலைகளை உடைய சந்திரனை தலையில் அணிந்தவனே! வடுகனே! அடியார்களால் மிகவும் தொழப்படுபவனே! காழித் தலத்தில் உறையும் ஆபதுத்தாரணனே! நீலமான மீன் போன்ற விழிகளை உடைய பெண்டிர் மேல் நேசம் வைத்து ஆலையில் அகப்பட்ட கரும்பு போல் ஆகிவிடாமல் நன்னருள் புரிவாய்.

விளக்க உரை

  • மாயை அகற்றவேண்டி துதித்தல்.
  • மானார் – பெண்டிர்
  • வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்; சத்திபேதங்களுளொன்று; திராவகம் வடிக்கும் பாண்டம்; சுத்தம்; பாதரசம்; சித்திராநதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 13 (2018)

 

பாடல்

 

பாகு சேருங் மொழியணங்கே
      பணத்தை அணியுஞ் சதுர்த்தோளி
   பாதி மதியுங் கதிரணியும்
      பரம் ஞான வெளிச்சுடரே

ஆகும் பருவம் அறிந்தென்றன்
      ஆவி நாளும் உபயபதம்
   அடுத்துக் கவிதைச் சரந்தொடுத்தே
      அமைந்து பொழிய வரம்தருவாய்

ஏகு மயக்கத் துட்டருடன்
      இனிதா எனைச்சேத் தகற்றாதே
   இமவான் அளித்த திருமகளே
      எங்கும் நிறைந்த பெருவெளியே

வாகு பொருந்துங் கிருஷ்ணனது
      வரிசைத் துணைவி சுகவதனி
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! இனிமை தரும் வெல்லப்பாகு போன்ற மொழியை உடையவளே! நான்கு தோள்களிலும் செல்வத்தால் பெறப்பட்டதும், அலங்கரிக்கப்பட்டதும் ஆன ஆபரணங்களை அணிந்தவளே! அரை வட்டமான சந்திரனையும், அதன் கதிர்களாகிய கிரணங்களையும் அணியும் சிறந்ததும், தெய்வீகமானதும் ஆன ஞானமாகிய சுடரே! இமவான் அளித்த இலட்சுமியே! எங்கும் நிறை பூரணத்துடன் இருக்கும் பெருவெளி ஆனவளே! அழகில் கிருஷ்ணருக்கு ஒப்பானவளே! இன்பம் தரும் திருமுகம் உடையவளே! ‘போ, செல், நடஎன மயக்கம் கொண்டு எனக்கு கட்டளை இடும் தீயவர்களுடன் என்னைச் சேர்த்து உன்னிடம் இருந்து என்னை அகற்றாதே; எனக்கான பக்குவ நிலையை அறிந்து, உன்னால் வழங்கப்பட்ட இரு தாளினைப்பற்றி, எனது உயிரானது இடைவிடாமலும், சரமாக தொடுப்பது போலும் கவிதையாக பொழியும் வரத்தினை அருள்வாயாக.

விளக்க உரை

  • அணங்கு – அழகு; வடிவு; தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர்; வருத்திக் கொல்லும் தெய்வமகள்; தீண்டி வருத்தும் தெய்வப்பெண்; வருத்தம்; நோய்; மையல்நோய்; அச்சம்; வெறியாட்டு; பத்திரகாளி; தேவர்க்காடும் கூத்து; விருப்பம்; மயக்க நோய்; கொலை; கொல்லிப்பாவை; பெண்
  • பாகு – பகுதி; பிச்சை; கரை; சத்தி
  • பரம – பொருள்; மேலான; சிறந்த; மிகுந்த; மிகவும்; மிக; நிரம்ப; தெய்வீகமான

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 12 (2018)

பாடல்

ஆமப்பா குருவுக்குத் திருநேத்திரங்கள்
அப்பனே காளகண்ட மான்மழுவினோடு
தாமப்பா புலித்தோலா லாடைசாத்தி
தந்தியுட தோல்போற்றிக் கண்டந்தன்னில்
வாமப்பா அரவமணிந்து விபூதி சாத்தி
மாதுசிவ காமியொரு பாகராய்
ஓமப்பா ரிஷபவா கனத்திலேறி
இச்சைபெறச் சொரூபசித்தி கொடுத்தாள்வாரே

அகத்தியர் பூஜா விதி – 200 – அகத்தியர்

பதவுரை

ஈசன் குருவாய் வரும் பொழுது, மூன்று கண்கள், கருமை நிறம் உடைய கண்டம் கொண்ட மான் மற்றும் மழுவினை கைகளில் ஏந்தி, புலித் தோல் ஆடை உடுத்தி, மெல்லியதான அரவமாகிய பாம்பினை கண்டத்தில் அணிந்து, விபூதி தரித்து சிவகாமி உடன் உமை ஒரு பாகனாய் ரிஷப வாகனத்தில் ஏறி விரும்பியதை அருள சொரூப காட்சி கொடுத்து அருள்வார்.

விளக்க உரை

  • ஈசன் குருவாய் வரும் திறம் சொல்லியது

Loading

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – 3. சக்தி கணபதி

புகைப்படம் : திருவாடுதுறை ஆதினம்

 

சக்தி கணபதி

வடிவம் பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலம். தேவியும் அவ்வாறே பரஸ்பரம் தழுவிக் கொண்டிருப்பார்.
மேனி வண்ணம் மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவர்
திருக்கைகள் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கி அஞ்சேல் எனும் அபயகரமும் உடையவர்
பலன் வழிபடும் பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவர்

 

மந்திரம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய:|
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே: ||

விளக்கம்

மாலை நேர செவ்வந்தி வானம் போன்ற நிறம் உடையவராகவும், பச்சை நிறமான தேவியை தழுவிக் கொண்டவராகவும், அவ்வாறே தேவியாலும் பரஸ்பரம் தழவிக் கொள்ளப்பட்டவராகவும், பாசம், பூமாலை இவற்றை தாங்கிய திருக்கரத்துடன் அபய முத்திரை கொண்டிருப்பவருமான கணபதியை வணங்குகிறேன்.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 26

 

உமை

பிரம்மச்சாரி விரதத்தை காப்பது எவ்வாறு?

சிவன்

பிரம்மச்சாரி விரதமே பெரும் தவம் என்பதால் பரமபதம் கிடைக்கும். விஷயங்களை நினைத்தல், பார்த்தல், பேசுதல், தொடுதல் மற்றும் அனுபவித்தல் ஆகிய இவற்றினால் பிரம்மச்சாரிய விரதம் கெடாமல் காக்க வேண்டும். இது பிரம்மச்சாரிகளுக்கு எப்பொழுதும், கிரகஸ்தர்களுக்கு காலத்தை நிர்ணயித்தும் விதிக்கப்படுகிறது. கிரகஸ்தன் தனது ஜன்ம நட்சத்திரத்திலும், புண்ணிய காலங்களிலும், தேவ பூஜை செய்யும் காலங்களிலும், தர்ம காரிய காலங்களிலும் இவ் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தன் மனைவி விடுத்து வேறு மாதரிடம் செல்லாமல் இருப்பவன் பிரம்மச்சாரி விரதத்தின் பலனை அடைவான். இவ்விரதத்தால் பரிசுத்தமும், ஆயுளும் வாய்க்கப் பெறும்.

 

உமை

தர்மத்தை விரும்புவர்கள் தீர்த்த யாத்திரையை விரதமாகச் சொல்கிறார்கள். உலகில் உள்ள தீர்த்தங்களைப் பற்றி எனக்கு சொல்லக் கடவீர்.

சிவன்

உலகில் உள்ள மகா நதிகள் அனைத்தும் தீர்த்தங்கள் ஆகும். தீர்த்த யாத்திரையை என்பது ஆத்ம சுத்திக்காவும், தேக சுத்திக்காவும் பிரம்மாவால் ஏற்படுத்தப்பட்டது. அவற்றுள் கிழ் திசை நோக்கி செல்லும் தீர்த்தங்கள் சிறந்தவைகள். நதிகள் சங்கமம் ஆகும் இடமும், கடலோடு கலக்கும் இடமும் மிகச் சிறந்தவைகள். கடலோடு கலக்கும் இடங்களில் உள்ள மரங்கள் தேவர்களாலும், ரிஷிகளாலும், மகான்களாலும் அடையப் பெற்று நீராடி இருப்பதால் அவைகளும் சிறந்த தீர்த்தமாகின்றன. மகரிஷிகளால் அடைப் பெற்றதால் அருவிகளும், கிணறு மற்றும் குளங்களும் தீர்த்தங்கள் என்று அறிவாயாக. இனி இதில் ஸ்தானம் செய்யும் முறையை உரைக்கிறேன். பிறந்தது முதல் அதிக நியமங்களுடன் வாழ்ந்து, தீர்தங்களுக்குச் சென்று மூன்று வேளை அல்லது ஒரு வேளை உபவாசம் இருக்க வேண்டும். புண்ணிய மாதத்திலும், விரத காலத்திலும், பௌர்ணமியிலும் வெளியில் ஸ்தானம் செய்து சுத்தனாகிப் பின்  பக்தியோடு விதிப்படி தீர்த்தத்தில் மூன்று முறை  ஸ்தானம் செய்ய வேண்டும். கரையில் இருக்கும் ப்ராமணர்களுக்கு தட்சணை கொடுத்து, திருக்கோயிலுக்குச் சென்று பூஜை செய்து பின் திரும்பிச் செல்லவேண்டும். இது அனைவருக்கும் விதிக்கப்பட்டது. அருகில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவதைக் காட்டிலும் தொலைவில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவது நல்லது. தீர்த்த ஸ்தானமானது தவத்திற்கும், பாவம் போக்குவதற்கும் மன சுத்தத்திற்கும் உரியது என்பதால் ஜன்ம சுத்தனாய் இருப்பவன் புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதன் பலன்களை மனிதன் மறுமையில் அடைவான்.

உமை

உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 11 (2018)

பாடல்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! கர்வம் கொண்டு தலை கிள்ளப்பட்ட நான்முகன் மண்டை ஓட்டினைக் கொண்டு பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! அபிடேகத்தீர்த்தத்தையும், பூவையும்,புகையும் (பிறவும்) உனக்கு சமர்ப்பிப்பது நின்னை வழிபடுவதை மறந்தறியேன்; தமிழ் மொழியில் அமைந்த நின்புகழ் பாடும் இசைப் பாடல்களை பாடுதலை மறந்தறியேன்; வினை பற்றி இன்புறும் பொழுதிலும், துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன்; உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவாதவனாய் இருக்கிறேன்; (அடியேன்) உடலின் உள்ளே இருப்பதும், மிக்க வருத்துவதும் ஆன சூலை நோயினால் வருந்துகின்றேன்; அந்த வருத்தம் தரும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய்.

விளக்க உரை

  • சலம், பூ, தூபம், தமிழோடிசை – அர்ச்சனை மற்றும் தோத்திரத்திரம் செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 10 (2018)

பாடல்

மூலம்

கனவு கனவென்று காண்பரிதாங் காணில்
நனவி லவைசிறிதும் நண்ணா – முனைவனரு
டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

பதப் பிரிப்பு

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9  – உமாபதி சிவம்

பதவுரை

மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே! உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் என விரியும். அவ்வாறு உயிரானது கண்டத்தில் இருந்தில் செயல்படும் நிலை ஆகிய கனவினை காணும் போது கனவில் நின்று  ‘இது கனவு’ என்று அறிய இயலாது. அகம் விழிப்புற்ற நிலையாகிய நனவில் அந்த கனவில் கண்ட காட்சிகள் காண இயலாது. முனைவன் அருள் பெறும் போது  காரிய அவத்தைகள் நீங்கப் பெற்று, காரண அவத்தையின்  கேவல அவத்தை, சகல அவத்தை ஆகியவைகளும் நீங்கப் பெற்று,  பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை ஆகிய சுத்த அவத்தையை காணுமாறு செய்வாயாக.

விளக்க உரை

  • ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ எனும் சிவப்பிரகாசரின் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • உயிரானது ‘அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருள்’ எனபதும்,  உயிர் தனித்து இயங்கினாலும், இறைவன் தனிக் கருணையினால் அன்றி அவத்தைகள் விலகி அது நிலை பேறு கிட்டாது என்பதும் விளங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 9 (2018)

பாடல்

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வளமான சோலைகளையுடைய திருப்புங்கூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே,  மிருகண்ட மகரிஷிக்கும்,  அவருடைய மனைவி ஆகிய  மருதவதிக்கும் மகனாக பிறந்த அந்தணர் குலத்தை சேர்ந்த மார்கண்டேய முனிவர் தன் முடிவு அறிந்து உன்னை அடைக் கலமாக அடைய, அவரைக் காத்தல் பொருட்டு,  அவர் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்தவனே, உனக்கு அடியேனாகிய யான், உனது அந்த ஆற்றலை அறிந்து கொண்டு என்னையும் எம தூதர்கள் வந்து துன்புறுத்துவார்கள் எனில், என்தந்தையாகிய நீ,  ‘இவன் என் மற்றொரு அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்’ என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்.

விளக்க உரை

  • மார்க்கண்டேய முனிவருக்கு அருள் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து பாடியது.
  • வவ்வினாய் – வன்மை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 8 (2018)

பாடல்

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

செல்வத்தையே தேடுவதன் பொருட்டு, மனம் செருக்குற்று, நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணம் அற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியை உறைவிடமாக கொண்டவன் திருவடியினை சேர்வீராக.

விளக்க உரை

  • மாடு – செல்வம்
  • நும்முளே – உங்களுக்குள்
  • கூடு – உடல்
  • செல்வம் தேடுதலில் மகிழ்ந்து எனவும், பொய் பேசுவதால் உள்ளுக்குள் மகிழ்வு கொண்டு எனவும் கொள்ளலாம்.

 

Loading

சமூக ஊடகங்கள்