பாடல்
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! கர்வம் கொண்டு தலை கிள்ளப்பட்ட நான்முகன் மண்டை ஓட்டினைக் கொண்டு பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! அபிடேகத்தீர்த்தத்தையும், பூவையும்,புகையும் (பிறவும்) உனக்கு சமர்ப்பிப்பது நின்னை வழிபடுவதை மறந்தறியேன்; தமிழ் மொழியில் அமைந்த நின்புகழ் பாடும் இசைப் பாடல்களை பாடுதலை மறந்தறியேன்; வினை பற்றி இன்புறும் பொழுதிலும், துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன்; உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவாதவனாய் இருக்கிறேன்; (அடியேன்) உடலின் உள்ளே இருப்பதும், மிக்க வருத்துவதும் ஆன சூலை நோயினால் வருந்துகின்றேன்; அந்த வருத்தம் தரும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய்.
விளக்க உரை
- சலம், பூ, தூபம், தமிழோடிசை – அர்ச்சனை மற்றும் தோத்திரத்திரம் செய்தல்