பாடல்
வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
வாசி யோகத்தின் பெருமைகளையும், கண்களை மூடி அதன் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, விரித்துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிர் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும், அதனோடு இணைந்து செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீங்கள் ஈசன் இருப்பிடத்தை எளிதில் அடையலாம்.
விளக்க உரை
- மூசுதல் – மூடுதல். மூசி – மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள்.
- அன்பு இல்லறத்தார்க்கே உயிராவதால் அன்பு நீக்கப்பட வேண்டியது. (ஞானியர்களுக்கு அருளே உரித்தாதல் பற்றியது)