பாடல்
மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக் காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மெய்ப் பொருளாய் இருப்பவனும், திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும், படம் எடுத்து ஆடும் பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!
விளக்க உரை
- ‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு காலன் காலம் அறுத்தான்.
- ‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது உணரப் பெறும்.