பாடல்
எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே
திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்
பதவுரை
இந்தப் பிறப்பிலேயே பெறுதற்கு உரிய சாகாவரம் எனும் இறவா நிலையாகிய மெய்ப் பயனை எனக்கு அளித்து, என்னை ஆண்டு கொண்டு அருளிய பெருமானாகிய உன்னைத் தளர்ச்சி உற்ற பொழுதில் கிடைத்த செல்வம் என்பேனோ; என்னுயிர்க்கு உரித்தான இன்பம் என்பேனோ; விரும்பியப் பொருளை நுகரும் பொழுது மனத்தில் தோன்றி நிறைகின்ற மிக்க பெரும் மகிழ்ச்சி என்பேனோ; ஒளிப் பொருளுக்கெல்லாம் முதன்மை ஒளியாய் நிற்கும் சிவபர ஒளி என்பேனோ; வினை பற்றி நின்று யாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் பொறுத்து அருளும் அருள் நிதி என்று சொல்வேனோ; தனிப் பெரும் தலைவன் என்பேனோ; யாது சொல்லி மகிழ்வேன்?
விளக்க உரை
- எய்ப்பு – தளர்ச்சி.
- வைப்பு – செல்வம்
- ‘மெய்ப்பயன்’ – இந்த பிறப்பில் பெறுவன ஆகிய யாவும் நிலையின்றிக் கெடுவதால் இறவாமையாகிய நிலைத்த பயன் மெய்ப்பயன் எனும் பொருள் பெற்றது.