யாசிக்கும் எண்ணம்

புகைப்படம் : திரு.ஐயப்ப மாதவன் - திரைப்பட இயக்குனர்

கொடுத்து சிவந்தவனுக்கு
யாசிக்கும் எண்ணம் தோன்றியது
தன் விருப்பம் அறிவித்தான்
தேவர்களும், ரிஷிகளும்
சித்தர்களும்
தெய்வங்களும் தயக்கம் காட்டினர்.
‘மாற்ற இயலா மாயை புகுதல் என்ன நியாயம்’ என்றனர் தேவர்கள்
‘இருமை இல்லாதவன் யான்’ என்றான்
‘தங்களே இப்படி நாடகம் நடத்தவேண்டுமா’
என்றனர் ரிஷிகள்.
‘யானும் கூத்தன் தானே’ என்று
விடை பகர்ந்து புன்னகை பூத்தான் மாயன்
தங்களை எப்படிப் பிரிவோம்’ என்றனர் சித்தர்கள்
‘வடக்கு நோக்கி வந்து வாழ்த்துவோம் யாம்’
என்றான் விமலன்
கணப் பொழுதினில்
எல்லோராலும் விலக்கத் தக்கவனாகி
விரும்பி யாசகம் துவங்கினான்.
‘என்னம்மா ஆயிற்று அவருக்கு’ என்று கேள்வியுடம்
மறைந்தனர் தாயும் ஒரு குழந்தையும்;
‘யேய், பிச்சைக்காரா, வழிவிடு’
வார்த்தையில் கனல் எழுப்பி புறம்
புகுந்தான் ஒருவன்;
‘கவலை அற்று இரு, கையில் பொருள் விழும்’
என்றான் முடவனொருவன்;
‘நல்லா தான இருக்க,
உழைக்க என்ன கேடு’என்று
உரை பகன்று பிரம்பு வீசினான் ஒருவன்
பின்னொரு பொழுதுகளில்
பிரபஞ்ச உயிர்களில் உறை காலங்களில்
வடு மாறாமல் இருந்தது.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *