புகைப்படம் : இணையம்
உமை
தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?
சிவன்
நன்றி உள்ளவர்களுக்கு சிறந்த தர்மம் என்பதாலும் குரு முன்பு உபகாரம் செய்தவர் என்பதாலும் குருவை பூசிக்க வேண்டும். கற்றுத்தரும் குரு, தந்தை மற்றும் தாய் ஆகியோர் குருவிலும் குருவாக கொள்ளவேண்டும். தந்தையின் மூத்த சகோதரரும், இளைய சகோதரரும், தந்தையின் தந்தையும் தந்தைக்கு சமமானவர்களாகி பூஜிக்க தகுந்தவர்கள்; அது போலவே தாயாரின் மூத்த சகோதரியும், இளைய சகோதரியும், தாயின் தாயும் தாயாக நினைக்கப்பட வேண்டியவர்கள்; கற்றுத் தரும் குருவின் புத்திரனும், குருவின் குருவும் குருவாகிறார்கள்;
மூத்த சகோதரன், அரசன், தாய்மாமன், மனைவியின் தந்தை, பயத்தில் காப்பாற்றியவன் மற்றும் உணவு இட்டுக் காத்தவன் ஆகியோர் குருவாக சொல்லப்படுகின்றனர்.
தந்தையை திருப்தி செய்பவரை பிரம்ம தேவரும், தாயை திருப்தி செய்பவரை தேவ மாதாக்களும் திருப்தி செய்கின்றனர். எவன் குருவை பூசனை செய்கிறானோ அவன் பிரம்ம தேவரை பூசனை செய்தவனாகவே ஆகிறான். அவர்கள் அதிருப்தியாக இருந்தால் மனிதன் நரகம் அடைவான்.
குருவிடத்தில் நீண்ட பகையையும், விரோதத்தையும் மனதாலும் நினைக்கக் கூடாது; அவர்களுக்கு பிடிக்காத சொல்லைச் சொல்லுதல், பிடிக்காதவற்றை செய்தல், அவர்கள் இருக்கு போது விதண்டாவாதம் செய்தல், குருவுடன் விவாதம் செய்தல், கலகம், பரிகாசம், கேளிக்கைப் பேச்சுகள், குருவிடத்தில் பொறாமை, குருவை தூஷித்தல் இவற்றை செய்யக் கூடாது;
குருவின் கட்டளையைச் செய்பவனை விட சிறந்த புண்ணியசாலி எதுவுல் இல்லை. குரு பூஜை செய்தல் என்பது யாகம் செய்வதும், பெரும் தவம் செய்வது ஆகியவற்றை விட மேலானது. குருவை வழிபடாவிட்டால் எந்த வித ஆஸ்ரம தர்மமும் இல்லை.
மனம் வாக்கு காயங்களால் குரு, தந்தை, தாய் இவர்களுக்கு தீங்கு செய்யும் பாபம் என்பது சிசுக் கொலையை விட கொடுமையானது. அவர்களை விட பாபம் செய்தவன் உலகினில் இல்லை.
உமை
உபவாசத்தின் முறைகளைப் பற்றி எனக்கு உரைக்கவேண்டும்.
சிவன்
தேகத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கவும், இந்திரியங்களை காயவிடவும், ஒருவேளை புசிப்பதையும் உபவாசம் எனப் பகர்கின்றனர். இவ்வாறு ஆகாரத்தை குறைப்பதால் பெரிய புண்ணியத்தை அடைகின்றனர். உபவாசத்தின் போது தேகத்திற்கு தீங்கு வருமாயின் அதை நீக்குதலின் பொருட்டு பாலையோ அல்லது பழங்களையோ உண்ணலாம்.
உமை
பிரம்மச்சாரி விரதத்தை காப்பது எவ்வாறு?
தொடரும்..