பாடல்
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை மையத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே!
இடைக்காடர்
பதவுரை
பிறவிகள் தோறும் தொடர்வதும், தீமை செய்யத் தூண்டுவதும், இறையை காணச் செய்யாமல் செய்வதும், நரகத்தில் கொண்டு சேர்ப்பதும், மும்மலம் னப்படுவதுமான ஆணவம், கன்மம், மாயை இவைகளை நீக்கி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று பொறிகளாகிய முப்பொறிக்கு எட்டாததும் காரணப்பாழ், காரியப்பாழ், அறிவுப்பாழ் என்றும் மாயப்பாழ், சீவப்பாழ், அருள் வெளிப்பாழ் என்றும் கூறப்படும் முப்பாழும் கடந்து, உருவம் அற்ற இடத்தில் இருக்கும் முப்பாழும் கடந்ததை புறச் செயல்கள் செய்யும் காலத்திலும் அக சிந்தையில் வைப்பீர் கோனாரே!
விளக்க உரை
- செம்மறி யோட்டிய வேலை – புறச் செயல் செய்கையில் அக வழிபாட்டு முறை பற்றியது இப்பாடல்
- கோனாரே – குலத்தினை குறிப்பிடாமல் பசுக் கூட்டத்தை மேய்ப்பவன் எனும் பொருள் பற்றியது.
- ஒப்பு நோக்க :
அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே
எனும் திருமந்திரப் பாடலுடனும்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற
மும்மலம் அகற்றுவான் அடிசேர, உந்திப்பற
எனும் திருவுந்தியார் பாடலுடனும் ஒப்பு நோக்கி மும்மலம் என்பதை சிந்திக்க.
சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.