பாடல்
செடி கொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த்
தேரைவாய்ச்சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று
கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா
யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
டஞ்ச னெஞ்சே
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
மயக்கம் கொண்டு நெஞ்சமே! பாவம், துன்பம், தீ நாற்றமும் உடைய இந்த உடல் சார்ந்த இன்பங்கள், ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை; தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, வண்டு மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போலானது. இவ்வாறான நிலை இல்லாத உலகமும், அது சார்ந்த இன்பங்களையும் நுகர விரும்புகிறாய். தேவர்கள் தலை தாழ்த்தி பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூரில் வீற்றிருக்கும் முன்று கண்களை உடைய அடிகளைத் தொழுதால் உய்யலாம்.
விளக்க உரை
- உணவின் பொருட்டும், சுவைத்தலின் பொருட்டும் இன்பம் கொண்டாலும் அவை அனைத்தும் பின்னின்று வரும் துன்பத்தை அறியவிடாமல் செய்கின்றன என்ற பொருள் பற்றியது இப்பாடல்.