பாடல்
தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
திருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான், அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி பிச்சை ஏற்றவர் ஆவார்.
விளக்க உரை
- துளங்குதல் – அசைதல், நிலைகலங்குதல், தளர்தல், வருந்துதல், ஒலித்தல், ஒளிசெய்தல்,
- இண்டை – தாமரை, மாலை வகை, , முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி;
- துளங்கா மணி முடியார் – அஞ்சுவ தொன்றில்லாத முதல்வர்
- ஈமம் – பிணத்தைச் சுடுங்காடு
- ‘அண்டத்துக்கு அப்புறத்தார்’ – மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கும் நிலை.
- ஆதியானார் – எல்லா பொருள்களுக்கும் தாமே முதலாயும், தமக்கொரு முதல்வன் இல்லாதவராயும் உள்ளவர்.