மீளாத நாண்

புகைப்படம் & மாடல் : திரு.அய்யப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

மீண்டும் அதே பிறப்பு
மீண்டும் இளமைத் துள்ளல்
மீண்டும் அதே கல்வி
மீண்டும் அதே கர்வம்
மீண்டும் அதே மயக்கம்
மீண்டும் அதே முயக்கம்
மீண்டும் அதே சிநேகம்
மீண்டும் அதே வான் பார்த்தல்
மீண்டும் அதே மது வாசனை
மீண்டும் அதே தனிமை
மீண்டும் அதே பேரொலி
மீண்டும் அதே ஓங்காரம்
மீண்டும் அதே ஒடுக்கம்
மீளாத நாண்

சமூக ஊடகங்கள்

பின்னம்


புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்

நிராகரிக்கப்படவனை
நீங்கள் அத்தனை எளிதில் காண இயலாது

ஒருவேளை வானம் பார்த்து
பீடியை புகைப்பவனாக இருக்கலாம்;
மனைவி, இரு குழந்தைகளோடு நீண்ட நேரம்
இறையை வணங்க வரிசையில் காத்திருப்பவனாக இருக்கலாம்;

எவர் எவரோ வீசிச் சென்ற உணவு பொட்டலங்களை எடுத்து
சரிநிகர் சமானமாக நாயோடு உண்ணுபவனாக இருக்கலாம்;
அங்காடியில் விலைகளைப் பார்த்து பொருள்களை
அதனதன் இடத்தில் வைப்பவனாக இருக்கலாம்;

கருமை நிற மேனி கொண்டு,அழுகிய உடலோடு
காலம் கடத்துபவனாக இருக்கலாம்;
மனைவியின் கண்களைப் பார்த்து பேசியபடி
கடற்கரையில் பட்டாணி உண்பவனாக இருக்கலாம்;

மதுபானக் கடைகளில் தனித்து இசையைத் தவிர்த்து
மதுகோப்பைகளை நீண்ட நேரம் உற்றுப் பார்பவனாக இருக்கலாம்;
இருளினை உள்வாங்கி பேரொலியையும் பேரொளியையும்
சிந்திப்பவனாக இருக்கலாம்;

நிராகரிக்கப்படவனை நீங்கள் காண இயலும் கணத்தில்
அவனிடம் இருந்து நீங்கள் பெறுவதற்கு
பேரன்பு அன்றி வேறொன்றுமிராது.

சமூக ஊடகங்கள்

யாசிக்கும் எண்ணம்

புகைப்படம் : திரு.ஐயப்ப மாதவன் - திரைப்பட இயக்குனர்

கொடுத்து சிவந்தவனுக்கு
யாசிக்கும் எண்ணம் தோன்றியது
தன் விருப்பம் அறிவித்தான்
தேவர்களும், ரிஷிகளும்
சித்தர்களும்
தெய்வங்களும் தயக்கம் காட்டினர்.
‘மாற்ற இயலா மாயை புகுதல் என்ன நியாயம்’ என்றனர் தேவர்கள்
‘இருமை இல்லாதவன் யான்’ என்றான்
‘தங்களே இப்படி நாடகம் நடத்தவேண்டுமா’
என்றனர் ரிஷிகள்.
‘யானும் கூத்தன் தானே’ என்று
விடை பகர்ந்து புன்னகை பூத்தான் மாயன்
தங்களை எப்படிப் பிரிவோம்’ என்றனர் சித்தர்கள்
‘வடக்கு நோக்கி வந்து வாழ்த்துவோம் யாம்’
என்றான் விமலன்
கணப் பொழுதினில்
எல்லோராலும் விலக்கத் தக்கவனாகி
விரும்பி யாசகம் துவங்கினான்.
‘என்னம்மா ஆயிற்று அவருக்கு’ என்று கேள்வியுடம்
மறைந்தனர் தாயும் ஒரு குழந்தையும்;
‘யேய், பிச்சைக்காரா, வழிவிடு’
வார்த்தையில் கனல் எழுப்பி புறம்
புகுந்தான் ஒருவன்;
‘கவலை அற்று இரு, கையில் பொருள் விழும்’
என்றான் முடவனொருவன்;
‘நல்லா தான இருக்க,
உழைக்க என்ன கேடு’என்று
உரை பகன்று பிரம்பு வீசினான் ஒருவன்
பின்னொரு பொழுதுகளில்
பிரபஞ்ச உயிர்களில் உறை காலங்களில்
வடு மாறாமல் இருந்தது.

சமூக ஊடகங்கள்

தீப்புகு விட்டில்

பாரம் கடந்த இரவொன்றை
இருவர் கடந்தனர்
அவனுக்கான பயணம் கிழக்கானது
அவளுக்கான பயணம் மேற்கானது.
வரும் காலங்களின் திட்டங்களோடு அவன்;
கடந்த காலங்களின் அசைவுகளோடு அவள்.
குளிர் இடத்தில் வளரும் போன்சாய்
மரங்களின் இலைகளை வருடியபடி அவன்.
மாற்றம் கொண்ட
குளிர் இடத்தில் வளரும் பாம்பூ
செடிகளின் இலைகளை வருடியபடி அவள்.
நாளொன்றின் முடிவில்
பாரம் கடந்த பகலொன்றை
இருவரும் கடந்தனர்.
பின்னொரு பொழுதுகளில்

இருள் தனித்து இருந்தது.

* தீப்புகு விட்டில் – நெருப்பில் புகுந்த விட்டில் பூச்சி  – திருவாசகம் / நீத்தல் விண்ணப்பம்
புகைப்படம் : Jothi Vel Moorthi 

சமூக ஊடகங்கள்

வல்வினை நோய்

தந்தையின் தோள் பற்றி இருக்கும்
பெண் குழந்தை ஒன்று
தலை திருப்பி
‘எனக்கு இப் பொம்மை வாங்கி தருவாயா’ என்கிறது.
காரணம் விளக்காமல்
மறுதலித்து
நடக்கத்துவங்குகிறான் தகப்பன்.
சில வினாடிகளுக்குப் பின்
தகப்பன் மனம் மாறலாம் என
பொம்மை விற்பவன் தலை திருப்புகிறான்.
தொலை தூரத்தில் குழந்தையும்
தலை திருப்புகிறது
நிறைவேறா நிமிடங்களுக்காக

காலம் உறைந்திருக்கிறது.

புகைப்படம் : R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்

2038 – உணவகங்கள்

              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
என்னா சார், சாப்பாட்டு டோக்கனோட ஜெலுசில் மருந்து தரீங்க.
எங்க ஒட்டல் சாப்பாடு சாப்பிட்டா வயறு சரியில்லாம போகும். அதுக்குத் தான் இந்த ஏற்பாடு. அப்புறம் எப்படி எங்க மெடிக்கல் ஷாப்பை நடத்துறது?
2.
என்னா சார், ரவா தோசையோட பூதக்கண்ணாடி  தரீங்க.
அத வச்சித்தான் நீங்க தோச எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும்,
3.
எதுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க எல்லாம் ஓட்டல் வாசல்ல உக்காந்து இருக்காங்க?
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஹாஸ்பிடலோட ரெப்ரசன்டேட்டிவ். குடுக்குற காசுக்கு தகுந்த மாதிரி சாப்பிட்ட ஒடனே ஆர்யபட்டா ஹாஸ்பிடல் மாதிரி  ஹாஸ்பிடல்ல சேர்ப்போம்.
4.
அடுத்த தடவைல இருந்து கார்த்திகேயன் ஒட்டலுக்கு சாப்பிட போகக்கூடாதுடா?
ஏண்டா?
இல்லடா, ஊசி பின் முனைய கரண்டியா மாத்தி வச்சிருக்காங்க, அதால சாம்பார் ஊத்ராங்க. இன்னும்         கொஞ்சம் வேணும்னா, கைய கழிவிட்டு Rs. 10312.21 க்கு பில் வாங்கிகிட்டு வரச்சொல்றாங்க.
5.
என்னா சார், சாப்பாட்ல உப்பு, ஒரப்பு ஒண்ணுமே இல்ல.

சன்யாசத்துக்கு முதல் நிலை எங்களது ஓட்டல் அப்படீன்னு போர்டு எழுதி போட்ருக்கோமே, அத பாக்கலயா நீங்க.

சமூக ஊடகங்கள்

மெருகேறும் மௌனம்

செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல.
பூக்களை சுமந்து செல்லும் மணம்
நகரும் வரை காத்திருக் வேண்டும்.
அவைகளை தழுவ வரும் தேனீக்கள்
செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.
புற உலகின் வளர்ச்சிக்கு சமமான
அக வேர்களையும்
வேரின் வேர்களையும் அவைகளின் முழு வடிவம்
காணும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறப்பு கொள் இலைகள்
வெளிர் பச்சை நிறம் மாறும் வரை
காத்திருக்க வேண்டும்.
நேற்று வண்ணம் சுமந்த பூக்கள்
இன்று வேரில் விழுந்து கிடக்கும்
காரணம் காண காத்திருக்க வேண்டும்.
அறிந்து கொண்ட பின்னே அறியமுடியும்
செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல என்று.

புகைப்படம் : Vinod V

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – மாக்கான்

 
 
இது சுமாராக 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக இருக்கலாம்.
மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் ஒருவ(ன்)ர் வருவார். எங்கிருந்து வருகிறார், எங்கு அவருக்கு வீடு, அவருடன் யார் யார் இருக்கிறார்கள என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
மேல் ஆடை தூய வெண்மையாக இருக்கும்.வேட்டி சற்றே வெளுத்த காவி. கைகளில் மிக சுத்தமான ஒரு பித்தளை பாத்திரம். (நிச்சயம் 5 கிலோ இருக்கும்.கிட்டத்தட்ட பாய்ஸ் படத்தில் செந்தில் வைத்திருக்கும் பாத்திரம் போல).
நாங்கள்( 3 பேர்) அவருக்கு வைத்த பெயர் ‘மாக்கான்’. அந்நாளில் அதன் அர்த்தம் தெரியாது.
எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். நிச்சயமாக 4 வீடு மட்டுமே. அதுவும் தினசரி அந்த 4 வீடுகளில் மட்டுமே வாங்குவார். அந்த 4 வீட்டிலும் மறுக்காமல் தினமும் உணவளிப்பார்கள்.
இரவில் மிக மெல்லியதாக ஒலிக்கும் வானொலியின் குரலை ஒத்திருக்கும் அவர் குரல்.’அம்மா சோறு போடுங்க‘  இதுவே அவரிடம் இருந்து வரும் அதிகப்படியான வார்த்தைகள்.
இரண்டு மூன்று அறைகள் இருக்கும் வீடுகளில் சில நண்பர்களுடன் ஒளிந்து கொள்வேன். யாருக்கும் கேட்காமல் எல்லோரும் சேர்ந்து கத்துவோம். ‘அம்மா சோறு போடுங்க‘. சத்தம் அதிகமானால் வீட்டு பெண்களிடம் இருந்து அடி விழும்.
சில நாட்களில் கைகளில் இருக்கும் குச்சியால் விரட்ட வருவார். பல நாள் எதுவும் செய்ய மாட்டார்.
 
மூன்று வருடங்கள் தொடர்ந்து அவரை பார்த்திருக்கிறேன்.
பிறகு
அவரைக் காணவில்லை.
இன்றைக்கும் யாராவது யாசித்தால் இந்த ஞாபகம் தவிர்க இயலாதாக இருக்கிறது. எவ்வித காரணும் இன்றி இன்று உங்கள் நினைவு.
நீங்கள் எவ்வடிவத்திலும் இருக்கலாம். என் செய்களுக்காக மானசீகமா மன்னிப்பு கோருகிறேன். 
ஏனெனில் நீங்கள் ‘ப்ரம்மம்’.
புகைப்படம் : R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்

ஆர்த்த பிறவி

பொம்மைகளுக்கு ஏது தனி வாழ்வு?
ஆட்டுவிப்பவன் இருக்கும் வரையில்
அனு தினமும் ஆடும் பொம்மைகள்.
கயிறு அறுபட்ட பொம்மைகள்
தனித்து வீதி அடையும்.
நாளின் பிற்பகுதியினில்
களிமண்ணில் இருந்து உயிர் பெறும்.
கலைகின்றன பொம்மைகளின் வேஷங்கள்;
கலைகின்றன பொம்மைகளின் கனவுகள்.
நிஜம் தேடும் நித்திய வாழ்வு;
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
மீண்டும்
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
பிறிதொரு நாளில்
அனைத்திற்கும் பிறகும்
நிலைபெற்றிருக்கும் பிரணவாகார ஒலி.
மௌன நாதத்தில் ஒடுங்கும் மனமும்.

புகைப்படம் :  Karthik Pasupathi
*ஆர்த்த பிறவி துயர் கெட – திருவாசகம்

சமூக ஊடகங்கள்

ஆதி ஆகுதி

தன் மீது அமரும்
வண்ணத்துப் பூச்சியின்
வலிஅறிந்து இருக்குமா அம்மலர்கள்

புகைப்படம் :  SLKumar

சமூக ஊடகங்கள்

மௌனக் கண்ணீர்

உயிர் வாழ்தலில்
மரணம் என்பது இயற்கையானது அல்ல
மரணம் என்பது நிலையானதும் அல்ல
என்று தானே அறிந்த தருணமாக இருக்கலாம்.
அழும் குழந்தையினை தாய் திகட்ட திகட்ட
திட்டுகையில் அறிந்திருக்கலாம்.
இருந்து உயிர எடுக்கறத்துக்கு போய் தொலைந்திருக்கலாம்
எனும் மனைவியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
ஒட்டு பீடி கேட்கிறத்துக்கு உசிர விட்டிருக்கலாம்
எனும் நண்பனின் வார்த்தைகளில் இருக்கலாம்.
பணம் இல்லா பயலுகளுக்கு
பணக்கார சாமி எதுக்குஎன்னும் வாசகங்களில் தொக்கி நிக்கலாம்
ஒரு வேலைய உருப்படியா செய்யத் தெரியல
எனும் மேலதிகாரியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
நினைவுகளையும் ஏக்கங்களையும்
நித்தமும் தொலைக்கும் தருணங்களாக இருக்கலாம்.
தொக்கி நிற்கும் இளைமையின் வடிங்கங்ளை வாங்கி
கண்ணீரில் கரைதலில் இருக்கலாம்,
யாசகத்துக்கு கையேந்தி
வெற்று கைகளுடன் திரும்புகையில் இருக்கலாம்.
மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு
மீண்டும் மனிதகளுடன் கூடிக் குலாவும் காலமாக இருந்திருக்கலாம்
இன்னும் என்ன இருக்கிறது
மரணம் அறிந்து மரணம் தாண்டி
நித்தமும் உயிர் வாழ்தலில் அதீதத்தின் ருசி

புகைப்படம் :  SL Kumar

சமூக ஊடகங்கள்

முதிர் ஞாபகங்கள்

தேகம் முழுவதும் பூச்சுக்கள் என்றாலும்
தன்னியல்பாய் வெளிப்பட்டு விடுகின்றன
பழைய வாசனைகள்.

புகைப்படம் :  Ravi Shankar

சமூக ஊடகங்கள்

சொல்லின் வழி மௌனம்

யாருமற்ற இரவு
உன்னையும் என்னையும்
இணைத்து வைக்கிறது.
கொஞ்சமாய் அகிலின் வாசம்
நம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.
உடைபடும் மௌனம் உடைக்கிறேன்.
மானஸ ரூபின்யை நமஹ,
..
மகாரப் பிரியை நமஹ
பிறிதொரு பொழுதுகளில்
எந்தப் பொருளிலும் நான் இல்லை
எல்லாப் பொருள்களிலும் நீ இருக்கிறாய்.
எந்த ஒலிகளையும் நான் கேட்கவில்லை
எல்லா ஒலிகளுக்கும்  நீ காரணமாக இருக்கிறாய்.
எந்த உருவங்களையும் நான் காணவில்லை
எல்லா உருவங்களுக்கும்  நீ சாட்சியாக இருக்கிறாய்.
மூலக் கனலொன்று கனவினை உடைக்கிறது.

புகைப்படம் : இணையம்

சமூக ஊடகங்கள்

சாதக விளைவு

இழப்பதற்கு என்று வந்து
எல்லாவற்றையும்
ஏற்றப்பின் வருகிறது
ஞானத்தின் அடையாளங்கள்.
புகைப்படம் : Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்

மௌனவாடை

மனிதர்கள் வீசிச் சென்ற
அத்தனை வார்த்தைகளையும்
உள்வாங்கி
அமைதியாக இருக்கிறது
கடற்கரை மணல்கள்.


புகைப்படம் :  Karthik Pasupathi

சமூக ஊடகங்கள்

கடந்து போதல்

வழிந்தோடும் நீரில்
விளையாடுகின்றன மீன்கள்.
இரை குறித்த இலக்கோடு
பறந்துவந்து கொத்திச் செல்கிறது
மீன்கொத்தி ஒன்று.
உயிர் வாழ்தலும், உணவு குறித்த
எண்ணங்களோடும்
வாகனத்தில் விரைந்து விரைகிறது

மற்றொரு உயிர்.

புகைப்படம் :  R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்

பிறவி வாடை

தன்னின் இருப்பை உறுதி செய்ய
இறகு ஒன்றினை
உதிர்த்துச் செல்கிறது
பறவை ஒன்று.
புகைப்படம் :  SL Kumar

சமூக ஊடகங்கள்

ஏமாப்பு

செந்நிற சூரியனை
எதிர் கொண்டு செல்லும்
தனிப்பறவை
எப்பொழுது தன் கூடு அடையும்?


*ஏமாப்பு – பாதுகாப்பு,  ஆதாரம்
புகைப்படம் : SL Kumar

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – மழைக்கால பக்கோடா

மயிலாடுதுறை பெரிய கடைத் தெருவின் வழியே நடக்கிறேன். நகரின் பிரதான் வீதிகளில ஒன்று அது.
லேசான மழைத் தூறல் தொடங்குகிறது.
கண் முன்னே டிபன் காளியாகுடியும், வானொலி பிரஸும் (மாத வானொலி நிகழ்ச்சிகள் புத்தக வடிவில்) நினைவில் ஆடுகின்றன.
அதிலிருந்து 10 அடி வலது புறத்தில் தள்ளூ வண்டியில் பக்கோடா கடை. பெரும்பாலும் உதிரி பக்கோடா மட்டுமே. அந்த நாளில் சமோசா போன்ற சமாச்சாரங்கள் கிடையாது. (இது என்ன ஊர் பற்றி எழுத ஆரம்பித்த உடன் அந்த நாள் என்றுதானே’ வருகிறது).அத் தெருவில் செல்பவர்கள் அந்த வாசனையை நுகர முடியாமல் செல்ல முடியாது மெல்லியதாய் மொறு மொறு என்று எண்ணை அதிகம் குடிக்காமல் இருக்கும்
டேய் தம்பி(மகனிடத்தில்) சாருக்கு என்ன வேணும்னு கேளு(நான் அப்போது 7வது)
‘எவ்வளவுங்க’.
‘என்ன புதுசா கேட்கிறீங்க. 50 பைசாதான்’. (அப்பா மாதம் தரும் 10ரூபாயில் இது நிச்சயம்.)
என்ன தம்பி பாத்துகிட்டே போர?
40 காசு தான் இருக்கு.
சரி சரி இங்க வா. இப்ப சாப்பிடு. நாளைக்கு மீதி 10 பைசா கொடு. (நாளைக்கு கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா, 10 பைசா கமிஷன் வாங்கிட வேண்டியது தான்)
மழைக்கும் அந்த சூடான பக்கோடாவும் ரொம்ம மேட்ச். பஹூ ருசி.(கடன் வாங்கிய வார்த்தைகள்லாசரா).
தம்பி இன்னொரு பொட்லம் வேணுமா
மத்யமாய் தலை ஆட்டுகிறேன்.
2 நிமிடம்இரு. சூடா போட்டுத் தரேன்.
கேட்கவா வேணும். வயறும் மனமும் நிறைந்த காலங்கள்.
இப்பொழுதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. நினைவு வாசனைகள் நீள்கின்றன.

புகைப்படம்: R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்

ஓய்வுறுதல்

தாயத்தில் தொடங்குகிறது
பரமபத வாழ்வு.
சில நேரம் ஏணிகள்
சில நேரம் பாம்புகள்
சில நேரம்  சலனங்கள் அற்று.
அடைந்தபின்
மறுபடியும் தாயம் ஒன்று.
விடியலுக்குப் பின்
ஒய்வு பெருகின்றன

தாயக் கட்டைகளும்.

புகைப்படம் : R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்