பாடல்
கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
பெரும்பற்றப் புலியூரான் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; கங்கையைத் தாங்குகின்ற நீண்ட சடையை உடையவன்; காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் விரும்பி அருளுபவன்; பொருள் இல்லாதவராகிய வறியவருக்கும், துன்பத்தினால் வருந்தி தன்னை தாங்குவார் எவரும் இலர் என வருந்துபவருக்கும் அருள் செய்பவன்; திருவாரூரிலும் விரும்பி தங்கியிருப்பவன்; தன்னைத் தவிர வேறு எவராலும் தனக்கு ஒப்பிட இயலாதவன்; வானவர்கள் எனப்படும் தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன்; இவ்வாறான அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
விளக்க உரை
- கல்தானை – கல்லாடை; அஃதாவது காவியுடை எனப் பொருள் கொள்வாரும் உளர்.