பாடல்
ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
ஒற்றியூர்ப் பெருமானே! உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பானவைகளை நினைவு வைத்துக் வைத்துக் கொண்டு, இந்த உடம்பினைப் பயனற்ற வகையில் பேணி பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகக்கக் கருதியது போல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதவனாய், பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, சடுதியில் தான் அழியப் போவதனை நினைவு கொள்ளாது வேறு பல நினைப்புகள் கொண்டது போல பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை காப்பாற்றி அடியேன் உய்யும் வண்ணம் காத்து அருளவேண்டும்.
விளக்க உரை
- ஓம்புதல் – காப்பாற்றுதல்; பாதுகாத்தல்; பேணுதல்; வளர்த்தல்; தீங்கு வாராமற் காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்
- கூடு – உடம்பு
- வாளா – வீணில்.
- காம்பு இலா மூழை .- பிடிப்பதற்கு உரிய காம்பு இல்லாத அகப்பை.