பாடல்
மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
மின்னலைப் போன்ற பற்களையுடையர்களும், எங்கும் பரவி இருப்பவர்களும் ஆகிய அசுரர்களின் புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்தவரும், காலங்களால் அளவிட முடியாதவரும், பழமையானவரும் சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில், அன்னத்தின் நடையை ஒத்த உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுகிறார்.
விளக்க உரை
- திருப்பூந்தராய் எனும் இத் தலத்து பதிகங்களில் முப்புரம் எரித்த நிகழ்வும், உமா தேவியை பாகமாக கொண்டவரும் எனும் அமைப்பில் அமைந்துள்ளன. திருஞான சம்பந்தர் கட்டமைப்பில் இருக்கும் 8வது பாடல் இராவணன் பற்றியது என்பதும், 9வது பாடல் திருமால் மற்றும் பிரம்மாவால் வணங்கப்பட்டவர் என்பதும், 10 வது பாடலில் சமண, பௌத்த மதங்கள் மூலமாக அறிய இயலாதவர் எனும் அமைப்பில் இருந்தும் மாறவில்லை. அப்பாடல்களில் உமை ஒரு பாகனாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
- சுளிதல் – கோபித்தல்.