பாடல்
காவே இலங்கும் பொன்னிநதிக்
கரையே இலங்கும் மயிலைநகர்
கங்கை முதலாம் புனிதநதி
கருதிப் பணியும் மூதூரே
பாவே இலங்குங் கவிவாணர்
பகரும் மறையே தாகமங்கள்
பயிலும் வீதிக் கமுகிளநீர்
பாயும் வாழை குருந்தேறும்
ஆவே இலங்கு வயல்சூழும்
அதிலே நானா விருஷமுடன்
அமுத ரசமாய்க் கனிபழுக்கும்
அருகிற் பறவை யினஞ்சூழும்
மாவே இலங்கும் அநுதினமும்
மருவுங் கயிலை நிகரான
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ வீற்றிருக்கும் இந்த மயிலாபுரி எனும் திருத்தலமானது, சோலைகள் நிறைந்து விளங்குவதும், பொன்னி நதி மற்றும் காவிரி எனப்படுவதும் ஆன நதிக்கரையில் உள்ளதும், கங்கை முதலான புண்ணிய நதிகள் தம் பாவங்களைப் போக்க துலா மாதத்தில் நீராடுவதும், பாக்களை பலவிதமாக இயற்றக் கூடிய கவிகளால் நல்வாழ்வு வாழ்பவனும், சொல்லி உணர்த்தும் படியான வேதங்களும், வேதாகமங்களும் ஓதியும் பயிற்றுவிக்கும் படியான வீதிகளை உடையதும், பாக்கு மரங்கள், இளநீரைத் தரும் தென்னை மரங்கள், நீர் வரத்து மிகையான ஆன வாழை குருத்துக்களால் நிரம்பியதும், அவற்றுடன் கூடிய வயல் சூழ்ந்ததும், அதில் பலவிதமான மரங்களும், அவற்றில் அமுதம் போன்ற கனிகளைக் கொண்டதும், அருகினில் பறவை இனங்கள் வாழ்வதும், திருமகளால் நித்தமும் ஒளிர்விடுதலும், கயிலைக்கு நிகரானதுமானதும் ஆகும்.