நெஞ்சுளே நினைவு தோன்றும் நினைவுகளே அறிவு தோன்றும் மிஞ்சிய அறிவு தானே மெய்பொரு ளாகி நிற்கும் பஞ்சுளே படும்பொ றிப்போல் பரந்துளே துரிய மாகும் அஞ்சிலே துரிய மாகி யதனுறே யாதியாமே
முதுமொழி ஞானம் – – அகத்தியர்
கருத்து – ஆதியானது அஞ்செழுத்தினில் பரவி இருத்தலையும், மெய்ஞான நிலையில் அதை அறிய முடியும் என்பதையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
ஆதியானது பஞ்சினில் இருக்கும் அனல் போல் பரவி அஞ்செழுத்தில் தன்மயமாய் நிற்கும் உயர்நிலையை ஆகிய துரிய நிலையில் நிற்கும்; கற்று அறிந்ததைக் கொண்டு நெஞ்சத்தில் ஆதி பற்றிய எண்ணங்கள் முதலில் தோன்றும்; அந்த எண்ணங்களைத் தொடர்ந்து மெய்யறிவு பற்றிய ஞானம் தோன்றும்; அவ்வாறான அந்த நிலையில் அறிவு எனும் பேரறிவு தானே மெய்ப் பொருளாகிவிடும்.
விளக்கஉரை
துரியம் – நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதியெருது, சுமத்தல்
பஞ்சுளே படும்பொ றிப்போல் – பஞ்சினில் தீ மறைந்திருக்கும், குவிஆடி மூலம் குவிக்கப்படும் போது அந்தப் பஞ்சானது பற்றிக் கொள்ளும். அத்தன்மை ஒத்து
கருத்து – திருக்கோகரணம் எனும் திருத்தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளைக் கூறும் பாடல்.
பதவுரை
அலைகளை உடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்கத் தக்கவரான சிவபெருமான் அழிக்கப்பட்டதான தலைமாலை அணிந்தவர்; திருச்சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்கள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்; அவர் வீற்றிருந்து அருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி இருக்கக் கூடியதும், பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் தலமான திருக்கோகரணம் எனும் திருத் தலமாகும்.
கருத்து – ஈசனின் குணங்களை சொல்லி அவரை வணங்குதலைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
திருமுடியில் முல்லை மாலையை சூடியவனே, திருமேனி முழுவதும் திருநீறு பூசியவனே, எல்லை அற்றதான எண்குணங்களை உடையவனே, செங்கோட்டு யாழ் மற்றும் சீறி யாழ்போன்ற ஏழு நரம்புகள் உடைய யாழ் வகையில் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே, மயிர் நீக்கப்பட்ட உருண்டை வடிவினதாகிய கபாலம் எனும் மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே, உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை முழுவதும் நீக்குபவனே, ஓதுதலை உடைய தில்லைச் சிற்றம்பலத்தை விரும்பி அடைந்து இருப்பவனே, அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன்.
விளக்கஉரை
படைத்தல் – உடையனாதல்
சில்லை – வட்டம்
சிரை – மழிப்பு
செல்வன் – இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி – சிவனுக்கு உரித்தானதும், சைவ ஆகமத்தில் கூறப்பட்ட முறைப்படியும் எண்வகைப்பட்ட குணங்கள் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பதால் எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ள கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – முல்லை
புகைப்படம் மற்றும் செய்தி – விக்கிப்பீடியா
முல்லை என்னும் சொல் காட்டில் மலரும் வனமுல்லையை குறிக்கும்
பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்
மருத்துவ குணங்கள் – மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு பெறுதல், தலைவலி நீக்குதல், கண் பார்வை கோளாறு நீக்குதல் போன்றவற்றை செய்யும்
பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்து றைப்பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்தி லாத சழக்க னேன்உனைச் சார்ந்திலேன் சிட்ட னேசிவ லோக னேசிறு நாயி னுங்கடை யாயவெங் கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – சிவன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடையன் ஆயினும் தனக்கு அருளிய பெருங்கருணையை வியந்து உரைத்தது.
பதவுரை
முழுவதும் கற்று அறிந்தவனே, சிவலோகத்தினை தன் உலகமாக உடையவனே, பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறையில் உறையும் பெருமானே! உன் உரைக்கப்படுகின்ற கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை சார்ந்து அடைந்திலேன்; அத்தகைய குற்றம் உடையவன் ஆகியவனும் சிறுமை உடைய நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளுதல் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணையை எவ்வாறு வியந்து உரைப்பது?
விளக்கஉரை
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலம் மண் சுமந்த படலம்
பிட்டு நேர்பட – உண்ட பிட்டுக்கு அளவுக்கு ஒப்ப
சழக்கன் – பொய்யன்
சிட்டன் – உயர்ந்தோன், பெரியோர், கல்வி நிரம்பிய சான்றோர்
கருத்து – சிவன் சூடியுள்ள மலர்களை குறிப்பிட்டு அவர் அனைத்து உயிர்களுக்கு துணையாக இருப்பதை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
விரும்பத்தக்கதான காட்டுப்பள்ளி எனும் தலத்தில் உறைபவரும், அடும்பு மலர்கள், கொன்றை மலர்கள், வன்னி மலர்கள், ஊமத்த மலர்கள் ஆகியவற்றால் புனையப்பட்ட மாலையை சடையில் சூடி இருப்பவரும், ஒளிவீசும் முத்து போன்ற சோதி வடிவாக இருப்பவனும், கடம்ப மலர் மாலையினை அணிந்த முருகனின் தந்தையும் ஆகிய பெருமானே இந்த உடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு உற்ற துணைவர் ஆவார்.
விளக்கஉரை
அடும்பு – அடம்பமலர்
துடும்பல் – நிறைந்திருத்தல்
தூமணிச்சோதி – தூயமணியினது ஒளியை உடையவன்
கடம்பன் – கடம்பமலர்மாலை சூடிய முருகன்
தாதை – தந்தை
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் மற்றும் செய்தி - விக்கிப்பீடியா
• வேறு பெயர் அடம்பு • படரும் கொடி வகை சார்ந்தது • கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும் தன்மை உடையது • குணங்கள் – மருத்துவ மூலிகை, வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த காலைநீர் எங்கே கரந்தனையால் – மாலைப் பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ இறைக்கூறாய் எங்கட்(கு) இது
பதினொன்றாம் திருமுறை – சிவபெருமான் திருமும்மணிக்கோவை – இளம்பெருமான் அடிகள்
கருத்து – சிவனின் வடிவ அழகை குறிப்பிட்டு ஊழிக்காலத்தில் தண்நீர் அனைத்தையும் எங்கு வைத்திருந்தாய் எனும் வியப்புடன் கேள்வி எழுப்பும் பாடல்.
பதவுரை
சாயுங்காலத்தில் தோன்றும் சந்திரனின் பிறைக்கீற்றையும், நெற்றிக் கண்ணையும், இடப்பாகத்தில் உமா தேவியையும் கொண்டுள்ளவரே! கடலின் உச்சியையும் ஆகாயத்தின் நடு இடத்தையும் இரண்டும் ஒன்றி நிற்கும் படியான ஊழிக்காலத்தில் நீரை எங்கே உள்ளடக்கி வைத்தாய்? இதனை அறியாது திகைக்கின்றோம். ஆகவே இதன் பொருட்டு எங்களுக்குப் பதில் சொல்வீராக.
கருத்து – உறக்கத்தில் உயிர் தன்னை அறியாமையினால் உடலில் இருந்து வேறுபட்டு மற்றொரு உயிர் என்பதை மறுதலிக்கும் பாடல்.
பதவுரை
அவயவங்கள் குறைபாடுகள் இல்லாமல் வாயுக்கள் ஒன்று கூடி உண்டான இந்த உடலில் அவற்றில் இருந்து வேறுபட்டு இருக்கும் மற்றொரு உயிர் என்று அறியத் தக்க உணர்வு தோன்றுமானால் உணர்ச்சி அற்ற நிலைக்கு செல்லக்கூடியதான இந்த உடலானது, பூதக்கூட்டத்தால் ஒன்றாக கூடி, குறைவின்றி கிடைக்கும் நிலை ஆகியதும் உறக்கத்திலும் அறிவு வெளிப்பட்டு உடலுக்கு உணர்வு உண்டாக வேண்டும் அல்லவா?
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதற்கு என் கடவேன் வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்தும் இரேன் தேனேயும் மலர் கொன்றை சிவனே எம் பெருமானே எம் மானே உன் அருள் பெறு நாள் என்று என்றே வருந்துவனே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – திருவருளுக்கு உரித்தான நாள் எது என்று வருந்துவதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
தேன் உடைய மலர்களை உடைய கொன்றைப் பூக்களை அணிந்த சிவபெருமானே! ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகைப்பட்டு வரும் கர்மங்களை முன்வைத்து பற்றித் தொடரும் பிறவித் துன்பத்துக்கு யான் அஞ்ச மாட்டேன்; இறப்புக்கு என்ன கட்டுப்பாடு உடையவன்; வானில் ஆளும் தேவர் உலகத்தினையும் அங்கு நிலை பெறுவதினையும் வேண்டமாட்டேன்; மண்ணுலகத்தினை ஆளும் ஆள விரும்பமாட்டேன்; எம் தந்தையைப் போன்றவனும் என் இறையும் ஆனவனே! உன்னுடைய திருவருள் பெற்று உனக்கு உரியவன் ஆகும் காலம் எக்காலம் என்று மட்டுமே வருந்துவேன்; ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.
விளக்கஉரை
எம்மான் – என் மகன், எம் ஆண்டவன், எம் தந்தை
என் கடவேன் – கடப்பாடு உடையேன் அல்லேன்; எனவே, இறப்பைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை
வானேயும் – ஏகாரம் தேற்றமும், உம்மை உயர்வு சிறப்புமாய் இரண்டு இடைச் சொற்கள் ஒன்றாய் வந்தன
அருள்பெறுநாள் – இந்த உடம்பினை நீக்கித் தன்னோடு உடனாகச் செய்தல்
கருத்து – ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் முப்பத்தி ஆறு தத்துவங்களை விலக்குதலே அதனை தெரியப்படுத்தும் எனும் கடுஞ் சுத்த சைவ நிலையை விளக்கும் பாடல்.
பதவுரை
ஆன்மவானது ஸ்தூல சூட்சம பர உடம்புகளாய் நிற்கும் முப்பத்தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிந்த நிலை உடைய பெரிய மாயை ஆகியவற்றால் சூழப்பட்டு இருக்கின்றது. அவ்வாறான ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கும் பொழுது ஆன்மா தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும் என்பதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.
பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே அழுது விழிகள் நீர்தளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன் பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும் உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
வள்ளலார் பாடல்கள் (வாதனைக் கழிவு)
கருத்து – துன்பம் கொண்ட பொழுதில் திருவருள் விரைந்து எய்தாமைக்குத் துணிவுற்று வேறு துணை அறியேன் என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
எல்லாமும் உடைய பெருமானே, இரவு முழுவதும் துன்பம் கொண்டுக் கிடந்த எனக்குப் பொழுது விடிந்தும் அத்துன்பம் நீங்காமையால் இனிச் சிறிது பொழுதும் பொறுக்க மாட்டேன் என்று கண்களில் கண்நீர் நிறைந்து தொழுதும் அழுதும் நின்னை ஓலமிட்டு கூவி அரற்றியும் சோர்கின்றேன்; நிலத்தை உழுது மெலிவுற்ற மாடு போன்ற யான், உன்னைத் தவிர துணையாக வேறு ஒருவரையும் காணேன்; அடியார்களின் துன்பத்தினை துடைக்கும் உன்னுடைய திருச்செவியில் என்னுடைய அழுகுரல் கேட்கவில்லையோ; நின் திருவருளை அளித்து அருள்க என்பது மறை பொருள்.
விளக்க உரை
கூவுதல் – பறவை கூவுதல், சத்தமிடுதல், யானை முதலியன பிளிறுதல், ஓலமிடுதல், அழைத்தல்
பொழுது விடிந்தது – இரவெல்லாம் உறக்கமின்றி வருந்தினமை
இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் – இரவு முழுதும் துன்பத்தால் வருந்தினமை
பழுது தவிர்க்கும் திருச் செவிக்குள் பட்டதிலையோ – துன்புற்று வருந்துவோர் துயர்களை சொல்லி முடிப்பதற்குள் அத்துயரங்களுக்கு ஏதுவாகிய குற்றத்தைப் போக்கும் அருளாளன் இன்னும் தன் துயரங்களை கேட்கவில்லை எனும் பொருள் பற்றியது
உழை – இடம், பக்கம், அண்மை, மான், கலைமான் (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ், உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி
(தன் உடலால்) வருத்தி ஒன்றைச் செய்
தும்பை – ஒரு வகை மூலிகைச்செடி, தும்பை வெண்மையின் அடையாளம்
கருத்து – ஈசனால் படைக்கப்பட்டதே பிரபஞ்சமும் இயக்கமும் என்று கூறி அதை அளிப்பது பஞ்சாட்சரமே என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
அண்ணல் என்று போற்றப்படும் கடவுளாகிய சிவனால் தோற்றுவிக்கப்பட்டதே இரகசியங்களை உள்ளடக்கியதும், மறை பொருள் ஆனதும் ஆன அருமறைகளும். காமிகம் முதல் வாதுளம் வரையிலான 28 ஆகமங்களும். இவைகள் அஞ்செழுத்தில் அடங்கும்; வேதாகமங்களும், ஆதி புராணங்கள் அனைத்தும் பரமேசுவரன் அருளிய அரிய பஞ்சாக்கரதில் அடங்கும்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமானதும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகின்றதுமான ஆனந்தத் தாண்டவமாகவும், முப்பத்து ஆறு தத்துவங்களைக் கடந்து மோனாந்தமாகவும், பரமுக்தியினை அளிப்பதும் பஞ்சாட்சரமே.
கருத்து – தன் வினைகளை நீக்கி அருள் புரியவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
உடையவனே! உன் அடியார்களில் சிலர் வினைநீக்கம் பெற்று உன்னிடத்தில் மிக்க அன்பு கொண்டு உன்னுடைய அருளைப் பெற்றார்கள்; உன்னுடைய அடியவனாகிய நானோ வீணாக வினை நீக்கம் கொள்ளாமல் துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று தொய்வடைந்து வயதுமுதிர்கின்றேன்; உன்னுடைய அருளை பெற்ற பின்னும் இளகாத மனமுடை அடியேனுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனது உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.
கருத்து – இராவணனுக்கு அருளியவனும், பஞ்ச பூதங்களைப் படைத்தவனும் ஆகிய ஈசன் உறையும் இடம் பனையூர் எனும் திருத்தலம் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
எளிதாக விளங்கக் கூடியதான முடியினை கொண்ட பத்து தலைகளை உடைய இராவணனுக்கு துன்பம் வருமாறு செய்து, பின் அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின் உள்ள உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்தவனும் ஆகிய சிவபெருமானனின் ஊர் திருப்பனையூர் எனும் திருத்தலமாகும்.
விளக்க உரை
ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனின் ஊர் பனையூர் என்கின்ற பொருள் கொண்டும் ‘மற்றும் பல’ என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையும் படைத்துக் கண்டவன் எனும் பொருளாகவும் விரியும். உலகினையும், உலக பொருள்களையும் படைத்தவன் சிவன் எனும் சைவ சித்தாந்த பொருளுடன் ஒப்பு நோக்கி உணர்க.
கருத்து – அந்தக்கரணங்கள் பற்றியும் அவற்றின் செயல்பற்றியும் உரைத்தது.
பதவுரை
அந்தக்கரணம் என்பதைப்பற்றி உரைக்கிறேன் கேள். அவைகளின் முறைகளையும் சொல்கிறேன் கேட்பாயாக. மனம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகியவற்றுடன் சிந்தை சேர்ந்து அந்தக்கரணம் ஆகும்; பற்றிய பொருளினை நிச்சயித்து , பல காலம் அது பற்றி அறிந்து அதைப் பற்றி சிந்திக்கும் உணர்வினை மனம் என்றும், பற்றிய பொருளினை புத்தி எனவும், அதை நிச்சயித்து வரையறுப்பதை அகங்காரம் எனவும், அதுபற்றி பலமுறை அபிமானித்து எழுவதை சித்தம் என்றும் அதுவே சிந்திக்கும் என்றும் அறிவாயாக.
விளக்க உரை
கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, உள்ளே இருக்கும் அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாததே அந்தக்கரணம்
மனம் ஒன்றைப்பற்றி நிற்கும்; ஆங்காரம் ஒருமைப்படுத்தும், புத்தி நிச்சயிக்கும், சங்கற்பம் வேறுபடுத்தி காட்டும்; இவைகள் கோர்வையாக நிகழ்வதால் அனைத்தும் ஒன்றெனவே தோன்றும்; ஒன்றின் செயலை மற்றொன்று செய்ய அறியாததால் அந்தக் கரணங்கள் உயிர் ஆகாமையும், மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்னும் நான்கையும் ஆன்மா எனும் அந்தக்கரணவாதிகளின் கொள்கையினை மறுத்து மறுதலித்து மெய்கண்டார் கூறுவது ஒப்பு நோக்கி அறிந்து கொள்க.
அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே
கருத்து – மனதால் பற்றிய மார்க்கண்டேயருக்கு அருளுய திறம் போலவே தனக்கும் அருள வேண்டும் என விளிம்பும் பாடல்.
பதவுரை
எங்கும் நிறைந்தும் , செம்மை உடைய வீரம் கொண்டும் நின்றும், நன்மையை தரும் நடனம் ஆடுகின்றவரும், கருணை கொண்டவரும் ஆனவரே, மனதினால் உன்னை நினைத்து பற்றிக் கொண்டவராகிய மார்க்கண்டேயருக்கு அஞ்சேல் என்று அருளினை வழங்கிய ஐயனே! உன்னையே தஞ்சம் என்று சரண் அடைந்தேன்.
விளக்கஉரை
சேவுகம் – ஊழியம், வீரம்
வாரி – மடை, நீர், நீர்நிலை, வெள்ளம், கடல், நீர்நிலை, நீர் நிலைகொண்டு இருக்கும் இடம், நூல், கலைமகள், வீணைவகை, இசைக்குழல், யானையகப்படுத்துமிடம், யானைக்கட்டுங்கயிறு, யானைக்கொட்டம், வாயில், கதவு, வழி, தடை, மதில், திற்சுற்று, பகுதி, வருவாய், விளைவு, தானியம், செல்வம்
கருத்து – தேவர்களுக்கு அருள் புரிந்த தன்மை உரைத்து தனக்கும் அருள் புரிய வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
செந்நிறமுடைய பவளமலை போன்ற ஒளியுடைய திருமேனியனே, என்னை நினக்கு அடிமையாக ஆக்கிக் கொண்டவனே! தேவர்கள் ஆகிய சிறு உயிர்களுக்கு மனம் இரங்கி அவர்கள் அமுது உண்ணுதல் பொருட்டு எதிர்படுவோரைக் கொல்லும் வேகத்தோடு எழுந்த அமுதத்தினை உண்டாய்; கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், புகழ்ந்து வாழ்த்தினாலும் எனது குற்றத்தின் பொருட்டே என்று எண்ணி மனம் வாடி துக்கப்படுவேன்; அவ்வாறு துக்கம் கொள்ளும் என்னை விட்டுவிடுவாயோ!
விளக்கஉரை
ஏசினும் – உன்னை ஏசினாலும் உன்னிடம் கொண்டிருந்த அன்பின் அடிப்படையிலும் சொல் அளவிலும் இன்றி மனதளவில் இல்லை என்பது உட்பொருள். ( ‘வெங்கரியின் உரிப்பிச்சன்’ என்பது முந்தைய பாடல்களில் பாடப்பெற்றமை காண்க)
வேசறு வேனை – நின் அடியார் கூட்டத்தோடு செல்லாமல் இந்த உடலுடன் தங்கிவிட்ட தவற்றை நினைத்து மனக் குழைந்து வருந்துதல் (வேசறுதல் – வருந்துதல் )
அமுதை கடைய முற்பட்ட தேவர்கள் நஞ்சை கண்டு தவித்து நின்னை சரண் அடைந்த பொழுது அவர்களுக்கு மனம் இரங்கி அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டாய், அவ்வாறான கருணைக் கடலான நீ என்னுடைய சிறு பழைய பிழைகளை நினைத்து வருந்துபவனாகிய என்னையும் ஏற்றுக் கொண்டு அருள் புரிதல் உன்னுடைய கடமை அன்றோ
கடையவன் – சங்காரத்தில் உலகம் அழியும் போதும் அழியாது இருப்பவன் (தோன்றாப் பெருமையனே என்பது வெளிப்படை)
கருத்து – இராவணனுக்கு வேண்டி நின்றப் பின் அருளிய திறத்தையும், வேண்டாத பொழுதும் தன்னிடத்தில் இரக்கம் கொண்டு அருளிய திறத்தையும் திருநாவுக்கரசர் உரைத்தப் பாடல்.
பதவுரை
அரக்கன் ஆன இராவணன் வாய் விட்டு அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றியவனும், எஞ்ஞான்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பவனும், திருவண்ணாமலை வடிவமாக இருப்பவனும், இரக்கம் கொண்டு என் உடல் பெற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலும் கூடுமே?(இல்லை என்பது மறை பொருள்)
இரக்கமாய் – இரங்கி அருளி( செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றது)
துரக்கன் – துரத்தியவன்
உரக்கன் – வலிமையுள்ளோன்
உடலுறு நோய் ஒன்னு ஆன போதிலும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் காரணமாக நோய்களை என்றார் என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சீதம் பிராப்தம் ஆகாமியம் ஆகிய மூவினைகளையும் அழித்து அதன் மூலம் உடல் நோயினை நீங்குபவன் என்பதான பொருளும் அறியப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
முன்னவன் எங்கள்பிரான் முதல் காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திரு நீல மிடற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறை நான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழ மண்ணிப் படிக்கரையே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – ஈசனின் எண் குணங்களில் சிலவற்றை சொல்லியும், அவன் சில தன்மைகளையும் கூறி அவன் உறையும் திருத் தலத்தைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முன் உள்ளவனும், தனக்கு முன்னால் உலகம் மற்றும் உலகப் பொருளும் படைக்கப்படவில்லை எனும் தன்மை கொண்டு எங்கள் இறைவன் ஆனவனும், சென்னி எனப்படுவதும் தலை எனப்படுவதும் ஆன உச்சியில் இருக்கும் எங்கள் தலைவன் ஆனவனும், அழகிய நீல கண்டத்தை உடைய எங்கள் இறைவன் ஆனவனும், என்றும் நிலை பெற்ற எங்கள் தலைவனும், நான்கு மறைகளையும் கல்லால மர நிழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தவனும் ஆன எங்கள் இறைவன் இறைவன் எழுந்தருளியிருப்பது ‘திருப்பழமண்ணிப்படிக்கரை’ என்னும் திருத்தலமே.
கருத்து – உலகமாகவும், உலகப் பொருள்கள்கள் அனைத்திலும் உறையும் ஈசன் ப்ரமன் தலை கொய்து மண்டையோட்டில் யாசித்து உண்ணுவதை பழிப்பது போல் சிறப்பித்துக் கூறியது.
பதவுரை
கயல் மீன் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருத்தலம் ஆனதும், பொலிவு உடையதும் ஆன திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதனாகிய இறைவன் உலகினுக்கும், உயிருக்கும் விரும்பியவற்றை அளிக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும், அனைத்து உயிர்களிடத்தும் அவைகளோடு கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை கொண்ட போதிலும் வானில் இருந்து உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய பொய்யானதான ஐந்தாவது சிரத்தை அயலார்கள் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அந்த மண்டை ஓட்டில் பிச்சையேற்று உண்ணும் விருப்பம் கொண்டது என்ன காரணத்தால் என்று மெய்யடியார்களே எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக.
விளக்கஉரை
இறைவனுமாய் நிறைசெய்கையை – உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் நின்று, அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை பற்றியது.