திருக்குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் – திரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கருத்து – மங்களாம்பிகையையின் அருட் சிறப்புகளைச் சொல்லி பிள்ளைத்தமிழில் அழைக்கும் பாடல்.
பதவுரை
இப்பிரபஞ்சம் முழுவதிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாமல் தான் மட்டுமே தனக்கு நிகராக இருப்பவளாகிய தாயே வருக; தன்னால் செய்யப்பட்ட வினைக்களை உரைக்க கண்டால் அதை விலக்கி அவர்களுக்கு அருள்பவளே வருக; உன்னைபற்றிய எண்ணம் கொண்டு உன்னை நினைக்க முற்பட்ட உடன் அவர்களுக்கு திருவடியாக பத முக்தியை அளிப்பவளே வருக; மலர்களால் சூழப்பட்ட காட்டினைப் போன்ற கருங்கூந்தலை உடையவளே வருக; அடி, நுனி என இல்லாமல் எல்லா இடங்களிலும் இனிமையாக இருக்கும் மெய்ஞான கரும்பு போன்றவளே வருக; உண்ணுவதற்கு இனிமையாக இருக்கும் அருள் நிறைந்த கனி போன்றவளே வருக; பருகத் தெவிட்டாமல் இருக்கும் தேன் போன்றவளே வருக; வானம் வரையில் வடிவம் கொண்டிருக்கும் திருவடிவம் கொண்டவளே வருக; பெருமை உடைய வேதங்களின் உட்பொருளாக இருக்கும் செல்வியே வருக; எங்கள் குல தெய்வம் ஆனவளே வருக; ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு அழைத்துச் செல்லும் நறுமணம் உடைய மானே வருக; இமையாதவர்கள் ஆகிய தேவர்களின் துன்பத்தை நீக்குபவளே வருக; வேதங்களும் மறைகளும் ஒலிக்கும் குடந்தையில் வீற்றிருப்பவளே வருக வருக என்று மங்களாம்பிகையை பிள்ளைத்தமிழில் அழைக்கிறார்.
கருத்து – ஆக்ஞையில் சோதி வடிவான அன்னையைக் கண்டவர்களை காலன் அணுகான் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
பிராணன் தனது வாகனமாக மூச்சுடன் வா (உள்மூச்சு- காற்றுத் தத்துவம்) என்றும் சி(வெளி மூச்சு – அக்னி தத்துவம்) என்றும் கூடி குண்டலினி அக்னியை மேலே எழுப்புகிறது. அவ்வாறு எழுந்த அக்னி வ என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் லலாட சக்கரத்திலிருந்து அமிர்தத்துடன் விசுத்தி சக்கரத்தில் சேகரிக்கப்படுகிறது. (சில நூல்கள் அனாகத சக்கரமான இதயம் அதைக் குறிக்கின்றது என்றும் கூறுகின்றன). இவ்வாறு பெறப்படும் அமிர்தம் நமது விசுத்தியிலும் இதயத்திலும் நின்று நம்மை காலத்தைக் கடக்க வைக்கிறது. இவ்வாறு எழும் அக்கியானது குருபதம் எனப்படுவதாகிய ஆக்ஞையில் உணர்வு செல்லும்போது ஞானம் ஏற்படுகிறது. அதனால் ஒருவர் தெளிவுடன் குருபதம் எனப்படும் ஆக்ஞையில் நிற்க வேண்டும். தினமும், மனம் வாக்கு காயங்களால் தூயவராகவும் மனத்தை வாசி எனும் சிவ யோகத்தால் நிறுத்தியவராகவும் இருப்பவர் மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களில் கூறிய பொருள்களை சேர்த்து உருக்கி எடுத்து பார்க்கும்போது ஆக்ஞையில் அடியவர்கள் விரும்பதை அவர்கள் விரும்புகின்ற அளவில் கொடுப்பவளானவளும், தங்கமேனி கொண்ட தாய் என அழைக்கப்படுபவளும் ஆன சக்தி தென்படுகிறாள். அவ்வாறு தேவியின் தரிசனத்தைப் பெற்றால் உயிர்களை கொல்ல சினம் கொண்டு வரும் காலன் ஓடிப்போவான்.
விளக்கஉரை
வாசி/சிவயோகம் என்பது சித்தர்களின் பிராணாயாம முறை என்பதால் குரு முகமாக செய்முறைகளை அறிக.
கருத்து – சிவனிடத்தில் அன்பு செய்து உய்யும் நெறியைக் கூறும் பாடல்.
பதவுரை
பெரிய நிலவுலகத்தவர்களும், வானுலகத்தில் வாழும் தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகிய பதினெண் கணங்களும், எங்கள் இறைவனாகிய ஈசனையே `பரம்பொருள்` என எண்ணத்தால் உடன்பட்டும் மனத்தால் நினைத்தும் அவன் திருவடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். இதனை நன்கு மனதால் சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்யுங்கள்.
விளக்கஉரை
சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் & யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் என்று வேறு சில இடங்களில் பதினெண் கணங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் வேண்டுதல்.
பதவுரை
சிலம்பு அணிந்த வீரக் கழல்களின் ஒலிகள் எட்டு திசைகளிலும் இருப்பவர்களின் செவிகளில் படும்படியாக ஒலிக்க, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்திய சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் படமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடிகளை வைத்திருக்காமல், நடனம் செய்து, அடியார்கள் அரகர என்றும் மனம் உருகி ஜெய ஜெய என்றும் போற்ற, பார்வதியுடன் இணைந்து ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பாகராக இருப்பவரான சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவை ஆன லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் நாயகனே, ஆராவாரத்துடன் போர் செய்து வெற்றி கொண்டவனாகிய இராவணின் ஆணவம் அழியுமாறு செய்தவனும் கயிலைமலையில் வீற்றிருப்பவனும் ஆன சிவனுடன் இணைந்து வீற்றிருப்பவனே! தவ நெறிப் பயனாய் பெறப்படுவதும் இருளும் ஒளியும் இல்லாத அழகிய நிலம் எனப்படுவதும் ஒளி வீசும் ஜோதி போன்றதுமான இடமானதும் மூலாதாரம் எனப்படும் ஆகி இடத்தில் இருந்து பிராணன் எனப்படும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி செய்து சுழுமுனை வழியாக மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே புறத்தில் கூடுதலை நிகழ்த்துதல் போல் அகத்தில் சிவ ஜோதியுடம் கூடி, அவ்வாறு விளங்கும் திருக்கோலத்தில் ஆணவம், மாயை,கண்மம் ஆகிய மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அதனால் அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அதனால் இவ்வுடல் நிலைபட்டது எனக் கருதும் படியாகப் பொருந்தி, இவன் முருகனுக்கு இளையவன் என்று என்னை விரிந்து கூறும்படியான பெரும் பேற்றை அருள்வாயாக.
விளக்கஉரை
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப் போரொடு – மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘அமளிப் போரொ டடியவர் கயிலைக் கான‘ எனும் வரிகளே பொருத்தமாக இருக்கும் என்பதாலும், வள்ளி நாச்சியார் இச்சா சக்தி, முருகப் பெருமான் ஞான மூர்த்தி என்பதாலும் பொருள் விலக்கப்பட்டுளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் கொள்ளுதல்
சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி – சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி” என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மூலாதாரம் பற்றி குறிப்பிட்டு இருப்பதாலும், தவ நெறியால் பெறப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதாலும், தவநெறியின் பயன் சிவசக்தி ரூபம் காணல் என்பதாலும் இப்பொருள் விலக்கப்பட்டுள்ளது.
பணாமுடி – பாம்பின் படமுடி; பணாமுடி தாக்க – ‘அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து‘ எனும் கந்தர் அலங்கார பாடலுடன் ஒப்பு நோக்கி அறிந்து உய்க.
தேவ ரிளையவ னெனவித் தார – முன்னர் கூறப்பட்ட மும்முனை நாடிகள் கொண்டும் ,
கருத்து – திருவடி காட்டி அருளிய திறத்தையும், பிரிய மாட்டேன் என்று வாக்கு உரைத்ததையும் கூறி அருள் வேண்டி நிற்பதையும் கூறும் பாடல்.
பதவுரை
பெருமானே! சங்கரனே! உனக்கு அடிமையாக இருப்பதற்கு கூட உரிய தகுதி உடையவன் அல்லேன்; இருப்பினும் உன்னை விட்டு நீங்கி ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்; நாயினேன் ஆகிய யான் அதன் தன்மை இன்னதென்றும் அறியமாட்டேன்; மா கருணையினால் பெரிய ஒப்பற்றவனாகிய நீ உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டி உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ?
விளக்கஉரை
பொழுது – மிகச்சிறிய நொடிப்பொழுது
பிரியேன் என்று அருளிய அருளும் பொய்யோ – தாம் வேண்டியும் வாராது பிரிந்து நிற்றல் குறித்தது
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் (மெய்கண்ட சாத்திரம் – சைவ சித்தாந்தம் )
கருத்து – ஈசன் உலகுயிர்த் தொகுதியாகி, அவைகளே தானுமாகி அதில் இருந்து விலகியும் இருக்கும் முத்திறத்தினை விளக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் எனும் மூலகாரணத்தில் அனைத்தையும் ஒடுங்க செய்தும், உலக அழிவு செய்தும், தானே அனைத்தும் சாட்சியாக இருந்து முழு முதற் பொருளாய் இருப்பவனும், படைப்பு ஆகிய சிருஷ்டி கரணத்தில் சக்தியுடன் கூடி இரண்டாகியும், தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையு உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலா ஆற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை ஆகிய எண் குணத்துடன் கூடியும், சிருஷ்டியில் குறிப்பிடப்பட்ட உலக உயிர் தொகுதியுடன் பிரிக்க இயலாதவாறு கூடியும், உலக உயிர்களின் தன்மை தனக்கு எவ்வகையிலும் தன்னைச் சேராதவாறு தனித்து இருப்பவனும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், அதனை அறிவிக்க உதவும்கால் உயிர்களோடு ஒன்றாகியும், உடனாகி இருக்கும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், தன் உண்மையினை எக்காலத்தும் தனக்குரிய முறைமையாகக் ண்டிருக்கின்றான் அம்முதல்வன்; அஃது அவனது இயல்பு என்பதனை மாணவனே கண்டுணர்வாயாக.
விளக்கஉரை
சத்தியிடமாய் நின்று இருக்கும் காலத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் சூரியன், திங்கள் ஆன்மா எனும் எண்பேருருவினாகி நிற்கின்றான் எனும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. சிவனின் குணங்களில் எண் குணம் என்பது பிரதானமானதால் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
ஈசனுக்கும் உலக உயிர்த் தொகுதியுடன் கூடிய தொடர்பு பேதம், அபேதம் பேதா பேதம் என்னும் மூன்று வகைப்படும். ‘முதலொன்றாய், மாறாத வெண்வகையாய்‘ எனும் வரிகளால் அபேத நிலையினையும், ‘ஈங்கிரண்டாய்‘ எனும் வரிகளால் பேத நிலையினையும் ‘மற்றிவற்றின் வேறாய், உடனா யிருக்கு முருவுடைமை‘ எனும் வரிகளால் பேதா பேத நிலையும் அறியப்படும்
கருத்து – தாயுமானவர் மனதுக்கு உபதேசம் செய்தல் பற்றிய பாடல்.
பதவுரை
மனமே! சிவப் பரம்பொருள் இங்கு உள்ளது, அங்கு உள்ளது என்று எண்ணாமலும், வீணாக பிறப்பில் கிடந்து உழலுவது போன்ற செயல்களைச் செய்யாமலும், காட்சிப் பொருள்களை மனதால் மாறுபாடு கொண்டு இரண்டு என்று எண்ணாமல் அனைத்திலும் ஒன்றாகி நிற்பது சிவப் பரம்பொருளே என்று எண்ணுவாய் என்றால் யான் உனக்கு அடைக்கலமாவேன்; அதனால் உனக்கு சுகம் உண்டாகும் என மனதுக்கு உபதேசம் செய்கிறார் தாயுமானவர்.
விளக்கஉரை
அருணகிரிநாதரின் சீர்பாத வகுப்பில் கூறப்பட்ட
.. உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ரநுபூதி ..
எனும் பாடலுடன்
விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம் இருள் ஒளி என்ற ‘துவத்துவ’ உணர்ச்சிகளை விலக்கி பார்க்கும் இடமெல்லாம் பரம் பொருளை அன்றி வேறு ஒன்றையும் இல்லா நிர்விகல்ப சமாதி நிலையில் கொண்டுவிடும் எனும் விளக்கத்தோடும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே கறைபழுத்த துறைத்திங் தமிழின் ஒழுகுகறுஞ் சுவையே அகங்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கும் உடுக்கும் புவனம் கடந்துன்ற ஒருவன் திருவுள் ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம்வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்
கருத்து – சிறுமி மீனாளைத் தளர் நடையிட்டு வருமாறு அழைப்பதைப்போல அமைந்தப் பாடல்.
பதவுரை
மனிதனின் கற்பனையால் புனையப்பட்டு உருவாக்கப்படும் தெய்வீக அழகு கொண்ட தமிழ்ப் பாக்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகவும், தேன் நிரம்பித் ததும்பும் இனிமைத் தமிழினைக் கொண்டு மாலையாக தொடுக்கப்படது போன்றதும் ஆனவளே, மும்மலங்களில் ஒன்றானதும் முதன்மையானது ஆன ‘தான்’ என்ற அகந்தைக் கிழங்கைக் கிள்ளி எறிபவர்களின் உள்ளத்தில் ஒளிரும் மெய்ஞான விளக்காக திகழ்பவளே, பனி மலைச் சிகரமாகிய இமயமலையில் விளையாடும் இளமையானதும் மென்மையானதும் ஆன பெண் யானைப் போன்றளே, புவனமெல்லாம் கடந்து நின்று அதை தன்னுடைய ஆடையாகவும் அணியும் பரம்பொருள் தன் உள்ளத்தில் ‘அழகு தோன்றுமாறு எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியம்’ போன்றவளே, வண்டுகள் தேன் குடித்துத் துயிலும் குழல் காட்டினை ஏந்தும் வஞ்சிக் கொடியே, மலயத்துவச பாண்டியன் பெற்ற பெரு வாழ்வே வருக வருக என்று மீனாட்சியம்மையை குமரகுருபரர் அழைக்கிறார்.
விளக்கஉரை
மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் இடம் பெறுகிறது இப் பாடல்.
இந் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது, குறிப்பிட்ட இப்பாடலின் தருணத்தில், அன்னை மீனாட்சியே சின்னஞ் சிறுமியாக வந்து, மன்னரின் மடி மீது அமர்ந்து இதைத் தலையாட்டிக் கேட்டாள் என்ற பழங்கதை ஒன்று உண்டு.
பிள்ளைத்தமிழ் – தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாsசாரியர்கள், புலவர் பெருமக்கள், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தமிழின் ஒழுகுகறுஞ்சுவையே – மொழியின் லயமாக அவனைத் தரிசித்தல்
*கருத்து – மெய்யறிவு நிலை கண்டவர்களை நமன் அணுகான் எனும் பொருள் பற்றிய பாடல்.*
பதவுரை
அடிவயிறு எனப்படுவதாகியதும், கணபதியின் இருப்பிடமானதும் ஆன மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி எனும் சக்தியானது கொல்லனின் உலை போன்ற வெப்பமுடன் அங்கே சிறிய நாகமாக சுருண்ட நிலையில் அமைந்துள்ளது. அந்த சக்தியை எழுப்பி அதை மற்ற ஐந்து நிலைகளான மணிபூரகம், சுவாதிஷ்டானம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா வழியாக சகஸ்ராரத்திற்குக் கொண்டு சேர்ப்பதையே பிறப்பின் நோக்கமாகக் குறிப்பிடுவர். இதையே சித்தர்கள் பரிபாஷையில் சாகாக் கல்வி, வாசி யோகம், தனையறிதல் எனப் பல்வேறு வகைகளில் உணர்த்துவர். அவ்வாறு குண்டலினி சக்தியை எழுப்பி அதை சகஸ்ராரத்தில் நிலை நிறுத்த வல்லவர்களுக்கு மரணம் என்பது கிடையாது. இதைப் பூடகமாக இவர்களை மாய்ப்பதற்காக அணுகும் எமன் அவர்களின் மெய்யறிவு நிலை கண்டு அந்த முயற்சியை கைவிட்டு அவ்விடத்தினின்று அகலுவான் என்று அழகணி சித்தர் விளக்குகிறார்.
விளக்கஉரை
சித்தர்கள் பரிபாஷையில் வயிறு என்பதை அடிவயிறு என்றும் கருதலாம். இதையொட்டி மூலாதாரம் என பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
விளக்க உரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.
கருத்து – மூம்மலங்களுக்கு உட்பட்டவனாகிய இராவணன் தவறு இழைத்த போதும், அது குறிந்து வருத்தம் கொண்டு வணங்கி நின்றதால் பல பேறுகள் அடைந்தான். அது போல் மறுமை அடையாமல் இருக்க திருச்சோற்றுத்துறை ஈசனை வணங்குங்கள் எனும் பாடல்.
பதவுரை
மறுமை எனும் பிறப்பு ஏற்படாத வகையில் அதனை அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் நிலையற்ற பொருள்களால் ஆன உலக விஷயங்களில் மனத்தை நிலையாக வைக்காமல், பல மெய் ஞான நூல்களையும் கற்றதால் அக்காரணம் பற்றி செருக்கு கொண்ட அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை துன்புறுத்திப் பின் அவனுக்கு அருள் செய்த திருச்சோற்றுத் துறையனை, பலகாலமும் பிரானின் பெருமைகளை இடையறாது துதித்துப் பேசுங்கள்.
தெவ்விடத் தாய திசை பிழைத்தாலும் சின அரவம் கவ்விடத்தான் வெய்யகான் நடந்தாலும் கருதரிய எவ்விடத்தேனும் இருந்தாலும் என்றன் இடரையெல்லாம் தவ்விட நீ வருவாய் காழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – இடர்களை எல்லாம் தீர்க்க நீ வர வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! செய்யத் தகாத காரியங்களைச் செய்து தென் திசை சென்று (மரணித்து) பின் பிழைத்து வந்தாலும், அரவம் போல் சினம் கொண்டு அதனால் துன்பம் கொண்டு நடந்தாலும், எண்ணுவதற்கு அரியதான எந்த இடமாக இருப்பினும் மற்றும் இது போன்ற இடர்கள் எல்லாம் தீர்க்க நீ வருவாய்.
கருத்து – ஐவகைத் துயரங்களையும் பொறுப்பதற்கு இன்றியமையாத அருட்சோதியை நல்கி அருளுமாறு வேண்டிய பாடல்.
பதவுரை
மாயைக்கு உட்பட்டும், மும்மலங்களுக்கு உட்பட்டும் துன்ப மிகுதியால் திகைத்தேன்; அதனால் செய்வகை அறியாமல் மயங்கியபோது நீ சிவபரம்பொருளகவும், குருமுதல்வனாகவும் திருமேனிக் கொண்டு எழுந்தருளி மன மயக்கம் தீர்த்துத் தெளிவு செய்து ‘ இனி மருள வேண்டா’ என்று எனக்குத் தகுந்தவாறு கூறித் தெளிவித்தருளினாய்; இது பொய்யுரை அன்று; உன்னுடைய திருவுள்ளம் ஏற்கனவே நன்கு அறிந்ததாகும்; அவ்வாறு தெளிவு பெற்ற யான் இனி துன்பங்கள் எத்தனை வந்து தாக்கினும் நின் அழகிய திருவடியே துணையென்ற உள்ளத்தோடு உயிர் தாங்கி இருப்பேன்; துன்பங்களால் மனச்சோர்வு எய்திய பொழுதும் நம் பெருமானாகிய பரம்பொருள் முன்போல் நம்பால் வந்தருளித் தன் திருவருள் ஞானத்தை வழங்கி அருளுவான் என்ற எண்ணத்தால் உன்னுடைய திருவரவை எதிர்பார்த்துக் கொண்டு இப்பொழுதும் இருந்து வருகின்றேன்; ஆயினும், கண், காது, மூக்கு, வாய், மெய் முதலிய ஐவகைக் கருவிகளால் என் உயிர்க்கு எய்தும் துன்பங்களை இனிப் பொறுக்க மாட்டாதவன் ஆகின்றேன்; ஆகவே இப்பொழுதே மிகப் பெரியது எண்ணக்கூடியதான திருவருள் ஞான ஒளியை எனக்கு அளித்தருள்வாயாக.
விளக்கஉரை
இச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என ஆன்மாவை வருத்தும் ஐவகைத் துன்பங்கள் என்றும் பொருள் உரைப்பார்கள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
*கருத்து – கைலாயத்தில் உறையும் ஈசன் திருவையாறு தலத்திலும் உறைவன் என்பதை குறித்து பாடிய பாடல்.*
பதவுரை
எல்லைகள் அற்றதானதும், மலைச்சிகரம் ஆனதும் ஆன கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதையுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம் மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு பாயும் புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு எனும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
விரை – மணம்
வரை – கோடு, எல்லை, வரம்பு, வரைப்பு, கரை (வரம்பு), அளவு, திருமணம், இரேகை, எழுத்து, மலை, மலைச்சிகரம்.
கருத்து – உலகியல் பற்று ஏற்படாமல் காத்து அருள்வாயாக என்று விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
எம்பெருமானே! உடையவனே! பெரும் கடல் போன்றதும், அருள் அமுதம் போன்றவனும் ஆகியவனே! அவ்வாறான அமுதக் கடலின் உன் அடியார்கள் எல்லாம் புகுந்து இருந்து திளைத்திருக்க மெய் பற்றிய அறிவு இல்லாமையால் இருள் தருவதான அறியாமை நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத்தேன்; இவ்வாறான மயக்கம் பொருந்திய மனத்தை உடைய ஒரு பித்தன் வருகிறான் என்று இந்த உவுலகில் என்னைப் பார்ப்பவர்கள் அஞ்சாத வண்ணம் நான் வீடுபேறடையும் பொருட்டு உண்மையான அன்பினைப் பெறவேண்டும்.
விளக்கஉரை
உலகியல் தொடர்பு அறுந்த பின்னரே மெய்யறிவு விளங்கப் பெறும். மெய்யறிவு பெற்றப்பின் உலகியல் பற்று கொண்டோரை பித்தன் என்று கூறுவார்கள். அவ்வாறான நிலை ஏற்படாமல் காத்து அருள்வாயாக என்று விண்ணப்பிக்கிறார்
ஓடும் இருக்கும் கிடக்கும் உடனெழுந்து ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும் பாடும் புறத்தெழும் பல்லுயிர் ஆனந்தம் கூடும் பொழுதிற் குறிப்பிவை தானன்றே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கிடைக்கப்பெற்றவர்களின் சில செயல்களைக் கூறும் பாடல்.
பதவுரை
திருவருளால் பல உயிர்களுக்கும் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கைகூடிய காலத்தில் அந்த இன்பமானது அருள் கதிராய்ப் புறத்தில் தோன்றும். தான் எனும் நிலை அற்ற நல்ல தவம் உடையோருக்கு அந்நிலையில் அந்த உயிர்களின் செய்கைகளை அளவிட்டுக் கூறுதல் இயலாது. பக்குவப்பட்ட அந்த உயிர் ஓடும்; இருக்கும்; கிடக்கும்; உடனே எழுந்து ஆடும்; விரும்பி பறக்கவும் செய்யும்; ஓர் இடத்தில் இருந்துகொண்டே எல்லையின்றிப் பரந்த உலகங்களின் நிகழ்வுகளை எல்லாம் ஒன்றும் விடுபடாமல் உரைக்கக் கூடிய ஆற்றல் பெருகும் பண்ணொடு பொருந்தப் பாடும்; இவ்வாறான சில குறிப்புகளால் அந்த உண்மை புலனாகும்.
கருத்து – அடியவர்களை இறைவனின் இயல்புகளை உரைக்கக் கூறும் பாடல்.
பதவுரை
இறைவரை உமக்கு ஏற்றவாறு போகம் வேண்டுவார் ஆயின் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் ஆயின் யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் ஆயின் வேகவடிவிலும் விருப்பம் கொண்டு நினைந்து வழிபாடு செய்து துதிக்கின்றவர்களே, நமக்குத் தலைவராகிய தலைவரும், மூத்தோனும், கடவுளும் ஆன அடிகள் கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற திருநீற்றுப்பச்சை ஆன உருத்திரச்சடை அல்லது கரந்தைப்பூமாலையா? தொழுவில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலை எனும் மண்ணை ஓட்டில் பிச்சையேற்றுக் கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ? சொல்லுங்கள்.
விளக்கஉரை
நேரிழை – பெண்
இட்டி – ஈட்டி, எசமான், பரிசு, விருப்பம், வழிபாடு.
கரந்தை – திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை, ஒரு மரவகை, நீர்ச்சேம்பு, குரு, ,கரந்தைப்பூமாலை
நினைந் தேத்துவீர் – அவ்வாறு வழிபட்டதால் அவர் இயல்பெல்லாம் அறிவீர்; ஆதலின் வினவுகின்றேன்; சொல்லுங்கள்
கருத்து – திரிபுரை அன்பர்களையே அடைதல் பற்றி கூறப்பட்டப் பாடல்.
பதவுரை
எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய பெண்வடிவனாமான மனோன்மனி எனும் திரிபுரை, மனதில் ஒன்றியவளாகவும், திசைகளை ஆடையாகக் கொண்டவளாகவும், அழியாத மங்கலத்தை உடையவளாயும் இருக்கிறாள். அருளும் தன்மைக்கு ஏற்றவாறு பல வகைப்பட்ட தேவியின் வடிவங்களாக என் உள்ளத்தில் பொருந்தியும், உலகம் எல்லாம் வணங்கும்படியாக அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் யான் வேறு, அவள் வேறு எனும் வேறுபாடு இல்லாமல் நிற்க இசைந்து, வந்து நின்றாள்.
விளக்கஉரை
நேரிழை – பெண்
நீள்கலை – நீண்ட ஆடைகள்.(திசைகளை ஆடையாகக் கொண்டவள் எனவும் கொள்ளலாம்.
‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்‘ என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்“ எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டுக என சில இடங்களில் விரிவுரை எழுதப்பட்டு இருக்கிறது. அவள் அடியவரை அடைந்து பின் ஒன்றி நின்றாள் எனும் பொருள் படுமாறு வருகிறது. அன்னை அனைத்து உயிர்களின் வடிவமாக இருப்பதாலும் மாறுதல் கொண்ட எண்ணங்களை மாற்றி நிற்பதாலும் ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்’ எனும் பொருளில் இங்கு விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருணையாங் காமாட்சி யிருந்த வீடு கடிதான நாற்பத்து மூன்று கோணம் வருணையாம் ரிஷி தேவர் சித்தர் யோகி மகத்தான பஞ்சகர்த்தா ளக்கினி யாதித்தன் அருணையாம் அகஸ்தியருங் கணேசன் கந்தன் ஆத்தாளைப் பூசித்து அதிகார மானார் கருணையாம் பூசித்துச் சமாதியிலேநின்று தாயளிக்கச் சகல சித்துந் தரித்திட்டேனே
போகர் – கருக்கிடை நிகண்டு 500
கருத்து – ஸ்ரீ சக்ர பூசை செய்தவர்களையும், அவர்கள் வழியில் தானும் பூசை செய்ததையும் போகர் குறிப்பிட்டு உரை செய்த பாடல்.
பதவுரை
தாயாகியவளும், கருணையுள்ளம் கொண்டவளும் ஆன காமாட்சி இருக்கும் வீடு அடைவதற்கு அரிதான நாற்பத்து முக்கோண சக்கரம் ஆகும். எக்காலத்திலும் அன்பை பொழிவதாக இருப்பவர்களானவர்களும், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆகிய ரிஷிகளும், தேவர்களும், சித்தத்தை அடக்கியவர்கள் ஆன சித்தர்களும், பிரபஞ்சத்தின் ஒருமை நிலையை தன்னுள் உணர்ந்தவர் ஆன யோகிகளும், பஞ்ச கர்த்தாக்கள் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோர்களும், அக்னி, ஆதித்யன், அருணை எனும் அருணாச்சலத்திற்கு நிகரான அகஸ்தியர், கணேசன், கந்தன் போன்றவர்கள் இந்த சக்கரத்தை பூசித்தே சகல அதிகாரமும் பெற்றார்கள். கருணை வடிவம் ஆகிய அவளை அவள் கருணையினால் நானும் மேலே குறிப்பிட்டவர்கள் பூசை செய்த முறையில் பூசித்து, சமாதியில் நின்று சகல சித்தையும் அறிந்து கொண்டேன்.
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – அநித்திய பொருள்களின் தன்மை அறிந்து விலக்கி மெய் அடிமை ஆக்க வேண்டி விண்ணப்பித்தல்.
பதவுரை
தேவர்கள் முதல் மும்மூர்த்தி ஆகிய அனைவருக்கும் ஆதியாய முதல் தெய்வமே, பெரு மதிப்பிற்கு உடைய என் தலைவனே! உலகம் மற்றும் அதில் காணப்படுவதும் நிலையற்ற தன்மை உடையதும், அநித்தியம் ஆனதும் ஆன அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்கி விடுவிக்குமாறு செய்து உன் அகத்தடிமை ஆகி உனக்கு மெய்யடிமையைச் செய்ய, அருள் புரிவாயாக. அதன் பொருட்டு இந்த உலகிலே மேம்பட்டது ஆன சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்துள்ளேன்.
விளக்கஉரை
புறம் அல்லா அடிமை – அகத்தடிமை
மெய்யடிமை – பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து, செய்யும் செயல்கள் எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும் இறைபணியாகிய அடிமைத் திறம்
ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்
கருத்து – சிவனின் அட்ட வீர செயல்கள் சிலவற்றை குறிப்பிட்டும், அவன் வடிவம் குறித்து குறிப்பிட்டும், அவன் குணங்களைக் குறிப்பிட்டு கூறி தன்னை அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டி விளிம்பும் பாடல்.
பதவுரை
அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவனே, மேம்பட்ட தேவர்களின் தலைவனே, பால் பேதங்களை குறிப்பதாகிய குணம் குறிகள் ஆகியவை இல்லாதவர்களாகவும், மேம்பட்டவர்களும் ஆன ஞானியர்களின் குணம் கொண்டவனே, தன்னால் வகுக்கப்பட்ட காலத்தில் ஒன்றி இருந்து அதை தன் வயத்தில் அடக்கி இருப்பவனே, கங்கையின் தலைவனே, எங்களுக்குத் தலைவனாக அமைந்து இருந்து கூற்றுவனுக்குக் காலனாக இருப்பவனே, மன்மதனை அழித்தவனே, விடத்தையே அமுதம் போல உண்டவனே, கூத்தாடும் இடமாகிய பொன்மயமான அம்பலத்தில் அதையே கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே, உலக வடிவமாகவும் இருந்து அதை தன்னுள் அடக்கியவனாகவும் இருந்து உலகத்தில் அதுவாகவும் கலந்து இருப்பவனே, தன்னுணர்வும் மெய்யறிவும் இல்லாத அடியேன் ஆகிய யான் பெரிய தவத்தை உடையவனும் தாயைப் போன்றவனும் ஆகிய உனக்குத் தொண்டனாகி, தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.