
பாடல்
பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே யென்பீ ராகில்
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – ஐயாறு திருத்தலத்தை நினைத்து வாழ்ந்தால் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நிலையாமை உடைய பொருள்களை பொய்த் தன்மை நீங்காதவாறு சிறப்பித்துப் பேசியும், பொழுது புலர எழுந்தது துன்பம் கொள்ளாமல் தொழில் செய்கிறோம் என்று எண்ணி பொருளைத் தேடி இன்பம் உடைய மனத்தவர்களாக கருதி வாழ்பவர்களே! விஷத்தை அமுதம் போல் கொண்டவர் ஆன நீலகண்டரும், நீண்ட செஞ்சடை உடையவரும், நெற்றிக் கண் உடையவரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் தலமான ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும்.
விளக்க உரை
- இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்து ஓதி அருளியது.
- கையாறு – செயலறுகை, துன்பம்
- கரணம் – செய்கை, இயக்கம், தொழில்
- நெய்யாடுதல் – எண்ணெய் பூசி மங்கலநீராடல், நெய்பூசுதல்
- அல்லல் – பிறவித்துன்பம்
- நெய்யாறா ஆடிய – ‘நெய்யை ஆறுபோல் ஆடியவரும்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.