அமுதமொழி – விகாரி – ஆனி – 17 (2019)


பாடல்

திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
     சிவவழி யுடனுற் றேக …… பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
     திரிபுர மெரியத் தீயி …… னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
    யிருள்கதி ரிலிபொற் பூமி …… தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
    ரிளையவ னெனவித் தார …… மருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
    பழமறை பணியச் சூல …… மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
     பரியினை மலர்விட் டாடி …… அடியார்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
     மருள்செயு முமையிற் பாக …… ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
     டடியவர் கயிலைக் கான …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் வேண்டுதல்.

பதவுரை

சிலம்பு அணிந்த வீரக் கழல்களின்  ஒலிகள் எட்டு திசைகளிலும் இருப்பவர்களின் செவிகளில் படும்படியாக ஒலிக்க,  பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற,  கைகளில் ஏந்திய சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் படமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடிகளை வைத்திருக்காமல், நடனம் செய்து, அடியார்கள் அரகர என்றும் மனம் உருகி ஜெய ஜெய என்றும் போற்ற, பார்வதியுடன் இணைந்து ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பாகராக இருப்பவரான  சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவை ஆன லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் நாயகனே, ஆராவாரத்துடன் போர் செய்து வெற்றி கொண்டவனாகிய இராவணின் ஆணவம் அழியுமாறு செய்தவனும் கயிலைமலையில் வீற்றிருப்பவனும் ஆன சிவனுடன்  இணைந்து வீற்றிருப்பவனே!  தவ நெறிப் பயனாய் பெறப்படுவதும் இருளும் ஒளியும் இல்லாத அழகிய நிலம் எனப்படுவதும் ஒளி வீசும் ஜோதி போன்றதுமான இடமானதும்  மூலாதாரம் எனப்படும் ஆகி இடத்தில் இருந்து பிராணன் எனப்படும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி செய்து சுழுமுனை வழியாக மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே புறத்தில் கூடுதலை நிகழ்த்துதல் போல் அகத்தில் சிவ ஜோதியுடம் கூடி, அவ்வாறு விளங்கும் திருக்கோலத்தில் ஆணவம், மாயை,கண்மம் ஆகிய மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அதனால் அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு,  நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து,  அதனால் இவ்வுடல் நிலைபட்டது எனக் கருதும் படியாகப் பொருந்தி, இவன் முருகனுக்கு இளையவன் என்று என்னை விரிந்து கூறும்படியான பெரும் பேற்றை அருள்வாயாக.

விளக்க உரை

 • அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப் போரொடு – மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘அமளிப் போரொ டடியவர் கயிலைக் கான‘ எனும் வரிகளே பொருத்தமாக இருக்கும் என்பதாலும், வள்ளி நாச்சியார் இச்சா சக்தி, முருகப் பெருமான் ஞான மூர்த்தி என்பதாலும் பொருள் விலக்கப்பட்டுளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் கொள்ளுதல்
 • சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி – சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி” என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மூலாதாரம் பற்றி குறிப்பிட்டு இருப்பதாலும், தவ நெறியால் பெறப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதாலும், தவநெறியின் பயன் சிவசக்தி ரூபம் காணல் என்பதாலும் இப்பொருள் விலக்கப்பட்டுள்ளது.
 • பணாமுடி – பாம்பின் படமுடி; பணாமுடி தாக்க – ‘அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து‘ எனும் கந்தர் அலங்கார பாடலுடன் ஒப்பு நோக்கி அறிந்து உய்க.
 • தேவ ரிளையவ னெனவித் தார – முன்னர் கூறப்பட்ட மும்முனை நாடிகள் கொண்டும் ,

  உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
  கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
  விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
  அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

  எனும் சிவவாக்கியர் பாடல் கொண்டும், இளமையாக இருப்பதன் இரகசியம் கண்டு கொள்க.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *