
பாடல்
கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே
ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – கருவூர்த் தேவர்
கருத்து – அன்பர்களின் அக அனுபவங்களையும் பெரும்பற்றப் புலியூரின் பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
மேலான அன்பினால் கண்களில் பனித்துளிர்ப்பது போல் கண்ணீர் அரும்ப, கைகள் குவித்து, ‘எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்’ என்று கதறி, எல்லா எலும்புகளும் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடியேனையும் இணைத்துக் கொள்ளும் எனும்படியான ஈசனுடைய திருக்கோயில் எதுவெனில் தேன் உண்டு தெளிந்த வண்டுகள் பலப்பல பண்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருப்பதானதும் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடையதும் ஆன பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே ஆகும்.
விளக்க உரை
- மொட்டித்து – குவித்து
- களைகணே – பற்றுக் கோடானவனே
- சூழ் மொழுப்பு – பரவிய மேலிடம்