அமுதமொழி – விகாரி – ஆனி – 18 (2019)


பாடல்

பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவனிடத்தில் அன்பு செய்து உய்யும்  நெறியைக் கூறும் பாடல்.

பதவுரை

பெரிய நிலவுலகத்தவர்களும், வானுலகத்தில் வாழும் தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகிய பதினெண் கணங்களும்,  எங்கள் இறைவனாகிய ஈசனையே `பரம்பொருள்` என எண்ணத்தால் உடன்பட்டும் மனத்தால் நினைத்தும் அவன் திருவடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். இதனை  நன்கு மனதால் சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்யுங்கள்.

விளக்க உரை

  • சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் & யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் என்று வேறு சில இடங்களில் பதினெண் கணங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *