இறந்தவரது எலும்புகளையும், எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் எதுவெனில், சிறந்தவர்கள் என்று சொல்லப்படுவதும் மேம்பட்டதும், உயர்வானதும் ஆன மனைவி மற்றும் மக்கள்,சுற்றத்தார்கள், செல்வம் ஆகியவற்றை துறந்தவர்களாகிய ஞானியர்கள் சேரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலம் ஆகும்.
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல் காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
விளக்கஉரை
ஒவுதல் – ஒழிதல்
புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! மேகம் போன்ற கூந்தலில் சந்திரனைத் தரித்தவளே! அழகிய மயில் போன்றவளே! இனிய குயில் போன்றவளே! அதிக வினைகொண்டு வாழ்தல் இன்னும் எத்தனை நாள்? காலத்தால் மிகக் குறிகியதாக கருதப்படும் அற்ப வாழ்வு இன்னும் எத்தனை நாள்? நீண்ட காலமாக பகை கொண்டு அதன் காரணமாக அழியும் வகையில் வாழ்ந்திருத்தல் இன்னும் எத்தனை நாள்? விதிக்கப்பட்ட விதியின்படி இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? பிறப்பிற்கு காரணமான இரு வினையில் பட்டு அதனை அனுபவித்து, வினைகளை அழித்து விடுபட இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? மாறாத பற்று, அன்பு, நம்பிக்கை மற்றும் உண்மை கொண்டு பின் அது விலக அதனால் விளையும் பகைமை கொண்டு கொடுமை செய்து கொண்டு இன்னும் எத்தனைக் காலம் வாழவேண்டுமோ? பொதிகை மலையில் உறைபவனாகிய அகத்தியர், திருமால், அயன், காமன், அஷ்டதிக் பாலகர்கள் ஆகிய திசைப் பாலர்கள் போன்றவர்கள் போற்றும் உனது இரு சரணக் கமலங்களில் ஒன்றாக இருந்து மகிழ்ந்து இருப்பது எந்த நாளோ?
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம் வைத்த விளக்கும் எரியுதடி அச்சுள்ள விளக்கு வாலையடி அவி யாம லெரியுது வாலைப்பெண்ணே!
கொங்கணர்
பதவுரை
வாலைப்பெண்ணே! உச்சி ஆகிய துரியத்திற்கு நேராக உகாரம் ஆனதும், மனோன்மணித் தாயார் வாசம் செய்யும் அண்ணாக்குக்கு மேலே இருப்பதுமான உண்ணாக்கு மேலே சதாசிவமும், சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமானதும், சப்தம் பிறந்த இடமானதுமான இடத்தில் தினமும் வைத்த விளக்கானது சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும். அந்த வலிமை வாய்ந்த விளக்கானது அணைந்து விடாமல் எப்பொழுதும் சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும்.
விளக்கஉரை
இவரின் பெரும்பாலான பாடல்கள் சாக்தம் சார்ந்த வாலைப் பெண்ணை முன்வைத்து எழுதப்பட்டவை என்பதால் பாடல்களில் வாலைப்பெண்ணே என்பது இடம்பெறும்.
அச்சு – அடையாளம்; உயிரெழுத்து; வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு; வலிமை; அச்சம்; துன்பம்; நெசவாளர் நூல்களை அழுத்தப் பயன்படுத்தும் கருவி.
அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித் தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்கு அளிப்பன் கண்கட்கு இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்
சிவஞான சித்தியார்
பதவுரை
மல மாயைகளுக்கு உட்பட்ட உயிர்கள் அதை விலக்க முதன்மையாக இருப்பது அருள் எனப்படும் இறைவனின் சத்தியாகும். இவ்வாறாக பெறப்படும் சக்தி சிவம் என்பததில் இருந்து தனியே அறியப்படுவது இல்லை, அந்த சக்தி விடுத்து சிவம் என்பதும் தனித்து இல்லை. அத்தகைய சிவமானது, கண்ணில் தோன்றும் இருளை சூரியன் தன் ஒளியால் ஓட்டுதல் போல, உயிர்களின் அறிவை மறைத்து, மயக்கம் தரும் மல மாயையை தனது அருளாலே நீக்கி மண்ணில் தன் அருளை அளித்து, முத்தியைக் கொடுப்பான்.
அம்மையாய், அப்பனாய், உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய். தம்மால் படைக்கப்பட்ட உலகத்தின் தோற்றத் திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய் என்பன அத்திருவுருவத்தின் பெருமைகளைப் பற்றி கூறும்.
பித்தம் கொண்டவன் எச்சுவையும் அறிய மாட்டான். அதை மாற்றி இனிமை சுவை உடைய பொருள்களை காட்டி அருளினாய்; ஞான வடிவில் இருந்து என் ஊன் உருக்கினாய்; எலும்புகளை உருக்குமாறு செய்தாய்; அவ்வாறு பேரருள் செய்த நீ என் வினைபற்றி நிற்கும் ஐம்புலன்களில் இருந்தும் காக்க மாட்டாயா எனும் பொருள் பற்றியது.
ஐம்புலன்களை யானைகளுக்கு உவமையாக கூறியமையால் யானைகள் ஐந்து என்று கொள்க.
மாலை நேர செவ்வந்தி வானம் போன்ற நிறம் உடையவராகவும், பச்சை நிறமான தேவியை தழுவிக் கொண்டவராகவும், அவ்வாறே தேவியாலும் பரஸ்பரம் தழவிக் கொள்ளப்பட்டவராகவும், பாசம், பூமாலை இவற்றை தாங்கிய திருக்கரத்துடன் அபய முத்திரை கொண்டிருப்பவருமான கணபதியை வணங்குகிறேன்.
பிரம்மச்சாரி விரதமே பெரும் தவம் என்பதால் பரமபதம் கிடைக்கும். விஷயங்களை நினைத்தல், பார்த்தல், பேசுதல், தொடுதல் மற்றும் அனுபவித்தல் ஆகிய இவற்றினால் பிரம்மச்சாரிய விரதம் கெடாமல் காக்க வேண்டும். இது பிரம்மச்சாரிகளுக்கு எப்பொழுதும், கிரகஸ்தர்களுக்கு காலத்தை நிர்ணயித்தும் விதிக்கப்படுகிறது. கிரகஸ்தன் தனது ஜன்ம நட்சத்திரத்திலும், புண்ணிய காலங்களிலும், தேவ பூஜை செய்யும் காலங்களிலும், தர்ம காரிய காலங்களிலும் இவ் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தன் மனைவி விடுத்து வேறு மாதரிடம் செல்லாமல் இருப்பவன் பிரம்மச்சாரி விரதத்தின் பலனை அடைவான். இவ்விரதத்தால் பரிசுத்தமும், ஆயுளும் வாய்க்கப் பெறும்.
உமை
தர்மத்தை விரும்புவர்கள் தீர்த்த யாத்திரையை விரதமாகச் சொல்கிறார்கள். உலகில் உள்ள தீர்த்தங்களைப் பற்றி எனக்கு சொல்லக் கடவீர்.
சிவன்
உலகில் உள்ள மகா நதிகள் அனைத்தும் தீர்த்தங்கள் ஆகும். தீர்த்த யாத்திரையை என்பது ஆத்ம சுத்திக்காவும், தேக சுத்திக்காவும் பிரம்மாவால் ஏற்படுத்தப்பட்டது. அவற்றுள் கிழ் திசை நோக்கி செல்லும் தீர்த்தங்கள் சிறந்தவைகள். நதிகள் சங்கமம் ஆகும் இடமும், கடலோடு கலக்கும் இடமும் மிகச் சிறந்தவைகள். கடலோடு கலக்கும் இடங்களில் உள்ள மரங்கள் தேவர்களாலும், ரிஷிகளாலும், மகான்களாலும் அடையப் பெற்று நீராடி இருப்பதால் அவைகளும் சிறந்த தீர்த்தமாகின்றன. மகரிஷிகளால் அடைப் பெற்றதால் அருவிகளும், கிணறு மற்றும் குளங்களும் தீர்த்தங்கள் என்று அறிவாயாக. இனி இதில் ஸ்தானம் செய்யும் முறையை உரைக்கிறேன். பிறந்தது முதல் அதிக நியமங்களுடன் வாழ்ந்து, தீர்தங்களுக்குச் சென்று மூன்று வேளை அல்லது ஒரு வேளை உபவாசம் இருக்க வேண்டும். புண்ணிய மாதத்திலும், விரத காலத்திலும், பௌர்ணமியிலும் வெளியில் ஸ்தானம் செய்து சுத்தனாகிப் பின் பக்தியோடு விதிப்படி தீர்த்தத்தில் மூன்று முறை ஸ்தானம் செய்ய வேண்டும். கரையில் இருக்கும் ப்ராமணர்களுக்கு தட்சணை கொடுத்து, திருக்கோயிலுக்குச் சென்று பூஜை செய்து பின் திரும்பிச் செல்லவேண்டும். இது அனைவருக்கும் விதிக்கப்பட்டது. அருகில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவதைக் காட்டிலும் தொலைவில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவது நல்லது. தீர்த்தஸ்தானமானது தவத்திற்கும், பாவம் போக்குவதற்கும் மன சுத்தத்திற்கும் உரியது என்பதால் ஜன்ம சுத்தனாய் இருப்பவன் புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதன் பலன்களை மனிதன் மறுமையில் அடைவான்.
உமை
உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?
மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே! உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் என விரியும். அவ்வாறு உயிரானது கண்டத்தில் இருந்தில் செயல்படும் நிலை ஆகிய கனவினை காணும் போது கனவில் நின்று ‘இது கனவு’ என்று அறிய இயலாது. அகம் விழிப்புற்ற நிலையாகிய நனவில் அந்த கனவில் கண்ட காட்சிகள் காண இயலாது. முனைவன் அருள் பெறும் போது காரிய அவத்தைகள் நீங்கப் பெற்று, காரண அவத்தையின் கேவல அவத்தை, சகல அவத்தை ஆகியவைகளும் நீங்கப் பெற்று, பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை ஆகிய சுத்த அவத்தையை காணுமாறு செய்வாயாக.
விளக்கஉரை
‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ எனும் சிவப்பிரகாசரின் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
உயிரானது ‘அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருள்’ எனபதும், உயிர் தனித்து இயங்கினாலும், இறைவன் தனிக் கருணையினால் அன்றி அவத்தைகள் விலகி அது நிலை பேறு கிட்டாது என்பதும் விளங்கும்.
வளமான சோலைகளையுடைய திருப்புங்கூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, மிருகண்ட மகரிஷிக்கும், அவருடைய மனைவி ஆகிய மருதவதிக்கும் மகனாக பிறந்த அந்தணர் குலத்தை சேர்ந்த மார்கண்டேய முனிவர் தன் முடிவு அறிந்து உன்னை அடைக் கலமாக அடைய, அவரைக் காத்தல் பொருட்டு, அவர் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்தவனே, உனக்கு அடியேனாகிய யான், உனது அந்த ஆற்றலை அறிந்து கொண்டு என்னையும் எம தூதர்கள் வந்து துன்புறுத்துவார்கள் எனில், என்தந்தையாகிய நீ, ‘இவன் என் மற்றொரு அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்’ என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்.
விளக்கஉரை
மார்க்கண்டேய முனிவருக்கு அருள் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து பாடியது.
மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
செல்வத்தையே தேடுவதன் பொருட்டு, மனம் செருக்குற்று, நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணம் அற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியை உறைவிடமாக கொண்டவன் திருவடியினை சேர்வீராக.
விளக்கஉரை
மாடு – செல்வம்
நும்முளே – உங்களுக்குள்
கூடு – உடல்
செல்வம் தேடுதலில் மகிழ்ந்து எனவும், பொய் பேசுவதால் உள்ளுக்குள் மகிழ்வு கொண்டு எனவும் கொள்ளலாம்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அழகிய மயில் போன்றவளே! புதுமையானது இந்த மயக்கம்; எனக்கு ஏற்பட்ட இந்த மயக்க அனுபவித்தினை யாரிடம் பகிர்வேன்? எடுத்து சுமக்க இயலாததும், தாங்கிக் கொள்ள இயலாததும் ஆன வினைச் சுமையை என் தலை மேல் ஏற்றி, அந்த வினை பற்றி தொடர்வதால் இந்த மண்ணில் பிறக்க இடமும் இன்றி, விதிக்கப்பட்ட நெறி முறைகளுடன் வாகாய் நடக்க வழியும் இன்றி, புவியாகிய இந்தக் காட்டில் வன வேடர்கள் மயக்கத்தினைத் தரும் கொடிய வேலினைக் ஏந்தி, செந்நாய்கள் என்னை தடுக்கவும், கொடுமை உடைய புலி என் மீது பாய இருக்கின்ற நிலையில் மயக்கம் தந்து இதிலே என்னை அலையவிட்டு எங்கே ஒளிந்தாய் ஈஸ்வரியே, இந்த நிலை எனக்கு ஏற்படலாமா? எனக்கு நீ உரைத்த தேன் போன்ற இனிய சொல் பொய்யாகிவிட்டதா?
விளக்கஉரை
உழுவை – புலி, கடல்மீன் வகை, நன்னீர் மீன் வகை; தும்பிலி என்ற கடல்மீன், பெருமை
வைதோரைக் கூடவை யாதே: – இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே
கடுவெளிச் சித்தர்
பதவுரை
உனக்கு தீங்கு செய்வதன் பொருட்டு இகழ்ந்து பேசியவருக்கும் கூட தீங்கு எண்ணாதே; இந்த வையகம் முழூவதும் வஞ்சனைகளால் சுழ்ந்து கெடுதலால் நிரம்பினாலும் அகத்துள் ஒரு பொய்யையும் நுழையவிடாதே; (இம்மைக்கும் மறுமைக்கும் ) உயர்வு தராத வினைகளை செய்யாதே; பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே.
விளக்கஉரை
கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தவை. இதனை